எம் . ஜெயராமசர்மா (மெல்பேண் , அவுஸ்திரேலியா) கவிதைகள்!

Sunday, 01 October 2017 17:06 - எம் . ஜெயராமசர்மா (மெல்பேண் , அவுஸ்திரேலியா) - கவிதை
Print

1. நீர் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

பாருனிலே நாம்வாழ நீரெமக்கு முக்கியமே
வேரினுக்கு நீரின்றேல் விருட்சமெலாம் வந்திடுமா
ஊருக்கு ஒருகுளத்தில் நீர்நிரம்பி இருந்துவிடின்
ஊரெல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடுமே
நீரின்றி பலமக்கள் நீழ்புவியில் இருக்கின்றார்
ஆர்நீரைக் கொடுத்தாலும் அருந்திவிடத் துடிக்கின்றார்
கார்கொண்ட மேகங்கள் கனமழையக் கொட்டிவிடின்
நீரின்றி இருப்பார்கள் நிம்மதியாய் இருப்பரன்றோ !

விஞ்ஞானம் வளர்ந்ததனால் விந்தைபல விளைகிறது
நல்ஞானம் எனமக்கள் நாளுமே போற்றுகிறார்
அவ்ஞான வளர்ச்சியினால் அளவற்ற தொழிற்சாலை
ஆண்டுதோறும் பெருகிநின்று அவலத்தைத் தருகிறது
தொழிற்சாலைக் கழிவனைத்தும் தூயநீரில் கலக்கிறது
அதையருந்தும் மக்களெலாம் ஆபத்தில் சிக்குகிறார்
ஆபத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர் வராவிட்டால்
அருந்துகின்ற நீராலே அவலம்தான் பெருக்கெடுக்கும் !

கிராமப் புறங்களிலே கிணற்றுநீர் இருக்கிறது
மழைபொய்த்து விட்டுவிட்டால் அந்நீரும் வற்றிவிடும்
நகரப்புறங்களிலே நன்னீரே என்று சொல்லி
தகரத்தில் போத்தல்களில் தண்ணீரைக் காணுகிறோம்
விதம்விதமாய் போத்தல்களில் விற்கின்ற நீரனைத்தும்
வெளிக்கிட்டு வருமிடத்தை யாருமே பார்ப்பதில்லை
போத்தல்களில் வரும்நீரை  பொறுப்பின்றி அடைப்பதனால்
குடிக்கின்றார் அனைவருமே கிடக்கின்றார் கட்டிலிலே !

உயிர்வாழ வேண்டுமெனில் உடல்கேட்கும் நீரினையே
நீரின்றி வாழ்ந்திடுதல் நினைத்திடவே முடியாது
உட்செல்லும் நீராலே உடல்நிறைவு பெறுகிறது
உயிரோட்டம் தருவதற்கு நீரெமக்கு தேவையன்றோ
ஆற்றுநீர் ஊற்றுநீர் அனைத்தையும் குடித்தாலும்
அசுத்தமில்லா நீரினையே அருந்திடுதல் முறையாகும்
உள்போகும் நீரினைநாம் உயிரெனவே நினைத்திடுவோம்
உவப்புடனே நீரருந்தி உலகத்தில் வாழ்ந்திடுவோம் !

ஆபிரிக்க நாடுகளில் அருந்துதற்கு நீரில்லை
அவர்நீரை எடுப்பதற்கு அலைந்தபடி இருக்கின்றார்
ஆட்சிதனில் இருப்பார்கள் அதைப்பற்றி அலட்டாமல்
ஆடிப்பாடி விடுதிகளில் அருந்துகிறார் குடிவகையை
குடிக்கின்ற நீருக்குக் குடிகள்படும் அவலமதை
குடித்தாட்டம் போடுகிறார் கொஞ்சமேனும் நினையாமல்
அடிக்கின்ற கூத்ததனை ஆண்டவனே நீபாரு
அல்லல்படும் மக்களுக்கு அருந்திவிட நீரைக்கொடு !


2. கழல்பணிந்து நிற்போமே !

நலமான உடல்வேண்டும்
நல்லகல்வி வரவேண்டும்
வளமான செல்வமெங்கள்
வாழ்வினுக்கு வேண்டுமம்மா
விலைபோகா மனம்வேண்டும்
வீண்பழிகள் அறவேண்டும்
நிலையான வாழ்வமைய
நின்னருளை வேண்டுகின்றோம் !

செல்வத்தைச் சேர்பதற்கு
சேராதவிடம் சேர்ந்து
அல்லல்பட்டு அல்லல்பட்டு
அலைகின்றார் மாநிலத்தே
தொல்லுலகில் செல்வமதை
நல்லபடி சேர்ப்பதற்கு
வல்லமையைக் கேட்டிடுவோம்
வரம்தருவாள் லட்சுமியும் !

வீரமென்னும் பேராலே
கோரம்மிங்கே நடக்கிறது
வீரத்தின் தூய்மையெலாம்
விபரீதம் ஆகிறது
உடல்வீரம் உளவீரம்
உண்மைவீரம் ஆவதற்கு
துர்க்கையது பாதமதை
துணையெனவே பற்றிடுவோம் !

கற்றறிந்த பெரியோர்கள்
கபடமுடன் நடக்கின்றார்
கல்வியினைக் காசாக்கி
களங்கத்தை ஊட்டுகிறார்
கற்றபடி நடக்காமல்
மற்றவரை வதைக்கின்றார்
கல்விதரும் சரஸ்வதியே
காப்பாற்று கல்விதனை !

அறிவில்லா வீரத்தால்
ஆவது ஒன்றுமில்லை
ஆற்றலில்லா கல்வியினால்
ஆருக்கும் நன்மையில்லை
கல்வியொடு வீரம்செல்வம்
கைகோர்த்து நிற்பதற்கு
கருணைநிறை சக்திகளின்
கழல்பணிந்து நிற்போமே !

3. உயிர் !

வஞ்சகர்கள் நஞ்சாலே வாழ்வளிக்க வந்தமகான்
நெஞ்சமெலாம் பதைபதைக்க சிலுவையிலே உயிர்விட்டார்
அஞ்சாமல் அறமுரைத்த அறிஞராம் சோக்கிரட்டீஸ்
நஞ்சருந்தி உயிர்விட்டார் நாடே கலங்கியதே
வெஞ்சமரில் வெற்றிகண்ட மேற்குலகு சீஸர்மன்னன்
தன்நண்பன் கையாலே உயிர்விட்டான் சபைநடுவே
உயிர்பறிக்கும் காரியங்கள் உலகில்பல நடக்கிறது
உயிர்பற்றி உணர்ந்துவிடின் உயிர்பறிக்க மாட்டாரே !

எட்டப்பன் சதியாலே கட்டபொம்மன் உயிர்போச்சு
இங்கிலாந்து வெள்ளையரால் எத்தனையோ உயிர்போச்சு
சத்தியத்தைத் தாங்கிநின்ற காந்திமகான் உயிர்போச்சு
சதிகாரர் வலையாலே மாட்டின்லூதர் உயிர்போச்சு
செக்கிழுத்துச் செக்கிழுத்து சிதம்பரனார் உயிர்போச்சு
பக்குவமாய் காக்குமுயிர்  பறிபோகும் நிலையாச்சு
அக்கறையாய் காக்குமுயிர் அபரிக்கும் நிலையாச்சு
ஆருமே உயிர்பற்றி எண்ணாத நிலையாச்சு !

மதம்காக்க பலபேர்கள் உயிர்கொடுத்தார்  மாநிலத்தே
இனம்காக்க உயிர்கொடுத்தோர் எண்ணிக்கை பலமடங்கே
மொழிகாக்க உயிர்கொடுக்க வருகின்றார் பலரிப்போ
உயிர்கொடுப்பார் காரணமோ உலகத்தில் உயர்கிறது
உயிர்பற்றி உணராதார் உயிர்விட்டே மாய்கின்றார்
உணர்வுடையோர் உயிர்விட்டே உணர்த்துகிறார் உண்மைதனை
எதுவிட்டுப் போனாலும் எம்மிடத்து வந்துவிடும்
உயிர்மட்டும் போய்விட்டால் ஒருகாலும் திரும்பிவரா !

ஒழுக்கமதே வாழ்வினது உயிர்நாடி போலாகும்
ஒழுக்கமதை  இழந்துவிட்டால் உயிர்வாழ்தல் உகந்ததல்ல
ஒழுக்கமதை உயிரோடு ஒப்பிட்டு வள்ளுவனார்
ஒழுக்கமுடன் வாழுதலே உயிர்வாழ்தல் எனவுரைத்தார்
அவ்வொழுக்கம் இல்லாரும் உயிர்வாழும் வாழ்க்கையது
அர்த்தமற்ற வாழ்வுவென அறிந்திடுதல் அவசியமே
உயிரோடு வாழுதற்கே உலகத்தார் விரும்புகிறார்
உயிருடலில் இருக்கும்வரை ஒழுக்கமதை ஓம்பிடுவோம் !

உயிர்பற்றி உரைக்கின்றோம் உயிர்காக்க நினைக்கின்றோம்
உயிர்தன்னை யாருமே உலகத்தில் கண்டதில்லை
உடலுக்குள் உயிர்புகுந்து உலகத்தை ஆள்கிறது
உயிர்பிரிந்த உடலுக்கோ உலகத்தில் மதிப்புமில்லை
தெரியாத உயிர்தன்னை தேடிநின்று பார்த்தாலும்
தெளிவான பதிலெதுவும் தெரியவர மாட்டாது
புவிமீது உயிர்தன்னை நிலைநிறுத்தும் பொறுப்புதனை
பூராணாமாய் விளங்குகின்ற பரம்பொருளே உணருமன்றோ !

4. ஆனந்தம் பெருகிடுமே !

கல்லுக்குள் உறைந்திருக்கும்
கலைநயத்தைப் பார்ப்பதற்கு
மெல்லவே உளிசென்று
வெட்டிவிடும் கல்லதனை
வேண்டாத பகுதிகளை
வெட்டியே எறிந்துவிடின்
வெளிப்படும் பகுதிதான்
வியப்பெமக்குத் தந்துவிடும் !

வேதனையும் சோதனையும்
தாங்குகின்ற வேளையில்த்தான்
மேலான தன்மையங்கே
வெளிப்பட்டு வந்துநிற்கும்
கல்பட்ட வேதனையால்
கடவுளுரு காட்சிதரும்
கால்மிதிக்கும் கல்லுக்கு
வேதனைகள் புரியாது !

மனமென்னும் கல்தன்னை
மாற்றிவிட  வேண்டுமென்று
தினமுமே பலவற்றை
செய்கின்றோம் வாழ்வெல்லாம்
ஆனாலும் அம்மனமோ
ஆகாத வழிசென்று
ஆணவத்தை அணைத்துவிட
ஆர்வம்கொண்டே நிற்கிறது !

ஆணவத்தை அணைத்துவிட்டால்
அன்பங்கே அகன்றுவிடும்
அறமொளிந்து மறமோங்கி
ஆசையங்கே ஆர்ப்பரிக்கும்
அன்புபாச நேசமெல்லாம்
அனாதரவாய் ஆகிவிடும்
ஆண்டவனின் நினைப்புமே
அற்பமாய் ஆகிவிடும் !

வேண்டாத அத்தனையும்
வேராக ஊன்றிவிடின்
வில்லங்கம் அத்தனையும்
நல்லவற்றை அழித்துவிடும்
வில்லங்கம் தனையகற்ற
நல்லதொரு செயலாக
வேண்டாத அத்தனையும்
வெட்டிவிடல் முறையாகும் !

வேண்டாத விஷயங்களை
விரைவாக வெட்டிடுவோம்
வேதனையும் சோதனையும்
சாதனைக்கே வழிசமைக்கும்
ஆதலால் அனைவருமே
ஆண்டவனைக் காண்பதற்கு
அகற்றிடுவோம் ஆணவத்தை
ஆனந்தம் பெருகிடுமே !

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 01 October 2017 17:10