கவிதை: மழைப் பயணி! - எம்.ரிஷான் ஷெரீப் -

Tuesday, 12 September 2017 17:05 - எம்.ரிஷான் ஷெரீப் - கவிதை
Print

ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிகளோடு
மழை நனைத்த ஒற்றையடிப் பாதை
ஈரமாகவே இருக்கிறது இன்னும்

ஊதா நிறப் பூக்களைக் கொண்ட
தெருவோர மரங்கள்
கிளைகளிலிருந்து காற்று உதிர்க்கும் துளிகளினூடு
நீரில் தலைகீழாக மிதக்கின்றன

இருண்ட மேக இடைவெளிகளிலிருந்து வந்து
தரையிலிறங்கியதும்
சந்திக்க நேரும் மனிதர்களுக்கேற்ப
மழையின் பெயர் மாறிவிடுகிறது
ஆலங்கட்டி, தண்ணீர், ஈரம், சேறு, சகதியென

மழைக்குப் பயந்தவர்கள்
அடைத்து மூடிய ரயில் யன்னல் வழியே
இறுதியாகக் காண நேர்ந்த
பச்சை வயல்வெளியினூடு
மழையில் சைக்கிள் மிதித்த பயணி
இந் நேரம் தனது இலக்கை அடைந்திருக்கக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப் -
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Tuesday, 12 September 2017 17:07