முத்தெடுக்கும் மூப்புக்குடி!

Thursday, 07 September 2017 06:40 - தம்பா (நோர்வே) - கவிதை
Print

- தம்பா (நோர்வே) -சந்தேகமே இல்லை
கல்தோன்றி மண்தோன்றாக்  காலத்து
முன்தோன்றிய மூப்புக்குடி நாம் தான் .

தமிழாசான் பற்றெனும் பெயரில்
கல்லையும் மண்ணையும்
கபாலத்துள் ஏற்றிவைத்த நாள் முதல்
கனத்த பாறைச்சுமையுடன் மனசு
அடையாளங்களை தேடிய புனிதப்பயணத்தில்
அற்புதங்களையும் அற்பங்களையும்
அள்ளித் தருகிறது.

பூட்டனின் கோட்டை கொத்தளங்களுக்கும்
கொத்தனாரின் கல்குவாரிக்கும்
வித்தியாசம் தெரியாது
தடுமாறுகிறேன் இங்கு.

பரவாயில்லை கற்பாறையை
உடைப்பவன் கூட
அழகு நேர்த்தியை அனுமதிக்கிறான்.
பாவம் வரலாறுகள் தான்
திமிலமடைந்து அசிங்கப்பட்டு கிடக்கின்றன.

இரயிலின் பயணத்திற்கு
தண்டவாளங்களின் சமந்தாரச் சங்கமம்
சமச்சீராக வேண்டும்,
வரலாற்றை வாழவைக்காது
வாழ்வும் வளர்பிறையாவதில்லை.

 

Last Updated on Thursday, 07 September 2017 11:43