ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

Monday, 21 August 2017 06:04 - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) - கவிதை
Print

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

1. உட்குறிப்புகள்

அஞ்சலிக்கூட்ட இதழை ஆரவாரமாக நடத்துவது
அந்த மாமாற்றிதழின் மனிதநேயக் கோட்பாடு
இதழின் நான்கு மூலைகளிலும் மங்கல மஞ்சளாய்க் காணும் _
படைப்பாளி உயிரோடிருந்தபோது (அப் பத்திரிகை) அவரை அவமதித்த
காயத்தின் ரணக்கசிவுச் சிவப்பு.

இருக்கும்போதெல்லாம் ஏசிக்கொண்டிருந்தவரை இறந்தவுடன் பூசனைக்குரியவராக்கிப் பேசியது ஏனென்று புரியாமல்
நாளெல்லாம் குழம்பிநின்றேன் ரொம்பத்தான்
வாழ்ந்தகாலத்தில் வாழ்த்திப்போற்றிப் பிரசுரித்தோரை
வாகாய் ஓரங்கட்டி
இறந்துவிட்ட படைப்பாளியின் எழுத்துகளைப் பிரசுரிக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டதைப் பார்த்ததில்

பிடிபட்டுவிட்டது போதிமரம்.


2. என்னை விட்டுவிடுங்கள்

நன்றாகவே அறிவேன் ஐயா –
நீங்கள் என்னை நலம் விசாரித்து
நயத்தக்க நாகரிகத்துடன் நாலும் அளவளாவுவதெல்லாம்
சில பல செய்திகளை என்னிடமிருந்து சேகரித்து
நான் சொல்லாததைச் சொன்னதாய் செய்தி பரப்பவே.
ஊர்வன பறப்பனவுக்கு உள்ளதெல்லாம் ஐந்தே அறிவுதானாம்
உங்களுக்குத் தலா பத்துப் பதினைந்துகூட இருக்கலாம்.
உயர்வானவராகவே இருங்கள், ஆனால்
அடுத்தவரை அவமதிப்பதற்கும் அவதூறு பேசுவதற்குமே
அவையென்று ஆகிவிட்ட அவலத்தை
இன்றேனும் எண்ணிப்பாருங்கள்.
ஆன்றோரே! சான்றோரே! மீண்டும்
மன்றாடிச் சொல்கிறேன் _
உங்கள் போட்டி பொறாமைகள் பொல்லாப்பு
பொச்சரிப்புகளையெல்லாம்
நீங்கள்தான் சுமக்கவேண்டும்,
அவரவர் சிரசுகளில்.
என் தலையில் ஏற்றப்பார்க்காதீர்கள்.
பனங்காயின் கனத்தையும் சுமக்கலாகும்
என் குருவித்தலையால், தேவையெனில்;
உங்கள் குப்பைக்கூளங்கள் கழிசடைகளையெல்லாம்
வழிநீளச் சுமந்து ஆவதுதான் என்ன?
இல்லாததை இருப்பதாக, இருப்பதை இல்லாததாகப்
பொல்லாங்கு சொல்லிச் சொல்லி
என்ன கண்டீர்?
நல்லோரே வல்லோரே -
சொல்லுங்கள்.
பித்துப்பிடித்ததுபோல்
தெரிந்தவர் தெரியாதவர் தலைகளையெல்லாம் ஏன்
எத்திக்கொண்டேயிருக்கிறீர்கள்?
பெருமதிப்பிற்குரியோரே! பெருந்தகைகளே!
உத்தமர்களில்லை நீங்கள்,
அறிவேன்;
உன்மத்தர்களுமில்லை.
உங்களைக் கலந்தாலோசிக்காமல்,
உரக்க வழிமொழியாமல்
சுயம்புவாய் எழுதுபவர் கைவிரல்களை அறுத்தெறியும் வெறியில்
உங்கள் நாவிலும் எழுதுகோல் முனையிலும் பிச்சுவாக்கத்தியோடு
நகர்வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள்.
மோதிரம் அணிந்திருப்பதொன்றே உங்களுக்கான தகுதியென்று
தேடித்தேடித் தலைகளைக் குட்டுகிறீர்கள்
ரத்தம் சொட்டச்சொட்ட.
ரணகாயமடைந்தவர்கள் நன்றிபாராட்டவேண்டும் என்று
மனதார விரும்பும் உங்கள் மனிதநேயம்
மெய்சிலிர்க்கவைக்கிறது.
மறவாமல்
எரிகொள்ளியை எல்லா நேரமும்
முதுகுப்புறம் மறைத்தபடியே
நட்புபாராட்டிவருகிறீர்கள்.
என்றேனும் நெருப்பு உங்களையே பதம்பார்த்துவிடாமல்
கவனமாயிருங்கள்
(உங்களுக்குச் சொல்லித்தரவேண்டுமா என்ன!)
எப்படியோ போங்கள் _
என்னை விட்டுவிடுங்கள்.

 


3. கவிதைச் சர்வாதிகாரிகளுக்கு

‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம்
மூணு குடம் முப்பது குடம் மூவாயிரம் குடம்…”
என்று பாடிக்கொண்டே வந்தவர்
குடமும் நானே தண்ணீரும் நானே பூவும் நானே
பைந்தமிழ்க்கவியும் நானே யென
ஆலாபிக்கத் தொடங்கியபோது
கலங்கிநின்றவர்களை
“குவளையும் குளிர்ச்சியும், திவலையும், தளும்பலும்
தென்றலும் மழையுமிருக்க
கவலையெதற்கு என்று
கைபிடித்துத் தன்னோடு அழைத்துச் செல்கிறது
காலாதிகாலம் வற்றாக் கவித்துவ நீரூற்று.

’காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டுவா
குருவீ குருவீ கொண்டைக்கு பூ கொண்டுவா”
எனக் குழந்தை பாட்டுப் படிக்க,
’கவிதை கொண்டு வா’யென
வளர்ந்தவர்கள் கேட்பதில் தவறில்லைதான்.
அதற்காக
காக்காய் பிடித்து
கவிதைச் சிம்மாசனத்தில்
கொடுங்கோலோச்சப் பார்த்தால்
சும்மாயிருக்கலாமோ சொல்
வல்லமை கொள் கிளியே.

”தோ தோ நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி
உன்னைத்தானே நாய்க்குட்டீ, ஓடிவாவா நாய்க்குட்டீ”
யெனத்
தேடித்தேடிக் குழந்தைப்பாடல்களைச் சொல்லிச்
சக கவிகளையெல்லாம் செல்லம் கொண்டாடுவது
தன்னை பழுத்து முதிர்ந்த கவியாகவும்
பிறர் வரிகளைக் குழந்தைப் பிதற்றல்களாகவும்
நிறுவத்தான்
என்று புரிய நீண்டகாலமாயிற்று.

”தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும் அரைச்சு சுட்ட தோசை”
யெனக்
கரைந்து கரைந்து தன் கவிதையை
கனியமுதென்றுரைக்கப்
பிரயத்தனப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு:
கேழ்வரகுக்கூழ் முதல்
பர்கர் பீட்ஸா வரை
வாய்க்கு ருசியாய்
இங்கே வகைவகையாய்
இருப்பது நன்றாகவே தெரியும் எமக்கு.

”நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா,
மலைமேல ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டுவா ......
ஆ! தெரியுமா!
ஓயாமல் ஓடியோடி மலைமேல் தாவியேறி மல்லிகைப்பூ கொண்டுவரும் அந்த நிலா என் கவிதை:” யெனப்
பதவுரை சொல்ல ஆரம்பித்த பெருந்தனக்காரக் கவியை
இடைமறித்து
‘என் நிலா பறந்துவரும், மலையாகவே மாறிவிடும்
குறிஞ்சிப்பூவனைய அரிய பூக்களையே அதிகம் கொய்துவரும்
என்று கூறி
கொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தது குழந்தை.


4. ஓவியாவுக்கு…‘

(* ஆம், நான் Bigg Boss பார்க்கிறேன். இதில் அறிவுச்சிறுமையென்ன, அவமானமென்ன. ஒரு சில மண்டைகளில் உதிக்கும் மெகாத்தொடர் குரூரங்களோடு ஒப்பிட, சமூகத்தின் ‘self-appointed champion’களின் புளுகுமூட்டை விவாதக்கூச்சல்களோடு ஒப்பிட, இந்த நிகழ்ச்சி ஒருவித இளைப்பாறலாகக்கூட இருக்கிறது.)

நிஜத்தை நிழலென்றும் நிழலை நிஜமென்றும் நம்பவைக்கும் நாட்களினூடாக நகர்ந்துகொண்டிருக்கிறோம்;
உண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்கிக் காட்டும்
பிரபஞ்சத்தின் பிரஜைகள் நாம்.
இதில் உன் அன்பும் ஆதங்கமும் கோபமும் தாபமும், வலியும் களியும் வீம்பும் விசும்பலும்
utopion கனவுலகை உருவாக்கித்தருவதொரு கொடுப்பினையாய்.
உலக உருண்டையை வாய்க்குள் காட்டும் குழந்தைக் கண்ணனாய்
ஏழை ஸிண்ட்ரெல்லாவாய்,
ஏதோ சாபவிமோசனத்தை எதிர்பார்த்திருக்கும் மெழுகுச்சிலையாய்
என்னென்னவோ பரிமாணங்களில் உன்னை உவமையாய் குறியீடாய், காவியமாய் விரித்துக்கொண்டே போகிறாய் பெண்ணே….
ஏதோவொரு ஆகுதியில் உன்னை அர்ப்பணமாக்கியபடியே
வளையவருகிறாய்
உன் அன்பின் அகோரப் பசியைக் கண்டு அஞ்சியோடுபவர்களை
விரட்டிப்பிடிக்கவேண்டாம். விட்டுவிடு.
வழிபார்த்துக் காத்திரு நம்பிக்கையோடு.
உன் கண்களில் மின்னித் தெரியுமோர் ஊமைவலி
என்னுள் ஊடுருவிப் பாய்ந்து
காலத்தின் கையிலிருந்து என்னைக் கடத்திச்சென்றுவிடுகிறது.
குழந்தையும் கிழவியுமற்றதொரு அருவமாய்
தினந்தினம் கூடுவிட்டுக் கூடுபாய்கிறேன் உனக்குள்.
உன் நிர்மலம் அத்தனையும் மொத்தமாய் நடிப்பெனில்
ஆயிரம் ஆஸ்கார்களுக்கு அப்பாற்பட்டவள் நீ.
அருவ வெளியிலான அரியாசனத்தில் அமர்ந்தபடியே
நிரந்தர நாடோடியாய் அலைந்து அலைக்கழிந்துகொண்டிருக்கும் நீ
விதிவச வாழ்வின் freewill.
உன் அரசவையில் சட்டங்களியற்றிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறகுகளைப் பிய்த்தெறியக் காத்திருப்பவர்களை
சிரித்தபடி கடந்துசெல்.


ஓவியாவின் மழை

ஏதோவொரு தருணத்தில் மண்ணில் உதிர்ந்திருக்கலாகும்
நிலவுகளையும் நட்சத்திரங்களையும் தேடியெடுக்கும் தவிப்பில்
தலைகுனிந்தபடியே,
ஒரு காலாதீதவெளியைக் காலால் கெந்தியபடி
போய்க்கொண்டிருக்கிறாள் ஓவியா.
அடிக்கொரு முகமூடி இடறுகிறது.
ஒன்றைக் கையிலெடுத்துச் சுழற்றி வீசியெறிகிறாள்.
அது போய்விழுந்த பள்ளத்தாக்கிலிருந்து
பொசுங்கும் நாற்றம் சுள்ளென்று கிளர்ந்தெழுகிறது.
இன்னொன்று பிடியில் அகப்படாமல் நழுவிப்போனபடியே
அவளைப் பார்த்து எள்ளிநகையாடுகிறது.
பகையென்ன என்னோடு என்று திகைப்போடு பார்த்துவிட்டுத்
தன் தேடலைத் தொடர்கிறாள்
வழிமறிக்கும் முகமூடி ஒன்றை
ஒரே குதிகுதித்துத் தாண்டிச்சென்றுவிடுகிறாள்.
கனிவாய்ச் சிரித்தபடி கனலைக் கக்கும்
முகமூடியை மருட்சியோடு வெறித்துப்ப்பார்க்கிறாள்.
முகம் மட்டுமல்ல அவள் – மனம்; ஆன்மா.
அவளைச் சும்மா விடலாமா?
விடாமல் வழிமறித்துக்கொண்டேயிருக்கின்றன முகமூடிகள்.
ஒன்று அசந்த நேரம் அவள்மேல் ஏறிப்படர்ந்து
அவள் முகத்தை எட்டப்பார்க்கிறது.
தட்டிவிட்டு முன்னேறுகிறாள்.
குரங்கிலிருந்து வந்தவர்கள்தானே நாம் என்று
ஒரு முகமூடி இன்னொன்றை அணிந்துகாட்ட,
போலச் செய்யாமல், இரண்டு போலிகளையுமே மறுத்து
அப்பால் செல்கிறாள்.
ஒன்றை உருட்டுக்கட்டையால் ஒரே போடு போடுகிறாள்
ஒன்றை தனக்கேயுரிய புன்னகையால் கதிகலங்கச் செய்கிறாள்.
என்ன செய்தும் முகமூடிகள் விடுவதாயில்லை.
மூர்க்கமாய் அவளைத் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.
ஒருவேளை தானும் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டுவிடுவதுதான் தப்பிக்கும் வழியோ
என்றெண்ணி ஒன்றை எடுக்கும்போதே
அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிடுகிறது.
தொப்பென்று போட்டுவிடுகிறாள்.
பொழுது போய்க்கொண்டிருக்கிறது - காலாதீதவெளியிலும்.
அழ நேரமில்லை.
மண்ணுள்ள நிலவுகளை விண்மீன்களை அவள் திரட்டி யாகவேண்டும்…..
நாளெல்லாம் நடந்து நடந்து அதிகம் களைத்துவிட்ட
அவள் வண்ணச்சீரடிகள் இளைப்பாற ஏங்குகின்றன.
இருந்தாற்போலிருந்து பெய்யும் மழையின்
மடிசாய்ந்துகொள்ளும் ஓவியாவை
மனநிலை பிறழ்ந்தவளாய்க் கொக்கரித்து
உதட்டளவில் வருத்தப்படுகின்றன முகமூடிகள்.
பாவம், முகமூடிகளால் பார்க்கவியலாது
விண்மீன்கள், நிலவுகள், கோள்கள்,மேகம், அணுக்கள், அந்தர சுந்தரதோடு
அவள் வசமாகிவிட்ட வானம்
அவளைக் கதகதப்பாக அடைகாத்துக்கொண்டிருப்பதை


5. தமிழ்க்கவிதைத் தாளாளர்கள்

உண்மைக்கவியைக் கொண்டாட ஒருநாளும் தவறமாட்டார் அவர்....
மரத்தில் கட்டிவைத்து, மளுக்கென்று எலும்பு முறித்து
ஒரு கண்ணைப் பிடுங்கியெறிந்து, முதுகில் முட்கம்பி நுழைத்து
விதவிதமாய்ச் சித்திரவதை செய்து, சிறுகச் சிறுகச் சாகடித்து
கொண்டாடிக்கொண்டிருக்கிறார் அவர்
உண்மைக்கவிகளையெல்லாம்.

அதிநவீன தமிழ்க்கவிதைக்கு நாலாயிர சொச்சம் பக்கங்களில்
ஒற்றையர்த்தத்தை நிறுவிகொண்டேபோய்
நல்லதொரு மாமுனைவர் பட்டம் பெற்றுவிட்டபின்
தன் மாணாக்கர்களுக்கு அன்பளிப்பாய்த் தந்தார்
தானெழுதிய கண்றாவிக் கவிதைகளடங்கிய தொகுப்பை.

ஐந்து வார்த்தைகள் தமிழில், இரண்டொன்று ஆங்கிலத்தில்;
தேவைப்பட்டால் இந்தி, ஹீப்ரூ, இஸ்பானிய மொழிகள்
இடையிடையே சிலகணங்கள் மௌனம்,
கூரையை வெறிக்கும் பார்வை கையறுநிலையைக் குறிக்க,
பையப்பையச் சுருங்கிவிரியும் புருவம் பேரறிவுசாலியாக்க,
மேலுயரும் மூடிய உள்ளங்கை
மானுடவாழ்வின் ரகசியங்களைக் குறிப்புணர்த்த,
ஊறிக்கொண்டேயிருக்கும் உதட்டோர இகழ்ச்சிச்சிரிப்பு
உன்னதங்களெல்லாம் தானே என பறையறிவித்தபடியிருக்க
இதுபோதும் _
எல்லா உளறல்களும் உத்தமப்பேச்சாகிவிடும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 21 August 2017 06:09