கவிதை: கோடைக்கு இரை ஈரம்

Monday, 07 August 2017 10:22 - எம்.ரிஷான் ஷெரீப் - கவிதை
Print

யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்
புறக்கணித்துவிட்ட
இலையுதிர்த்த விருட்சங்களில்
பௌர்ணமி நிலவு
கோடையை வாசித்தபடி வானில் நகரும்

வனத்தில்
புள்ளி மான்கள் நீரருந்திய
குட்டைகள் வரண்டு விட்டன

அகோரச் சூரியன் தினமும்
தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்
பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்
தன் மென்பரப்பையிழந்து
வெடிக்கத் தொடங்கி விட்டது சாம்பல் குருவிகள் ஏழு
இரை தேடும் தம் ஒற்றைத் திட்டத்தோடு
தினந்தோறும் காலையில்
முற்றத்திலிறங்கும்
காட்டு மலைச் சரிவின் பலகை வீடுகள்
உஷ்ணப் பிராந்தியக் கதைகளைச் சுமந்த
காற்றோடு வரும் பூ இலைச் சருகுகளைப் போர்த்தி
தம்மை மரமென அலங்கரித்துக் கொள்கின்றன

எஞ்சியிருக்கும் ஓரோர் பட்சிகளும்
தமக்கொரு மரப் பொந்து வேண்டுமென
கேட்டுக் கொள்ளும் பார்வைகளை
சேமித்து வைத்தவாறு
வட்டமிட்டபடியே இருக்கின்றன
கருநிறப் பின்னணியில் வெண்ணிற வளையமிட்ட
மரங்கொத்திப் பறவையின் கண்கள்

கொக்குகளும் நாரைகளும்
தம் ஒற்றைக் கால் தவத்தோடு மறந்து கைவிட்ட
தண்ணீர்க் குளங்களின்
ஈர மணற்தரையைத் தொடுகின்றன
ஆழமற்ற நீரில் பிரதிபலிக்கும்
தாகித்த மேக விம்பங்கள்

அவ்வாறாக
கோடைக்கு இரை
ஈரமென ஆயிற்று

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 07 August 2017 10:23