கவிதை: கனவில் வந்த என் தோழி!

Friday, 04 August 2017 11:46 - கண்ணம்மா (மலேசியா) - கவிதை
Print

கவிதை: கனவில் வந்த என் தோழி!

இன்று பூர்ணமி.
அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் ,
அதெனக்குப் பிடிக்கும், மிகவும்.
பல் வர்ணங்களில் பாவாடை தைத்தழகு
பார்ப்பேன்.
தேவையான பொருட்களைத்
தேடித் தயார் செய்து,  
மல்லிகை பறிக்கப் பின் வளவு
சென்றேன்.
அழகாகக் பூத்துக் குலுங்கியபடி
கிணற்றடியில்
அப்பா கட்டிய மல்லிகைப் பந்தல்.
மொட்டுகள் பறித்து
மாலை கட்டினேன்.
அம்மா காட்டிய வழியினிலே
அபிஷேகம் .
அவள் ஆபரணங்களையொரு தட்டில்
வைத்துக் குழந்தையாய்க்குளிப்பாட்டி
துடைத்துப் புதுப்பாவாடை
அணிவித்து, அலங்கரித்து,
நெற்றியில் குங்குமம் வைத்து,
மாலை அணிவித்ததும்,
மனதுக்குக்குள் ஏதோ ஒரு நெகிழ்வு.

வாய் மட்டும் அபிராமி அந்தாதியை
பாடிக் கொண்டிருந்தது.
காலத்தின் கோலமோ?
நாலைந்து தலைமுறைத் தொடர்பு....
நாட்டில் நடந்த கலவரங்களால்
திக்குத் திக்காய்ச் சிதறிப் போனோம்.
அம்பாளை அங்கேயே விட்டு விட்டு
அகத்திலொரு சங்கடம்; வேதனை.
வருடங்கள் பல கழிந்து போயின.
ஆனாலும் மனதில் ஏற்பட்ட உணர்வுகள்
அப்படியே பதிந்து விட்டன.
கனவில் ஒரு நாள் வந்தெனைத் தோழியென
அணைத்து நீ அழைத்தாய்.
'உன்னுடனேயே வந்து விட்டேன்'
எனச் சொன்னது
அவளே.
நான் பாக்கியசாலி.

Last Updated on Friday, 04 August 2017 14:39