இல்லாதவன்

Tuesday, 04 July 2017 12:33 - நிலாரவி (கோவை, தமிழ்நாடு) - கவிதை
Print

கவிதை படிப்போமா?இரவின் இருளைக் கிழித்தது
அவன் குரல்...
வாசலில் நின்று அவன்
யாசிக்கிறான்...
பாதி உறக்கமும்
மீதி விழிப்புமாய்
மயக்கத்தில் நான்...

விழித்து எழ
பிடிக்காமல் தான்
"இல்லை"யென்றேன்...
சிரித்தவன் கேட்டான்
எதை நீ இல்லை
என்கிறாய்
இருப்பையா...
இன்மையையா...
புருவங்களை கவ்வி
இழுத்து கைது செய்தது
அவன் கேள்வி...

நானொன்றும் இல்லாதவனில்லை
எப்போதும்
கொடுப்பவன்தான்
இன்று உறக்க மயக்கம்
என்றேன்

மீண்டும் சிரித்தவன்
என் வார்த்தைகளையே திரும்பச்சொன்னான்...

உண்மைதான்
நீ இல்லாதவனில்லை...
நானுமில்லாதவனில்லை
நாம் இங்கிருப்பதால்...
எனில் இல்லாதவன் என்று
யாருமில்லை...
நீ
"இருப்பை" மறுப்பதால்
நான் இல்லாதவனாயிருக்கிறேன்...
"இல்லாதவன்" ஆகிய
நானும்
இங்கிருக்கிறேன்

நீயோ
விழிக்கவும்
தேடவும்
அவகாசமற்று
உன் சௌகரியங்களில்
விடைகொள்கிறாய்
"இல்லை"யெனும்
பொய்மையை
என்று முடித்தான்...

எதையோ
பெற்றுக்கொண்ட
விழிப்பு
என்னுள்...
யாசகன் அவனா நானா..?
ஈதவன் அவனெனில்
இல்லாதவன்  யார்...?

விழித்தேன்
எழுந்தேன்
கதவுகளை திறந்தேன்...
யாசகன் மறைந்திருந்தான்
எங்கும் ஔி இருந்தது...

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 04 July 2017 12:35