முல்லைஅமுதன் கவிதைகள் மூன்று!

Saturday, 01 July 2017 22:32 - முல்லைஅமுதன் - கவிதை
Print

1.

முல்லை அமுதன்

வெய்யில்
வரும் போது புடவைகளை
காயப்போடுங்கள்.
'ம்'
பிள்ளைகளுக்கு
உணவை ஊட்டிவிட்டு,
பாடசாலை வாகனத்தில்
அனுபிவிடுங்கள்.
'ம்'
மின்சாரக் கட்டணம் கட்டவேண்டும்.
'ம்'
அம்மா வரப் போறா
வீட்டைத்துப்புரவு பண்ணி வையுங்கள்.
'ம்'
அப்படியே மாடியில
காயவிட்ட ஊறுகாயை எடுத்து வைச்சு
,பிறகு
சாப்பிடுங்கள்.
நான் வர தாமதமாகும்..
'ம்'
செருப்பை
மாட்டியபடி நகர்ந்தாள்
மனைவி.
நான் இரவுப் பூக்களின் மீதான
பனித்துளியை
இரசித்தபடி இருந்தேன்.
என் கனவை
மிதித்தபடி
வெளியேறினாள்.


2.

மகள்
வெளியே
போகமுடியாது என சபித்தாள்.
உதைபந்தாட்டத் திடலில்
விளையாடமுடியாது
போயிற்றே என கவலையுற்றான்.
அடுத்தவனோ
தாத்தவுடன்
காலாற நடக்கச் செல்கையில்
மிட்டாய் வாங்கிவிடமுடியாதே
என்பதால்
மூளையைக் குடைந்தான்.
மகளோ
இன்றாவாது
தோழியின் பிறந்தந்த நாளுக்குப்
போக முடியாது போனதை
அலைபேசியில்
கோபத்துடன்
செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள்.
மனைவியின் கவலை புரிகிறது
உடைகள் நனைந்து விடுமே என்பதில்
அவள் கவனம்...
எனக்கு மட்டும்..
இந்த அடை மழையில்,
வழிந்தோடும்
நீருக்கிடையேயும்
அவளின் பாதச்சுவடுகளில்
லயித்தே இருந்தது...


3.

நீண்ட
தூரம் பேசியே வந்தாயிற்று.
மழை வந்தது.
இருண்ட மேகம்
கூட வெளிச்சம் காட்டியது.
மரங்கள்
கிண்டலடிப்பது போல
காற்றுடன்
கிசு கிசுத்தது.
கடற்கரைக் காற்றின்
சுவாசத்துள் ஏறியது.
வழமை போல
வந்து
நின்றோம்.
பாதைகள்
கிளை பிரிந்து நின்றன.
என்
வீட்டை நோக்கிப் போகவேண்டும்.
இப்போதாவது சொல்லிவிடுங்களேன்.
வேறு வேறாய்
பிரிந்து சென்ற பாதையில்
பிரிந்தே நடந்தோம்..
சொல்ல நினைத்த
எதையும் கேட்காமலேயே!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 04 July 2017 12:36