1. கணினியிற் தமிழ்வரைந்து ஏடு தொடக்கிய பேராசான் விஜயகுமார் நினைவுப் பகிர்வு

Thursday, 27 April 2017 03:10 - தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் - கவிதை
Print

கலாநிதி எஸ். விஜயகுமார்அண்மையில் 'டொராண்டோ', கனடாவில் காலமான முனைவர் சின்னத்துரை விஜயகுமார் அவர்கள் கணினியில் தமிழ் எழுத்துகளை உருவாக்கிய முன்னோடிகளிலொருவர்.  இவரைபற்றிக் 'கனடா மிரர்' .காம் இணையத்தளம் பின்வருமாறு கூறுகின்றது: "தமிழ் எழுத்தை கம்யூட்டருக்கு அறிமுகம் செய்து வைத்த கல்விமான் கலாநிதி எஸ். விஜயகுமார் 31-03-2017 கனடாவில் காலமானார். இந்தியாவில் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதல் கம்யூட்டரில் பயன்படுத்தப்பட்டது என பெருமை கொள்ள முடியும். அப்போது திரு. விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டது.. கம்யூட்டர் தமிழில் ‘ரெமிங்ரன்’ முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கம்யூட்டருக்கு உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்கள். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பு. கம்யூட்டர் எழுத்துக்களை அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ச் ஹார்ட் மூலம் உலகம் கண்டிருந்தாலும், அவற்றினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் திரு. விஜயகுமார் அவர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்"

இவரைப் பல வருடங்களுக்கு முன்னர் ஓரிரு தடவைகள் தயாளனின் 'மைக்ரோடெக்' கணினி நிறுவனத்தில் சந்தித்திருக்கின்றேன். உரையாடியுமிருக்கின்றேன். அப்பொழுது இவர் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டமென்று நினைக்கின்றேன். மைக்ரோடெக் நிறுவனத்தில் ஒரு பகுதியில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பித்துக்கொண்டிருந்தார். பழகுவதற்கு இனியவர். பண்பு மிக்கவர். கணினியில் தமிழ் எழுத்துகளைப் பாவிப்பதில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

முதன் முதலாகத் தமிழ் எழுத்துகளைக் கணினியில் இவர் பயன்படுத்துவதற்கு முன்னரே கனடாவிலுள்ள றிப்ளக்ஸ் நிறுவனம் தமிழ் எழுத்துகளைப்பாவிக்கத்தொடங்கி விட்டது. 1987இல் றிப்ளக்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியான வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' தொகுப்பு கணினியில் தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு வெளியான நூலென்பது குறிப்பிடத்தக்கது. றிப்ளக்ஸ் நிறுவனத்தின் மூலம் 'ஈழத்துப் பூராடனார்' அவர்களின் பல நூல்கள் கணினியில் தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு வெளிவந்துள்ளன. ஆனால்  'றிப்ளக்ஸ்' நிறுவனம் தமிழ் எழுத்துகளைத் தம் பதிப்பக நூல்கள் வெளிவருவதற்கு மட்டுமே பாவித்ததுடன் நிறுத்திக்கொண்டது. இந்நிலையில் கலாநிதி சின்னத்துரை விஜயகுமாரின்  பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. கலாநிதி விஜயகுமார் தமிழில் பல புதிய எழுத்துகளை உருவாக்கிப் பல பத்திரிகைகள் வெளிவர உதவியுள்ளார். அந்த வகையில் கணினியில் தமிழ் எழுத்துகளைப்பாவித்துப் பத்திரிகைகள் வெளிவர அரும்பங்காற்றியுள்ளார்.  இவ்வகையில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இத்துறையில் முன்னோடிகளிலொருவர் எனலாம்.

முனைவர் விஜயகுமார் பற்றிக் கவிஞர் தேசபாரதி தீவகம் வே,இராஜலிங்கம் எழுதிய நினைவுக் கவிதை இது. - 'பதிவுகள்' -


1. கணினியிற் தமிழ்வரைந்து ஏடு தொடக்கிய
பேராசான் விஜயகுமார் நினைவுப் பகிர்வு


நொந்து பெருந்துயர் நிட்டுரங் கண்டுநாம்
நெஞ்சம் பதைத்திட வந்தோம்
அந்திக் கடலென அள்ளுமி ருட்டிலே
அச்சங் குதறிட வந்தோம்
சொந்த நிலத்தையும் சீவியப் போரிலே
சிந்துங் குருதியாய் வந்தோம்   
வெந்து சிதறிய வேதனைத் தீயிலே
விட்டுக் கனடியம் வந்தோம்!

கற்ற கல்வியுங் கவ்விய நெருப்பிலுங்
கட்டுக் குலைந்திடப் பெற்றோம்
வெற்றுக் கரங்களாய் விட்டக ணத்திலும்
மிஞ்சும் அனலிடைப் பட்டோம்
உற்ற பெருந்துயர் உப்பிய தாயினும்
உள்ளத் துணிவிலே நின்றோம்
அற்ற வழியிலும் அருந்துணை யாகஎம்   
அ;;ற்றைத் தமிழரைக் கண்டோம்!

விசய குமார்எனும் வித்துவர் தமிழினை
விளங்கக் கணினியில் வார்த்தார்
அசைய வைத்ததோர் அறிவெனும் ஆற்;றலில்
அச்சுத் தெளிந்திடச் செய்தார்
இசைய விரிந்திடும் ஏடுகள் பலவென
எழுதித் திரண்டனர் தமிழோர்
மிசையில் இளையவர் வித்திடும் உத்தியை
மீட்டும் படியென வைத்தார்!

பேரா சான்எனத் தொரன்றவின் பல்கலைப்
பீடா கமத்திலே பூத்தார்
ஆரா அமுதனாய் அட்சய பாத்திரம்
ஆகி ஊட்டினன்; அறிவால்
தேராக் கணினியை தெரிந்திடுங் கலையென
சோறாய்த் தீத்தினன்; செம்மான்
வாராய் இனத்திலும் வளர்தமிழ் மனத்திலும்
வார்த்து ஊற்றினன் விசயன்!

அன்னை மீட்டிய ஆனாவுக் கப்புறம்
இந்த அறிஞனாம் விசயன்   
என்னைக் க(h)ட்டிய வூடகப் பூமழை
ஏடு காட்டினன் இவனோர்
தின்னக் கரிசனை இன்;றிய மானிடன்
தேசங் கட்டினான் அழகாய்
பொன்னேர் விஜயகு மார்எனும் பெரியவன்
பூமிக் குவந்தனன் தமிழே!

இருபத் தைந்திலும் மேலுள தாகவே
ஏற்றும் வடிவமாய் வார்த்தான்
துருவமுங் கிழக்கிலும் தென்தமிழ் ஊடகத்
தேருந் துறைபுகச் சேர்த்தான்
கருவம் இலாதவன் கண்ணியம் உடையவன்
கழகத் தமிழணங் கேதான்
பெருமை பெற்றனள் பொன்னெழுத் தாலவள்
பிறந்தாள் புகழ்வனந் தானே!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 27 April 2017 03:43