கவிதை: இறுகியிருந்த பாறை மனதில், நீரைத்தேடிய கவிதை உழவன் திருமாவளவன்!

Thursday, 02 February 2017 23:18 - மட்டுவில் ஞானக்குமாரன் - கவிதை
Print

இறுகியிருந்த பாறை மனதில்
நீரைத்தேடிய கவிதை உழவன் திருமாவளவன்
உறைபனித்துகளின் ஆழத்திலிருந்து
கவிதைபாடிய ஈழக்கவிஞன்
போயே போய் விட்டான்
தாமதமாகத்தான் அறிந்தேன்
இவன் மறைவை

சினிமா வெளிச்சம் படாத
இந்தக் கவிஞனை
பணத்திமிரின் தாளத்துக்கு ஏற்றபடி
ஆடாத இவனை
ஏனோ யாரும் பெரிதாக
கணக்கிலெடுக்கவில்லை

பத்திரிகை அரவணைப்பு
தொலைக்காட்சியின் கண் சிமிட்டல்கள்
எதுவுமே விழவில்லை இவன் மீது

வறுமை நெருப்பு வயல்களில்
நடந்து வந்த களைப்பு
இவனது கவிதைகளில் தெரிந்தன.
கனடாவின் போலித்தன புன்னகை
இவன் திருவாயில் தெரியவில்லை

இங்குள்ள அரங்கில்
இருக்கை கிடைக்காவில்லையென்பதற்காக
படுக்கை விரித்து
அவன் படுத்துக்கிடக்கவில்லை

எழுதினான்
எழுதினான்
அவன் சமுதாயக் கோபம்
தீரும் வரை எழுதினான்

வீதிக்கு வீதி
முளைத்திருக்கும்
மலிவுவிலை மதுக்கடை போல
இவன் பக்கம் பக்கமாக எழுதிக்குவிக்கவில்லை
கொஞ்சம் தான் எழுதினான்
அஞ்சும் அறிவும் கெட்டவரின்
நெஞ்சமெல்லாம் தெளிவு பெற எழுதினான்

திருமாவளவன்
காப்பியங்கள் வியந்த பெருமாள் பதிகம் பாடாது
இறுகியிருந்த பாறை மனதில்
நீரைத்தேடிய கவிதை உழவன்

ஒருநாள் மட்டுமே உன்னோடு பேசினேன்
இன்னும் பேசலாம்
காலம் இருக்குமென்றிருந்தேன்
காலன் ஒருவன்
உனைக்கவர
காத்திருக்கிறான் என்பதறியாது

 

தோழமையுடன் மட்டுவில் ஞானக்குமாரன்

* This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 04 February 2017 17:28