பாரதி வருக எங்கள்! பாவலா வருக!

Thursday, 02 February 2017 23:11 - தீவகம் வே. இராசலிங்கம் - கவிதை
Print

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - - - ஆத்திசூடி  மக்கள் ஒன்றியம் நடாத்திய தைப்பொங்கல் விழாவில் தோன்றிய பாரதியாரும் ஒரு பைந்தமிழ் நிருபரும்...! கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் பாரதியார் வேடமிட்டு நடந்த கலைநிகழ்வு அனைவரையும் கவரும் படியாக இருந்தது.  பாரதியார் தான் பாடிய பாடல்களை முன்மொழிந்து பாட, அவரைக் கேள்வி கேட்பதுபோல் தீவகம் வே. இராசலிங்கம் சுப்ரமணிய பாரதியாரை வரவேற்றுப் பாடிய பாடல் இதுவாகும். -


பாரதி வருக எங்கள்
பாவலா வருக பாட்டுச்
சாரதி வருக முந்தைச்
சந்ததி வருக தையின்
சூரனே வருக  சொல்லின்
செல்வனே வருக வாழும்
வீரனே வருக  என்றும்
வீழ்ந்திடாய் வருக வாராய்!

காந்தனே வருக வெற்புக்
கவிஞனே வருக எங்கள்
பூங்கவி வருக் வேகப்
புலவனே வருக தேனார்
மாங்கவி வருக்  பெண்ணை
மதிப்பவா வருக எங்கள் 
பூம்பனிக் கனடா நாட்டில்
பேரருங் கவியே வருக! குயிலொடுங் காதல்  ஆயர்க்
கோதையுங் காதல்  வண்ண
மயிலொடுங் காதல்  மண்ணின்
மலையிலுங் காதல்  பச்சைப் 
பயிரொடுங் காதல் பண்ணார்
பாட்டுடன் காதல்  நஞ்சை
வயலொடுங் காதல்  வாஞ்சை
வாலிபக் கவிஞா வாராய்!

சாதிகள் இல்லை யார்க்கும்
சரிநிகர் வார்ப்பின் எல்லை!
வீதிகள்; சிறுவர் முல்லை!
விலங்;குகள் அனைத்தும் பிள்ளை!
ஆதியும் தந்தை தாயும்
அன்பிடுங் கவியின் கொள்கை!
நீதியும் மதமும் யாதும்
நிகரெனும் புலவா வாராய்!

பாப்பாப் பாட்டுப் பாடியவா
பாரின் விடியல் பாடியவா
நாப்பொய் யாளர் பாடியவா
நடிப்புச் சுதேசி பாடியவா
தோப்புந் தென்னை பாடியவா
தேருந் தமிழைப் பாடியவா
மாப்பண் குழந்தைத் தாலாட்டை
மகனே நீயேன் பாடவில்லை?

பெண்மையை உயர்த்திப் பாடி
பெண்களை அம்மா என்கப்
பண்புடன் கவிதை தந்து
பக்குவம் சொன்ன வேந்தன்
எந்தையும் தாயும் என்று
எந்தையை முதலிற் சொல்லிப்
பெண்மயம் பின்னே வைத்துப்
புகன்றது ஏனோ? சுப்பா!

வறுமையில் உழன்றாய் செல்லம்
வடித்ததோர் சோறுஞ் சிட்டுக்
குருவிக்குக் கொடுத்தாய் இஸ்லாம்
கூட்டத்தை வீட்டில் வைத்துப்
பெருமைக்கு அன்ன மிட்டாய்!
பேசடா சுப்பா உன்றன்
தருங்கவி ஊற்றோ எந்தத்
தடையிலா வண்ணம் ஏதோ?

காட்டமாய் யானுங் கேட்கக்
கலைவேந்தன் பார திக்காய்
போட்டதோர் சால்வை வேடம்
பொல்லொடும் மேடை வந்தார்!
மீட்டிடத் தையின் பொங்கல்
மேவிடும் ஆத்தி சூடி
நாட்டொடுங் கனடா மன்றில்
நயத்தையே நாமுங் கண்டோம்!


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 02 February 2017 23:13