கவிதை: நூற்றி ஐம்பதில் புலருங் கனடியம் .ஒரு போற்றுங் காவியம்!

Friday, 13 January 2017 21:58 - தேசபாரதி - கவிதை
Print

* கனடாவின் நூற்றி ஐம்பதாவதாண்டினையொட்டி இக்கவிதை இங்கு பிரசுரமாகின்றது.

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - -

விஞ்சிய தாயாய் விளங்கு பூமியில்'
ஒன்றரை நூற்றாண்டு உயிலென அகவையில்...!

பல்லவி

வாழிய கனடா வாழிய கனடா!
வாழிய கனடா மணித்திரு நாடு!

அனுபல்லவி

ஆழிசூழ் உலகின் அற்புத விளக்கே
ஊழி முதல்வனாய் ஒளிருங் கோவிலே

சரணம்

நூற்றி ஐம்பதின் நூபுரக் கலசம்
போற்றியே கனடியம் பூத்தது மகுடம்!
காற்றும் ஒருமுறை களிப்பில் மலர்ந்தது
நேற்றைய பொழுதிலும் இன்றும் சிரித்தது!

ஒன்றரை நூற்று ஆண்டெனக் கனிந்து
வென்றனை உலகை வேற்றுமை களைந்து
சென்றது எல்லாம் சிறப்பெனக் கொண்டாய்
இன்றது புதிய ஏடெனச் சிறந்தாய்!

இலைகளும் உதிரும் இலங்குபூஞ் சோலை
கலைகளாய் மலருங் கனடியப் பாவை
மலைகளும் உண்டு வாவிகள் உண்டு'
தொலைவினைப் பார்க்கும் தூரநோக் குண்டு!

சென்றனை வாழ்த்துச் சீவுளி யாகவே
கன்றெனத் துள்ளிடும் கனடியம் ஆகவே
நெஞ்சினில் உறுதி, நேர்மையிற் தகுதி
விஞ்சினை அன்னை விளங்குநற் பூமியில்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கவிஞர் தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) -

 

Last Updated on Friday, 13 January 2017 22:14