1. பொலிந்துவிட வா !

புத்தாண்டே! வருக!

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இரண்டாயிரத்துப் பதினேழே
இன்முகத்துடனே எழுந்தோடிவா
இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா
வறுமையொடு பிணியகல
வரம்கொண்டு வா
வளங்கொளிக்கும் வாழ்வுவர
மனங்கொண்டு வா
அறியாமை இருளகல
அறிவொளியாய் வா
அரக்ககுணம் அழித்துவிட
அஸ்த்திரமாய் வா
நிலையாக தர்மெங்கும்
நிறுத்திவிட வா
நிம்மதியாய் வாழ்வுவர
நீநினைந்து  வா ! சாதிமதச் சண்டையினை
சம்கரிக்க வா
சமாதானம் குலைப்பார்க்கு
சவுக்காக வா
நீதியொடு சமாதானம்
நிலைநிறுத்த வா
நிட்டூரம் செய்வாரை
குட்டிவிட வா
வாதமிட்டு வம்புசெய்வார்
வாயொடுக்க வா
வாழ்வென்றும் வசந்தம்வர
மனம்சிரித்து வா !

சாந்தியுடன் சமாதானம்
கொண்டுநீ வா
சச்சரவு ஒழித்துவிடும்
தீர்வுடனே வா
காந்திபோல பலமனிதர்
பிறக்கவெண்ணி வா
கசடெல்லாம் கழன்றோட
காத்திரமாய் வா
பூந்தோட்டமாய் உலகு
பொலிந்துவிட வா
புதும்தெம்பு வாழ்வெல்லாம்
புறப்படநீ வா !

ஆட்சிபுரி உள்ளங்கள் மாறவேண்டும்
அவர்மனதில் அறவுணர்வு தோன்றவேண்டும்
அதிகாரம் காட்டுவார் திருந்தவேண்டும்
அமைதிபற்றி அவர்மனது நினைக்கவேண்டும்
காட்டுத்தனம் நாட்டைவிட்டு நீங்கவேண்டும்
கருணைபற்றி யாவருமே எண்ணல் வேண்டும்
நாட்டினிலே நலன்கள்பல பெருகுதற்கு
நன்மைதரும் ஆண்டாக வரவாய்நீயும் !

உன்னைவரவேற்க உவப்புடனே இருக்கின்றோம்
முன்னைக் கவலையெலாம் முழுதாகபோக்கிவிடு
அன்னை எனநினைத்து ஆவலுடனிருக்கின்றோம்
அரவணைத்து ஆதரிக்கும் ஆண்டாகநீவருக !


2. இன்புடன் வாழலாம் !

நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்
கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும்
பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்
இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !

பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்
அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய்
தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்ந்திடுவாய்
வளர்ச்சியை  நினைத்து வாழ்வினை அமைப்பாய் !

போதனை கேட்டிடல் சாதனை ஆகுமே
வேதனை போக்கிட விரும்பிடு நீயுமே
மாதினை மயக்கத்தை வரையறை செய்திட்டால்
காசினி மீதிலே மாசின்றி வாழுவாய் !

இறைவனை எண்ணினால்
இன்புடன் வாழலாம்
குறையெலாம் அகன்றுநீ
நிறைவுடன் வாழலாம்
கறையுடை மனத்தினை
காணாமல் செய்திடில்
உலகினில் உன்னதம்
உன்னுளே உதித்திடும் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.