--தனது மனைவியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழுத்தாளர் தீவகம் இராசலிங்கம் எழுதிய கவிதை இது. -

--தனது மனைவியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழுத்தாளர் தீவகம் இராசலிங்கம் எழுதிய  உரைநடைச்சித்திரம். -

மருமகள் அல்ல... மகள்!

எனக்காக வாழவேண்டும் என்ற
எந்தப் பிரார்த்தனையும்
இல்லாது நின்ற எனது கணப்பொழுதுகளில்
நானும் அவளும் இணைபிரியாதவர்களாக...!

இன்று...அவளுக்கு அகவை அறுபத்தியெட்டு!

கடந்த ஆவணி 31இல், திருமணநாள் நாற்பத்தியெட்டு!

எனக்கான கடமைகள் எதுவோ?
அவற்றை அவள்...
தனக்கானதாக எடுத்துக் கொண்டவைதான்
இன்றைய பொழுதின் எனது வெற்றிகள்!

அதற்காகவேதான் என்தாயும் தந்தையும்
அவளது இறைமாடத்தில்
இருக்கின்ற வரம்பெற்றார்கள்!

காலபரியந்தம் ஒரு கணக்கு இங்கே
பரிமாறப்படுகிறது.

1984 சூலை 23ஆம் திகதி.

ஆடிக்கலவர நினைவு நாள்.!

தமிழ்நிலம் முழுவதுமாக உள்இழுத்துக்கொண்ட
ஒரு ஆமைத் தலையின் அடுக்காக...!

வீதிகள் சலனத்தை இழந்து, பாதைகள்
எவரையும் யாரும் பார்க்க முடியாத-
பனியிறுகிய கனடாப் பொழுதுகள்போல்!

யான் எனது தந்தையின் சடலத்தோடு
சரவணையில்...!

எனது மனைவியும் பிள்ளைகளும் கிளிநொச்சியில்...!

தான் கூட்டி வருவதாகப் புறப்பட்டான் ஒருவன்.
மனைவியின் ஒரு சகோதர முறையானவன்.

அன்று மாலை. ஒரு மொறிஸ் மைனர் கார்...
எனது கிராமத்து அந்தத் தெருவில்
புழுதியால் மூடியபடி வந்து நின்றது...!

வெள்ளைக்கொடி கட்டி, மறிப்போர்க்குக்
காரணம் சொல்லி வீதியில் ஒடிய ஒரே ஒரு
நெய்யெரிவண்டி இதுவாகத்தான் இருக்கும்!

மாமி, மக்கள் சகிதம் மனைவியும்
வந்து இறங்கினார்கள்...!

ஆடி நினைவுநாள் அல்லவா?
குச்சு ஒழுங்கையிலும், ஓடாது
வீச்சடங்கின வாகனங்கள்! ஆனாலும்...

வீடு, வளவு கொள்ளாது, பனங்கிழங்கு
அடுக்கியதுபோல் ஒரு அஞ்சலியில் மக்கள்!

தந்தை இறுமாப்போடு பயணம் ஆகினான்
ஆடி நாளுக்கு அடுத்தநாள்..!

துணிவோடு, தன் கடமைக்கு ஒரு
துணிச்லும் வேண்டுமல்லவா?
வந்தாள்! தந்தாள்! என் வரலாறானாள்!

இது இப்படியிருக்க...,
2003 மாசிமாதம்...
தாயாருக்குச் சுகமில்லையென ஒரு
அறிவித்தல்...
கொழும்புக்குப் பயணமானேன்...

நுகுமான் வைத்தியசாலையில் தாயார் இருந்தார்...!

என்னைக் கண்டதும்... எழும்பி இருந்தார்...
'தாயார் அருகே தங்கமகன் இருக்கப்
பேயே உனக்குப் பேசக் கணக்குண்டோ?' என்றார்
'ஆச்சி எங்கிருந்து வந்தது இந்தத் தெம்பு...' என்றேன்.
'இது சித்திரபுத்திரனார் கதை என்றவர்...
எங்கே மருமகள் என்றார்...'
'வரவில்லை என்றேன்...'
ஏன் கேட்கிறீர்கள் என்றார் பக்கத்தில் நின்ற
காஞ்சனா என்ற உறவினர்.

'அவர் மருமகள் இல்லை. மகள்...' என்றார் என்தாயார்.

இந்தப் பதிலுக்குள் ஒரு அரை நூற்றாண்டுத் தத்துவம்
அடங்கிக் கிடக்கிறது!

என் தந்தையையும் தாயையும் நேசித்த ஒரு
பாத்திரத்திற்குக் கிடைத்த ஒரு பட்டயம்தான்
அந்தப் பதில்...!

நேசிப்பும்... யாசிப்பும்... யோசிப்பும் இன்றிய எனது
பேசாப் பொழுதுகளில் என் தாயின் அந்தச் சொற்களில்
நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன்.

தாயே உன்குரல் இன்னமும் ஒலிக்கிறது...

அவள் மருமகள் இல்லை என்மகள்...!

அவளுக்கு வயது அறுபத்தியெட்டு வாழ்த்துவோம்!


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.