கவிதை: பெயரும், சாதியும்!

Monday, 19 September 2016 05:20 -அரசு எழிலன் - கவிதை
Print

கவிதை: பெயரும், சாதியும்!

எலேய்.... சாதி, அசிங்கம்டா....
பேருக்கு பின்னாடி சாதி போடுரது
பெரிய அசிங்கம்டான்னு  சொன்னேன்...
இல்ல இல்ல... அதுதான் எங்க பாரம்பர்யம்...
அதுதான் எங்க குலவழக்கம்...
காலம் காலமாய் எங்களுக்கான
அடையாளம் பெயரோட
சாதி போடுறதுதான்னு
உணர்ச்சி வசப்பட்டு பேசுச்சு பயபுள்ள...

அட, இம்புட்டு டென்சன் ஆவுரானே...
நெசமாத்தான் இருக்கும் போலுக்கோன்னு நம்பீட்டேன்...
சரிடா தமிழ்க்காரந்தான நீயி?
உன் மூதாதையர் யாருன்னு பாப்போம்னு தேடினேன்....
சங்ககாலப்பெயரில் 473 பேர் கிடைத்தது.
ஒரு பய கூட தன் பெயருக்குப் பின்னால்
வன்னியர் - தேவர்- கவுண்டர் - நாடார் -
ஐயர்- ஐயங்கார் என்று போட்டிருக்கவில்லை.

சங்கம் மருவிய காலப்பெயர்களையும் பார்த்தேன்.

கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் - கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் - ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
ஊகூம்.... இங்கும் சாதிப் பெயரைக் காணோம்.

அட பக்தி இலக்கிய காலத்திலாவது தேடுவோம் என்று தேடிப்பார்த்தேன்...
அங்கும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்றும்,
அப்பர், சம்பந்தர், சுந்தரன் என்றே பெயர்கள் இருக்கின்றனவே ஒழிய
பெயரோடு ஜாதி ஒட்டினை இணைத்துக் கொண்டு திரியும்
கேவல காரியத்தை யாரும் செய்ததாக எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை.

ஆக,  நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை
பாரம்பர்யம் என்றும், கலாச்சாரம், என்றும்,
குல வழக்கம் என்றும்
முன்னோர்கள் மீது பொய்ப்பழி போட்டுக்கொண்டு
சாதியைச் சுமந்து திரிகிறார்கள்
சம கால வன்முறையாளர்கள்
என்பதே தெளிவாய்த்தெரிகிறது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 19 September 2016 05:22