கவிதை: நட்பும் கத்தரிக்கோலும்

Monday, 01 August 2016 20:13 - *மெய்யன் நடராஜ் - கவிதை
Printஏதோ நேர்த்திக்காக
வளர்ந்திருக்கும் ஆட்டை
எப்போது வேண்டுமானாலும்
வெட்டிவிடலாம் எனும்
முனைப்போடு
நமது நட்பின் தலையில்
மஞ்சள் நீரை
தெளித்து விடுகிறார்கள். உன்னை கெடுப்பதே
நானென்று உன் வீட்டிலும்
என்னைக் கெடுப்பதே
நீ என்று என்வீட்டிலும்
நாளாந்தம்
அர்ச்சனை செய்கிறார்கள்
நமது நட்பைக் கடவுளாக்கி.

உனக்கான
திட்டுதல்களை நானும்
எனக்கான
திட்டுதல்களை நீயும்
தாங்கிக் கொள்கின்ற
அவமான நிமிஷங்களில்
சுமைதாங்கிக் கல்லாகிறது
நமது நட்பு.

கையில் காசில்லா காலங்களிலும்
நெஞ்சில் சுமையில்லாக் கோலங்களோடு
சந்தோசங்களுடன்
வானவில் பறவைகளாய்
அழகாகும் நமது நட்பின்
மகத்துவத்துக்கு
நாம் பகிர்ந்து கொண்ட
துண்டு பீடி சாட்சி.

உன்னால் ,
என்னால் இந்த இரண்டும்
நம்மால் என்று ஆன
நமது நட்பின் கரங்களில்
மலர்கள் கொடுக்காத
முற்களுக்கு ஒருபோதும்
புரிவதில்லை
நட்பின் பூக்களில்
விஷங்கள் வழிவதில்லை
என்னும் உண்மை.

துயரங்களை பங்குவைத்து
தோள் சாயும்
தோழமை இல்லா வாழ்க்கை
சாகரத்தின் நடுவே
துடுப்பிழந்த தோணியாய்

வா நண்பனே
நம்மை கத்தரிக்கும்
கற்பனைகளுக்கு முன்னே
தனித்தனியே இருப்பதால்
வலுவில்லை
ஒன்றானால் பயமில்லை
என்னும் வேதாந்தத்தை
உணர்த்தும்
ஒரு கத்தரிக்கோலின்
இரண்டு துண்டுகளாய்
ஒன்றிணைந்து செயலாகுவோம்!


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 01 August 2016 20:43