ச.ராச் கவிதைகள்!

சொந்த வீட்டுக் கதை

"உங்க அப்பாருக்கிட்ட மூனு வீடு இருந்துது
அதுல ஒன்னு என் பேர்ல எழுதி வச்சிருந்தாரு

உங்க அத்தைய கட்டிக்கொடுக்க ஒன்னு
தொழில்ல நஷ்டம்னு ஒன்னு
பஞ்சம் பொழைக்க இந்த ஊருக்கே வந்துட
முடிவெடுத்ததால
கடைசியா என் பேர்ல இருந்த வீடுன்னு
மூனுத்தயும் வித்துட்டாரு
இப்ப அந்த இடமெல்லாம்
லட்சக்கணக்குல போகுதாம்

பாசமா பழகிய மூனாவது வீட்டு பத்மினியம்மா
பழகனத மறந்து
வாடகைவீட்டுக்காரி அவ என்று
தன் புருஷனிடம் காதில் முணுமுணுத்தபடி
பத்திரிகை வைக்காமல் அடுத்த வீட்டுக்கு
தாண்டிக்காலிட்ட  வாதையில்

தூங்கிக்கொண்டிருக்கும் நாளாவதாக பிறந்த ஒருவயது  குழந்தை என்னிடம்
விசனப்பட்டுக்கொண்டிருந்த
வழக்கமான அதே சொந்த வீட்டுக்கதைதான் என்றாலும்
இப்போது கண்ணீர் வராமல்
சொல்லப்பழகியிருந்தாள் அம்மா
என் மகளிடம்."

★★★★★

என் ப்ரியமோட்டர்சைக்கிளே

இருவருமே இன்சுரன்ஸோடு செல்கிறோம்
ஒருவர்மீது ஒருவருக்கு அப்படி என்ன
பற்று இருந்துவிடப்போகிறதென்று.

பின் எதற்கு
அந்த போக்குவரத்து காவலர்
உன் தலையில் செறுகியிருந்த சாவியை
என் அனுமதியின்றி எடுக்கும்போது
என் கோபத்தை திருகிவிடுகிறார்

அவருக்கு தெரிந்திருக்கிறது
நீ எனக்கு எத்தனை உற்றவனென
நான்தான் உன்னை ஓர்மையின்றி விட்டுக்கொடுக்க துணிந்திருந்தேன்

தயவு செய்து என்னை மன்னித்துவிடு
என் ப்ரியமோட்டர்சைக்கிளே...!

★★★★★

அவளின நெருங்கிய...

வேலைக்குச்செல்லும்
குடும்பதலைவியுடன்
தன்னை ஆராதிக்கத்தெரியாத
தன் அருமைத்தெரியாத
பல ஆண்களைப்பற்றி
விசனப்பட்டுக்கொண்டும்
'நீயாய் இருந்தால் என்னை
எப்படி ரசிப்பாய் ?' என்றெல்லாம் கேட்டுக்கொண்டும்

நேரம் போவதே தெரியாமல் தன்னைப்பற்றியே பேசிக்கொண்டு வர
'இதோ உன் வீடு வந்திருச்சி bye.. பாக்கலாம்...' என்று
அவள் மனதை உருவிக்கொண்டு
நழுவுகிறாள்
அவள் வீட்டுக்கு அரவே பிடிக்காத
அவளின் நெருங்கிய விடுமுறை.

★★★★★★
பழம்

கோபத்திலிருந்த
அப்பாவிற்கு
குழந்தை எழுதியது
கொட்டை எழுத்தில்
ஒரு குட்டி
மன்னிப்பு கடிதம்
' அப்பா பழம் '.

★★★★★★

தீட்டு

வீட்டுக்கு தூரமென்று
விளக்கேற்ற என்னை
அழைத்தாள் மனைவி

பூஜையறையில்
தீப்பெட்டியைத்  தேடும்போது

இரண்டு நாள் முன்பு
பின்னிரவு  சம்போகத்தின்போது
அவிழ்த்தெறிந்து
காணாமல்போன
எனது உள்ளாடையை

பூஜையறையின் ஒரு மூளையில்
பிசுபிசுத்த எண்ணைத் திரியோடு
எலி இழுத்துவந்து கிடத்தியிருந்தது

எனக்கு முன்பாகவே
எல்லா தீட்டையும் அறிந்தபடி
எலிவாகனத்தில் வீற்றிருந்தார்
கடவுள்.
★★★★★★★

என் பேரன்பு

பார்வையற்ற விற்பன்னனின்
முதல் போணி

பசிக்கு பக்குவப்படும்
கைக்குழந்தையின் கட்டைவிரல்

இறந்த இளம் இணையின்
நினைவை புணரும்
மனக் கைமதுனம்

மான்சேனை தொண்டை நனைக்கும்
மலைச்சுனை

உழைத்து களைத்த உடம்பில் விழும்
களை இழந்த வெயில்

அன்னார்ந்து பார்க்கும் நாய்க்குட்டிக்காக
'ஆ...' வாங்குவதை நழுவவிடும் குழந்தை

காந்தல் சோற்றின்
கடைசிக் கவளத்தில் நிறையும்
தாயின் வயிறு

குழந்தையிடம் அயன்மையாகும்
செவிலித்தாய்

உணவை மட்டும் நெருங்கவிடும்
பைத்தியக்காரியின் பசி

வரன் தட்டிப்போகும்
பேரிளம்பெண்ணில் ஊறும் தாய்மை

வாடகைப் பெண்ணிடம்
தன் காதலை  தொலைக்க வந்த
காமசோகை

மயிர்கால்களின் ஊனத்தடத்தை
மயிலிறகாய் வருடித்தரும்
அம்மாவின் கைவிரல்கள்

ஏழைப்பெண்ணின் மூக்கில் மின்னும் வடிகட்டியத் தங்கம்

துண்டு பீடி பொறுக்கி புகைக்கும்
மனரோகியின் விரலிடை முழு சிகரெட்

தனிமையில் வசிக்கும்
முதியவள் வீட்டில்
கூடுகட்டி குடியிருக்கும்
அடைக்கலாங்குருவி.

கடைசிவரை குணமாகாத
முதல் காதல் வளர்ப்பு நோய்

இளையராஜாவின் அம்மா பாடல்களில்
விம்மி உடையும் கண்ணீர்த்துளிகள்

மின்சாரமில்லாத வீட்டின் வாசலில்
வேப்பமரமும், நிலா வெளிச்சமும்

குளிகுளித்த ஞமலியின்
உன்மத்தம் பிடித்த தாய்ப்பாசம்

குழந்தை இல்லாத வீட்டில்
சத்தமும், குட்டியும் போடும் பூனை

குன்றின்மணி  எறுக்கம்பூ விற்கும் சிறுமியின் முதல் லாபகரமான
சிறு வியாபாரம்

மூதாட்டி சொல்லும்
அத்தனை உபாதைகளையும்
கவனித்துக் கேட்கும் மருத்துவரின் அனுசரணை.

சாராயமே தன்னை  நியாயப்படுத்தும்
தோட்டியின் போதைகலந்த சேவை

என் பேரன்பு...


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.