கவிதை: பாரதியே வருக!

முண்டாசுக் கவியே!
முத்தமிழின் சுவையே!
முத்தாப்பாய் உன்னைப்பாட
முடியவில்லை என்னால்

மூச்சறுக்கும் முகமூடி
முனகுகிறேன் மனம்வாடி
பொய்மையின் புகலிடமோ
புண்ணிய தேசமிங்கு

வறுமையின் வாழ்விடமோ
வானளவு வளத்தினிங்கு
காணி நிலமெனக்கு
கல்லறையிலும் கிடைக்கவில்லை

புழங்கிட புன்செய் 
நிலமும் எனக்கில்லை
பயிரிட நன்செய்
தண்ணீரும் தானில்லை

இரண்டுமே இல்லாமல்
விவசாயம் செழித்திடுமா!
இயற்கையின் சினத்தை
இன்னும் பார்க்கனுமா!

மும்மாரி மழையிங்கு
முழுவதும் பொய்த்ததே
மாரி பெய்யத்தான்
மந்திரங்கள் ஒலிக்குதே

இயற்கை சிறையிலிட்டு
இதயம் இயங்குமா?
அறியாமை இருளில்
ஆதவன் உதிக்குமா?

முறுக்கு மீசையில்
தீமைகளை சுக்குநூறாய்
நொறுக்கிட  மீண்டும்
பிறந்திடு மகாகவியே!

ஓடி விளையாடி
ஓயவில்லை என்நாடி
கூடி விளையாட
இடமில்லை வீட்டுமாடி

இல்லறம் இன்று
தனித் தீவானதே
நல்லறம் ஏனோ
நசுங்கிப் போனதே

தீஞ்சுடர் சுடவில்லையே!
நின்தீந்தமிழ் சுடுகிறதே!
கயவரின் வேரறுக்க
காலதேவனாய் கடுகிவா

சாதித் தீயிலே
சமத்துவம் எரிகிறதே!
சாத்திரம் பேசியே
சரித்திரம் மறைகிறதே!

கோத்திரம் கொண்டு
குலங்கள் பிரிகிறதே
இறைவன் பெயரில்
பிரிவினை வளர்கிறதே

நெஞ்சம் பொறுக்கவில்லை
நிலைகெட்ட மனிதரை
நித்தம் பார்க்கையில்
சித்தம் கொதிக்கிறது

நற்கல்வி புகட்டிட
நாழிகையும் தாமதிக்காமல்
நானில நாயகனே
மீண்டும் பிறந்துவா

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.