சித்திரைப்புத்தாண்டு!

மானிடம் மலர்க! மண்ணின்
மனிதமும் மலர்க! தெய்வ
வானியல் வருக! மாந்தர்
மறைமொழி வருக! நற்றாள்
பூநிறைத் தழகு கொள்ளும்
புதுவயல் வருக! கன்று
பால்நிறை மடியை முட்டிப்
பருகியே திளைப்ப தாக!

செந்தமிழ் சிறப்ப தாக
சிந்தியல் செழிப்ப தாக
எந்தையர் தமிழர் நாவில்
இறைமொழி துதிப்ப தாக
விந்தைகள் உலகப் பந்தின்
விருட்சமும் வளர்வ தாக
அந்தகர் விழிகள் வெட்டி
அகிலமும் காண்ப தாக!

இத்தனை யுகங்கள் போயும்
இப்புவி மறந்த நேசம்
சித்திரைத் தினமென் றாரச்
செகத்தினில் மலர்வ தாக!
மத்தியில் சமுதா யத்துள்
வாழ்வெட்டுத் தீயர் வீழ்க!   
நத்துகள் முடிக! நாற்றின்
நந்நிலம் பொலிவ தாக!

கவியெனப் பதர்கள் இல்லாக்
காவியம் பிறப்ப தாக
புவியோடும் தமிழாள் நின்று
பூமுகம் சிலிர்ப்ப தாக
அவியொடும் வேள்வி ஏற்றும்
அற்புதம் நிகழ்வ தாக
குவிமுகில் மகளிர் வாழ்வு
கொழுநனைப் பெறுவ ராக!

வஞ்சராய் அழித்த தீயோர்
வாழ்வினில் அழிவ தாக
அஞ்சிடும் படியோர் வாழ்வு
அளித்திடும் அரக்கர் மாள்க!
வஞ்சியாய்த் தமிழாய்ப் போற்றும்
மண்ணெலாம் குவிவ தாக
துஞ்சிடும் மனிதர் துள்ளும்
சித்திரை மலர்க! வாழ்க!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.