கவிதை: முகமூடி - நிலாரவி.

1. கவிதை: முகமூடி

எத்தனை முகமூடிகள்
என் முகத்தின் மேல்
ஒப்பனை என்கிற
பெயரில்தான் வந்து
ஒட்டிக்கொண்டது
என் முதல் முகமூடி

பின்
கற்பிக்கப்பட்டவைகளின் சாயங்கள்
அடுகடுக்காய் பூசிக்கொண்டன
என்முகத்தை

கோபத்திலும்
உணர்ச்சிகளிலும்
கோரமாய் ஒட்டிக்கொண்டவைகளை
நிரந்தரமாக நீக்கிவிட
முயன்று தோற்கிறேன்

நண்பனிடம் பகைவனிடம்
காதலியுடன்
அன்னியனுடன்
எஜமானிடம்
வேலைகாரனிடம்
என
ஒரு வித்தைக்காரன்
பலவண்ண குல்லாக்களை
மாற்றி மாற்றி அணிவது மாதிரி
என் முகமூடிகள் மாறிக்கொண்டிருந்தன...

முகமூடிகளே
முகமாகிப்போன பின்னும்
நிறக்கண்ணாடிகளே
கண்களாகிவிட்ட பின்னும்
என் உலகின் நிறமும் மாறியிருந்தது

எந்த இடத்தில் நானிருக்கிறேன் என
என்னை தேடி சலித்துவிட்டது...

இப்பொதெல்லாம்
கடவுளின் முன்
முகமூடிகளை களைத்துவிட்டு
நிற்பது தான்
பொய்மையாக படுகிறது.


2. காகங்கள்

இருள்நிறப் பறவைகள்
கிளைகள் முழுதும்
நிறைந்திருந்தன.
கரிய அலகும்
கழுத்துச் சாம்பலுமாய்
தீட்டப்பட்ட கருப்பு ஓவியங்கள்
ஓர் உயிர்மெய் எழுத்தின்
குறில் நெடிலாய்
அவைகளின் மொத்த பாஷையும்
முடிவடைந்துவிடுகிறது
அழைப்பாய் ஆனந்தமாய்
அறிவிப்பாய் காதலாய்
சுகமாய் சோகமாய்
அனைத்துமாய்
கரைகின்றன காகங்கள்
அதன் ஒற்றைச் சொல்மொழியில்..
கண்டவுடன் உண்பதில்லை
காகங்கள்
உயிர்களின் உணவு யுத்தத்தில்
கூடுகள்  தாண்டிய   ஆகாரப்பகிர்வு காகங்களுடையது.
தனிஒருவனுக்கு உணவு கிடைத்தவுடன்
சகத்தினை அழைக்கின்றன அவை.
தலைமுறைகளாய்தான்
தொடர்கிறது
காகங்களோடு
மனிதர்களின்
உறவு...
அம்மாவின் படையலிலும்
மூதாதிகளாய் வந்துவிடுகின்றன
சில காகங்கள்...
காகங்கள் என்றும்
நம் சிநேகங்கள்...
விருந்து கண்டு கரையும் பறவைகள்
விருந்தினரின் வரவுக்காகவும் கரைகின்றன
வீடுகளின் கூரைகளில்
கருமையின் அழகை
கரைந்து கரைந்து அறிவிக்கும்
இருள் நிறப் பறவைகளின்
இதயம் முழுவதும் வெளிச்சங்கள்...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.