1. அஞ்சலி: அனலில் நடந்தாள்…(மறைந்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா நினைவாக)

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!  அனலில் நடந்த அங்கயற்கண்ணியவள்
அகண்ட அறிவு, அழகுடையாள்.
அதிகார ஆட்சியில் அமர்ந்தாள்
இதிகாசமானாள் சந்தனப் பேழையுள்.
திருமதி ஆகாமலே ஜெயலலிதா
பெறுமதி அம்மாவென ஆகியவள்.
வருமதியாம் பாத வணக்கத்தால்
சிறுமதியோவெனும் இகழ்வைப் பெற்றாள்.

மாளிகைச் செல்வியிறுதி நகர்வு
மாபெரும் மக்கள் திரளோடு.
மாதுரியமான மொழி அறிவோடு
மாணிக்கப் பரலானாள் இந்தியாவிற்கு.
வறியோருக்கு இரங்கி உதவினாள்.
செறிவான புகழும் பெற்றாள்.
குறியான போராளி அவள்.
அறிவாய் உன்னையெவரும் மறக்கார்.

ஆளுமை, தைரியம், நம்பிக்கை
ஆன்மவுறுதி அனைத்தும் தும்பிக்கை.
ஆராதிக்கவில்லை இவரை ஆயினும்
ஆழ்ந்து கண்ணீருடன் இருதினம்.
ஊருக்குழைப்பது வெகு உத்தமம்.
ஊசாட உடலைப் பேணுதலவசியம்.
ஊகத்தில் அமர்த்தாது அலட்சியமாய்
ஊதுதல் ஊற்றுக் கண்ணாமுயிரிழப்பே.

ஆன்மா அமைதி பெறட்டும்
தமிழ்நாட்டை இறைவன் காக்கட்டும்


2.   காதலனின் கண்ணீர்

காதலன் கண்ணீர் கரைபுரண்டோட
தாடியோடு போத்தல் கையிலாட
காதலை வெறுத்து அவனோட
காப்பிட வேண்டும் இந்நிலையோட.

கல்வி கையகப் படவில்லை
கருமமாற்ற காசு வசப்படவில்லை
கடவுளான பெற்றோர் தடமாகியும்
கடமைகளோடு வாழ்வு தொடருகிறோம்.

காதலனின் கண்ணீர் உலகில்
கார்வையாக காவியப் படகில்.
காதல் காயம் கடக்கில்
காரிய சாதனை சாதிக்கலாம்.

காதலன் கண்ணீர் காலத்திற்கும்
காதோரம் வடியும் கங்கையாம்.
காளையவன் முதுமையிலும் கலக்கம்
காஞ்சிரமாய் கசக்கும் கசக்கும்!


3.  உதிரி பூக்கள்

உதிர முன்னர் நல்லவை செய்
உன் திறமைகளை ஆவணங்கள் ஆக்கு
குணமும் மணமும் குவலயத்திலேற்றும்.
திறமை முயற்சி தேவைகளை நிறைக்கும்.

உதிரிப் பூக்கள் பார்வைக்கு அழகு.
உதிரி பூக்களும் மாலையாகலாம்.
எம்மை நிமிர்ந்து பார்க்க வாழ்ந்தால்
உதிர்ந்த பின்னும் எம்மை உணருவார்

தமிழ் வானில் உன் வரிகள்
அமிழாது ஒளி வீச வழி செய்
உதிரிப் பூவானாலும்    கமழட்டும்
உயர் எண்ணங்களை விதை.


* வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.