யாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...

Sunday, 09 August 2020 00:47 - ஊர்க்குருவி - அரசியல்
Print

Sasikala Raviraj & Sumanthiranதேர்தலொன்றின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அத்தேர்தலில் பங்கு பற்றும் அரசியல் தலைவர்கள் எவருமே அம்முடிவுகள் பற்றிய கருத்துகளைக் கூறக் கூடாது.

தேர்லொன்றில் வாக்குகள் எண்ணப்படுகையில் வேட்பாளர்களின் வாக்குகள் அடிக்கடி மேலேறுவதும் கீழிறங்குவதுமாகவிருக்கும். இது சாதாரணமானது.

முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் எவ்விதம் வேட்பாளர்களுக்கு அவர்களின் நிலை தெரிகின்றது? வாக்கு எண்ணப்படும் இடத்தில் வேட்பாளர்களின் முகவர்கள், கண்காணிப்பாளர்கள் என்று பலர் இருப்பார்களே. முகவர்கள் தம் அலைபேசி மூலம் கட்சிகளின் தலைவர்களுக்குத் தகவலை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்களா? அவ்விதம் நடந்தால் அது எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும்.

வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தம் சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டால் வேட்பாளர்கள் அவர்களை அமைதிப்படுத்த வேண்டும். முடிவுகள் வெளியாகும்வரை பொறுமை காக்க வேண்டும். முடிவுகளில் நம்பிக்கையில்லாவிட்டால் சட்டத்தின் துணையை நாட வேண்டும். அவ்விதம் செய்யாமல் இவ்விதம் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

திருமதி ரவிராஜ் அரசியலுக்குப் புதியவர். அவருக்கு எவ்விதம் கட்சிக்குள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது என்பது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் திரு.சித்தார்த்தன் முதிர்ந்த அரசியல்வாதி அவரும் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் தன் கருத்துகளைக் கூறி நிலைமையைச் சிக்கலாக்கியிருப்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்திருந்ததாகக் கருதினால் சட்டத்தை நாடுங்கள். அதுவே சரியானதொரு செயற்பாடாகவிருக்கும்.

என்னைப்பொறுத்தவரையில் வாக்குகள் பத்திரமாகக் கொண்டு  வரப்பட்டு எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில், கண்காணிப்பாளர்கள், ஏனைய கட்சிகளின் முகவர்கள் என்று பலர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் 4000 வாக்குகளை ஒருவருக்கு மேலதிகமாகப்போடுவதென்பது நடைமுறைச் சாத்தியமாகத் தென்படவில்லை. வாக்களிக்குமிடத்தில் முறைகேடுகள் நடந்திருக்கலாம். கள்ள வாக்குகள் போடப்பட்டிருக்கலாம். அதற்கான சாத்தியங்களுள்ளன. ஆனால் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் அதற்கான சாத்தியங்கள் மிக மிக அரிது.

திருமதி ரவிராஜ் தன் குற்றச்சாட்டுக்குச் சட்டத்தை நாடுவதே சிறந்ததென்பேன். மேலும் அரசியலுக்குப் புதியவரென்பதால் ஓர் ஆலோசனை. கட்சியொன்றிலிருந்து தேர்தலுக்கு நின்றால் எடுத்த எடுப்பிலேயே இவ்விதம் கட்சிக்கெதிராக வெளியார் தூண்டுதலில்  போர்க்கொடி தூக்காதீர்கள். கட்சியின் சக வேட்பாளரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இத்தனைக்கும் சசிகலா ரவிராஜை வேட்பாளராக்கியவர் சுமந்திரன். அதுவும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரச்சினைகளைச் சட்டரீதியாக அணுகுங்கள்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 09 August 2020 01:01