'மக்கள் முதல்வரும்', ஶ்ரீரங்கத்தேர்தல் முடிவும்'

Saturday, 21 February 2015 00:26 - பதிவுகள் - அரசியல்
Print

'மக்கள் முதல்வரும், ஶ்ரீரங்கத்தேர்தல் முடிவும்'

தமிழக முன்னாள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கெதிராகச் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தபோது பின்வருமாறு என் முகநூல் குறிப்பொன்றில் குறிப்பிட்டிருந்தேன்:

"தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட இந்நிலையால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பவர்கள் அவருக்கு வாக்களித்த தமிழகத்தின் பொதுமக்கள்தாம். ஜெயலலிதாவின் செல்வாக்கு உச்சத்திலிருக்கும் சமயத்தில் இந்தத்தீர்ப்பு வந்திருப்பதால், அவரைத் தெய்வமாக நினைக்கும், அவருக்காக அவரது கட்சிக்கு வாக்களித்தவர்கள் (பெரும்பாலானவர்கள் பாமர மக்கள்) இந்தத்தீர்ப்பினை அம்மாவுக்கெதிரான அரசியல் பழிவாங்கலாகவே கருதுவார்கள். இந்தத்தீர்ப்பும் ஒரு விதத்தில் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்தான். தமிழகத்தில் செல்வாக்கினை இழந்த தி.மு.க.வும் ஏனைய கட்சிகளும் தம் செல்வாக்கினைக் கட்டியெழுப்ப முனையும் அதே சமயம், ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்யும். ஆனால் அவர்களின் திட்டங்கள் வெற்றியடையுமா என்பது கேள்விக்குறிதான். ஜெயலலிதா அரசியல்ரீதியில் செல்வாக்கினை இழந்திருக்கும் சந்தர்ப்பத்தில் இது போன்றதொரு தீர்ப்பு வந்திருந்தால் அது ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்திருக்கும். ஆனால் அவர் தமிழக மக்களிடத்தில் செல்வாக்குடனிருக்கும் சமயத்தில் இத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால், இத்தீர்ப்பானது அவர் மீது அனுதாபத்தினை ஏற்படுத்தப்போகின்றது. இதன் விளைவாக அ.தி.மு.கவின் வலிமை தமிழகத்தில் இன்னும் அதிகமாக வளரப்போகின்றது."

அண்மையில் நடைபெற்ற ஶ்ரீரங்கம் நாடாளுமன்றத்தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவு அதனையே வெளிப்படுத்துகின்றது. அன்று ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விட்டதாகத்தமிழகத்து ஊடகங்கள் பல தீர்மானித்துச் செய்திகள், தலையங்கள் என எழுதித்தள்ளின. வெற்றிடத்தைக்கைப்பற்றுவதற்காக நடிகர் ரஜனிகாந்ந்தையும் தேவையில்லாமல் தலைப்புச்செய்தியாக்கினார்கள். விளைவு லிங்கா எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் போனதுடன் முடிந்தது. ரஜனிகாந்துக்கு எல்லாக்கட்சியினர் மத்தியிலும் இரசிகர்கள் உள்ளனர். ஜெயலலிதாவுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருக்கும் சமயம் , அந்த இக்கட்டைப்பாவித்து ரஜனியை முன்னிறுத்திச்செய்திகள் பரவியதே லிங்கா எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் போனதுக்கு முக்கிய காரணமாக எனக்குப் படுகிறது. ஏனெனில் அதிமுக இரசிகர்கள் பலர் லிங்காவைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்க மாட்டார்கள்.

தற்போது அன்று ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் அஸ்தமித்து விட்டதாகக் கனவு கண்டவர்கள் தற்போது ஶ்ரீரங்கம் தேர்தல் தொகுதியின் வெற்றியைப் பற்றிக்குறிப்பிடும்போது வேட்பாளர் வளர்மதி பத்தாவது சுற்றிலேயே அன்று ஜெயலலிதா பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெற்றுவிட்டதாகச் செய்தி வெளியிட்டார்கள். இவர்களது அரசியல் ஆய்வுத்திறன் சில வேளைகளில் நகைப்புக்கிடமாகவே எனக்குப்படுகிறது. ஶ்ரீரங்கம் தொகுதி வெற்றி முழுக்க முழுக்க ஜெயலலிதா என்ற ஆளுமைக்குக் கிடைத்த வெற்றி. சிறப்பு நீதிமன்றமொன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர், ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் ஒருவர், பிரச்சாரமொன்றுக்கும் செல்லாமல், தனது பிரச்சார அறிக்கை ஒன்றின்மூலம் இவ்வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றார் என்றால் அவரது செல்வாக்கு எவ்வளவு தூரம் மக்களிடத்திலிருக்கிறது என்பதல்லவா புலப்படுகிறது. வளர்மதி அன்று ஜெயலலிதா பெற்ற வாக்குகளை பத்தாவது சுற்றில் கடந்திருக்கின்றார் என்றால் , ஜெயலலிதாவின் செல்வாக்கு அன்றிருந்ததை விட இன்று அதிகமாக வளர்ந்திருக்கின்றது என்பதல்லவா அர்த்தமாகின்றது.

இதன்மூலம் ஒன்றை ஜெயலலிதா தமிழக அரசியல்வாதிகளுக்குப் புரிய வைத்திருக்கின்றார். அது: தான் சிறையில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும், அதிமுக அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்பதுதான் அது.

அதே நேரத்தில் அண்மைக்காலமாக ஜெயலலிதாவைப் பற்றிக்குறிப்பிடும் அதிமுகவினர் அவரை 'மக்கள் முதல்வர்' என்று அழைக்கத்தொடங்கியிருக்கின்றார்கள். அது தமிழகத்து அரசியல் ஆய்வாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் கேலிக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. அன்று எம்ஜிஆர் உங்கள் கொள்கை என்ன என்ற கேள்விக்கு 'அண்ணாயிசம்' என்றபோது அது கேலிக்குரியதாக மேற்படி ஆய்வாளர்கள், அரசியல்வாதிகளால் கையாளப்பட்டதுதான் நினைவுக்கு வருகின்றது. கோடிக்கணக்கான தமிழகப்பாமர மக்களிடத்தில் அதைவிடத்திறமையாக எம்ஜிஆர் தன் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்க முடியாது. அண்ணாவின் கொள்கைகளைப்பின்பற்றுவதாக அண்ணாவின் பெயரைக்கொண்டு கட்சியை ஆரம்பித்திருந்தவர் எம்ஜிஆர். அவருக்குத் தெரிந்திருக்கிறது தமிழகத்துப் பாமர மக்களுடன் எவ்விதம் திறமையாகத் தன்னை வெளிப்படுத்த வேண்டுமென்பது. அதனைப்போன்றதுதான் 'மக்கள் முதல்வர்' என்னும் பதமும். இதன் மூலமும், ஶ்ரீரங்கத்தேர்தல் வெற்றியின் மூலமும் ஜெயலலிதா அவரது அரசியல் எதிரிகளுக்குத் தெரிவித்திருக்கும் இரண்டு முக்கியமான விடயங்கள்:

1. சிறையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழகத்து எதிர்கால அரசியலிலிருந்து அவர் இருக்கும்வரையில் அவரை ஒருபோதுமே அகற்ற முடியாது. ஒருவேளை மேல் முறையீட்டு வழக்கில் தோல்வியுற்று சிறை சென்றாலும் அவர் சிறையிலிருந்தவாறே 'மக்கள் முதல்வராக' இருந்து எதிர்காலத்தேர்தல்களை நடாத்துவார். அவரது ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில் அவருக்கு ஏற்பட்ட நிலைக்குக் காரணம் அரசியல் பழிவாங்கல். அவர்கள் அதற்கு மேல் சிந்திக்கப்போவதில்லை. அப்படிச்சிந்திக்க வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல்கள் செய்தவர்கள் எல்லாரும் முதலில் சிறைக்குச் செல்ல வேண்டும்.

2. அ.தி.மு.க கட்சியில் அவரது ஆதிக்கம் இன்னும் அதிகமாகியுள்ளது. அவர் சிறை சென்றாலும் அவருக்கெதிராக யாரும் எழுந்து விட முடியாதவாறு கட்சி மீதான அவரது பிடி இன்னும் அதிகமாகியுள்ளது. அவரால் பதவியில் இல்லாவிட்டாலும், பிரச்சாரத்துக்குச்செல்லாவிட்டாலும் அதிமுகவுக்கு வெற்றிக்கனியைப் பறித்துத்தர முடியும்.

வழக்குகளிலிருந்து மீண்டு வந்தால் அவர் மீண்டும் முதல்வர். இல்லாவிட்டாலும் அவர் சிறையிலிருந்தாலும், அல்லது சிறை மீண்டு வெளியிலிருந்தாலும் அவர்தான் நிழல் முதல்வர் , அதாவது 'மக்கள் முதல்வர்'. இவ்விதமானதொரு சூழலுக்கு மக்களைத்தயார் செய்யவே அதிமுகவினர் மக்கள் முதல்வர் என்னும் பதத்தினைப்பாவிக்கின்றனர். அது ஶ்ரீரங்கம் தேர்தலிலும் வெற்றியளித்திருக்கிறது. எதிர்வரும் சட்டசபைத்தேர்தலிலும் வெற்றியளிக்கப்போகிறது.

Last Updated on Saturday, 21 February 2015 20:33