கவிதை: முகமூடிகளின் உலகில்.. - வ.ந.கிரிதரன் -

இது முகமூடிகளின் உலகம்!
முகமூடிகளின் உலகில்
முகமொழித்து வாழ்தல் இலகுவானது.
உணர்வுகளை அடக்குதல் இலகுவானது.
வன்மம் உள்வைத்து புன்னகைப்பதொன்றும்
அவ்வளவு சிரமமானதொன்றல்ல
முகமூடிகளின் உலகில்.
அகத்தின் அழிவை
அடக்குதலும் இலகுவானதுதான்
முகமூடிகளின் உலகில்.
ஆக,
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசித்திரிதல்
எளிதானதுதான்
முகமூடிகளின் உலகில்.
முகமூடிகள் கண்டு
எள்ளி நகையாடியவர்களைக் காலம்
முகமூடி அணிய வைத்துவிட்டதை
இன்று நான் முகமூடிகளின் உலகிலிருந்து
எண்ணிப்பார்க்கின்றேன்.
எனக்குள் சிரித்துக்கொள்கின்றேன்.
முகமூடிகளின் உலகில் எதுவும் நடக்கலாம்.
முகமூடிகளின் உலகில் நல்லதை மறைக்கலாம்.
முகமூடிகளின் உலகில் தீமை ஆட்சி செய்யலாம்
நன்மை என்னும் போர்வையின் கீழ்.
ஆனால்,
முகமூடிகளின் தீமைகள்
முகமூடிகளின் நன்மைகள்
முன் மறைந்தோடி விடுகின்றன.
தீநுண்மியைத் தடுக்கும் முகமூடிகள்
சமூகச்செல்லரிப்பு தீநுண்மிகளையும்
தடுக்கட்டும். தடுப்பின்
முகமூடிகளே! உங்களுக்குக் கோடி நன்றி!
முகமூடிகளே! உங்களுக்குக் கோடி நன்றி!
முகமூடிகளே! உங்களுக்குக் கோடி நன்றி!