எழுத்தாளர் நிலா குகதாசன் பற்றிய நினைவுகள்.....இன்று பெட்டிகளில் பழைய நூல்களைத் தேடுகையில் நிலா குகதாசனின் 'இன்னொரு நாளில் உயிர்ப்பேன்' கவிதைத்தொகுப்பு அகப்பட்டது. ரோஜா பதிப்பக வெளியீடாக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியான நூல். நூலுக்கு ஓவியர் கருணாவின் ஓவியங்கள் அணி சேர்க்கின்றன.

எழுத்தாளர் நிலா குகதாசன் என்றதும் அவரைப்பற்றிய நினைவுகள் படம் விரிக்கின்றன. அவருடன் நான் அதிகம் நெருங்கிப்பழகியவனல்லன். அவரை அவரது படைப்புகளூடு அதிகம் அறிந்தவன். அவ்வப்போது நிகழ்வுகளில் சந்திக்கையில் கதைத்துள்ளேன். தொண்ணூறுகளில் ஐபிஎம் / செலஸ்டிகா நிறுவனத்தில் (டொன்மில்ஸ் & எக்ளிண்டனில் அமைந்திருந்த)  பணி புரிந்த காலத்தில் அங்கு இயங்கிக்கொண்டிருந்த வேர்சா உணவகத்தில் அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். அங்கு செல்கையில் அவ்வப்போது சிறிது நேரம் உரையாடுவதுண்டு.

கனடாவில் முதன்  முதலில் வீடியோ சஞ்சிகை இளைய நிலாவை அவர் உருவாக்கினார்.
இவ்விதமான சூழலில், கலை, இலக்கியத்துறையில் சாதிப்பதற்கு அதிகமிருக்கையில் இளமைப்பருவத்தில் அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டது துரதிருஷ்ட்டமானது. அவரை நினைக்கையில் கூடவே அவரது புன்னகை தவழும் முகம்தான் நினைவுக்கு வருகின்றது. சிலரின் முகங்களில் எப்பொழுதும புன்னகை தவழ்ந்தபடியிருக்கும், நிலா குகதாசன் அவ்வகையானவர்களிலொருவர்.

நிலா குகதாசனின் 'இன்னொரு நாளில் உயிர்ப்பேன்' தொகுப்பிலுள்ள அவரது கவிதைகள் இலங்கைத் தமிழரின் போர்க்கால அனுபவங்கள் ஏற்படுத்திய பல்வகை உணர்வுகளை வெளிப்படுத்துவன. புகலிட அனுபவங்களை விபரிப்பன. போர் ஏற்படுத்திய அழிவுகள், மனித உரிமை மீறல்கள் பற்றிய சீற்றத்தை வெளிப்படுத்துபவன. குடும்ப உறவுகளின் சிறப்பினை எடுத்துரைப்பன.

நூலை அவர் தனது தந்தைக்குச் சமர்ப்பித்துள்ளார். அறுபது வயதில் பயங்கரவாதியெனக் கைது செய்யப்பட்டு பூசா முகாமில் அடைக்கப்பட்டு மரணித்த தந்தைக்குச் சமர்ப்பித்துள்ளார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.