'வசந்தம்' சஞ்சிகையில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புக்கதை பற்றி...

Saturday, 30 May 2020 11:15 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

எழுத்தாளர் அ.கந்தசாமி (கந்தசாமி 'மாஸ்ட்டர்')

வசந்தம்' சஞ்சிகையின் மார்ச் 10, 1966 இதழில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதை என் கவனத்தைக் கவர்ந்தது. அது ஒரு மெக்சிகோ நாட்டுச் சிறுகதை. எழுதியவர் யுவன் றுல்போ. தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் அ.கந்தசாமி. இவர்தான் எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்கிய பெளதிக ஆசிரியர்களிலொருவர். கல்விப்பொதுத்தராதர சாதாரண, உயர்தர மாணவர்களுக்கான பெளதிகப் பாடத்துக்கு இவரது 'டியூசன்' வகுப்புகள் பிரசித்தம். நானும் இவரிடம் உயர்தர வகுப்புக்கான பெளதிகப் பாடத்துக்கு டியூசன் எடுத்திருக்கின்றேன். கனடாவில் வெளியான 'ழகரம்' சஞ்சிகையின் ஆசிரியரும் இவரே. கதை, சிறுகதை, கவிதை , கட்டுரை என இவரது இலக்கியப் பங்களிப்பும் பரந்தது.

'வசந்தம்' சஞ்சிகையின் ஆசிரியர் எழுத்தாளர் இ.செ.கந்தசாமி. ஆரியர் வீதி, கொழும்புத்துறையில் வசிக்கும் இ.செ.கந்தசாமியால் ஶ்ரீ பார்வதி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் சஞ்சிகையென்று சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கதையை முதலில் வாசித்தபோது அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதிய கதையோ என்று நினைத்தேன். அக்கால சஞ்சிகைகள், பத்திரிகைகள் பலவற்றில் எழுத்தாளரின் பெயர்களில் எழுத்துப்பிழைகள் ஏற்படுவதையும் அவதானித்துள்ளேன். இ.பத்மநாபன் இ.பத்மநாதன் என்றும், நா.சுப்பிரமணியன் நா.சுப்பிரமணியம் என்றும் வெளியாகியுள்ளன. இதுபோல் அ.ந.கந்தசாமி என்பதிலுள்ள ந விடுபட்டுப் போயிருக்குமோ என்னும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அச்சந்தேகம் நீங்கிவிட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் அ.கந்தசாமி என்பதை அறிந்துகொண்டேன்.

இது பற்றிய சந்தேகம் ஏற்பட்டதும் முனைவர் நித்தியானந்தனுடன் தொடர்பு கொண்டு இதனை எழுதியவர் அ.ந.கந்தசாமியா என்று கேட்டிருந்தேன். ஏனெனில் அவரது கட்டுரையொன்றும் வசந்தம் இதழில் வெளியாகியிருந்தது. அவர் திலீப்குமார் (தாய்வீடு ஆசிரியர்) மூலம் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.கந்தசாமியுடன் தொடர்பு கொண்டபோது அ.கந்தசாமி அவர்கள் தானே எழுதியதாக அறிவித்துள்ளதாக அறியத்தந்துள்ளார். நித்தியானந்தன் அவர்களுக்கு நன்றி. எனது அச்சந்தேகத்தை அறிந்ததும் எழுத்தாளர் யேசுராசா அவர்களும் கனடாவில் வசிக்கும் 'ழகரம்' ஆசிரியர் அ.கந்தசாமி எழுதியிருக்கலாம், விசாரித்துப்பாருங்கள் என்று தனது கருத்தைத்தெரிவித்திருந்தார். அவருக்கும் என் நன்றி. உண்மை தெரிந்ததால் இப்பதிவைத்திருத்தியுள்ளேன்.

கந்தசாமி 'மாஸ்ட்டர்' அவர்கள் நவீன விஞ்ஞானி பத்திரிகையிலும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பெளதிகப் பாடத்தையொட்டிக் கட்டுரைகள் எழுதியுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி மொழிபெயர்ப்புச் சிறுகதையை வாசிக்கக் கீழ்வரும் இணைப்பைப் பாவியுங்கள்:

வசந்தம் - http://noolaham.net/project/537/53662/53662.pdf

 

தேடி எடுத்த கதை: அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்புச் சிறுகதையொன்று.....

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 01 June 2020 22:39