இடமிருந்து வலமாக: தேவகாந்தன், கற்சுறா, போல் ராசாத்தி, நான், குமரன் & ஆதவன்
தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலைய அமைப்பினர்) அமைப்பினரின் வருடாந்த ஒன்று கூடல் இன்று குயீன் பலஸ் விருந்து மண்டபத்தில் நடைபெற்றது. நண்பர் எழுத்தாளர் தேவகாந்தன், எழுத்தாளர் கடல்புத்திரனுடன் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். முப்பதாவது ஆண்டில் நடக்கும் நிகழ்வு என்பதால் தேடகம் மலர் ஏதாவது வெளியிடலாம் என்றெண்ணியிருந்தேன். ஆனால் அவர்கள் வெளியிடவில்லை. இவ்விதம் வருடாவருடம் நடக்கும் நிகவுகளில் தேடகம் 'தேடல்' சஞ்சிகையை ஆண்டு மலர் வடிவில் வெளியிடலாம். அது மிகவும் பயன் மிக்கதாகவுமிருக்கும். அதே சமயம் கனடாத் தமிழ்இலக்கியத்துக்குப் பங்களிப்பினை வழங்கிய தேடகம் சஞ்சிகையின் தொடர்ச்சியாகவுமிருக்கும். தேடக நண்பர்கள் சிந்திப்பார்களாக. நிகழ்வில் தேடக நண்பர்கள், ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர். பலர் குடும்பங்களுடன் வருகை தந்திருந்தனர். இளைய தலைமுறையினர் பலரையும் நிகழ்வில் காண முடிந்தது. அவர்கள் நிகழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை ஆர்வமுடன் நடத்திய பாங்கு வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானது.
கனடாவில் மனித உரிமைப் போராளிகள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையத்தினர்) அமைப்பினரும், அவர்கள்தம் சமூக அரசியற் செயற்பாடுகளும்தாம். சமூக, அரசியற் செயற்பாடுகளுடன் அவர்கள் கனடாத்தமிழரின் கலை, இலக்கிய உலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. பெருமைபடத்தக்க பங்களிப்பு. நாடகங்கள் (கனடாவில் நாடகத்துறையின் வளர்ச்சிக்கு வழி சமைத்த நாடகம் அவர்கள் மேடையேற்றிய 'நிரபராதிகளின் காலம்' மொழிபெயர்ப்பு நாடகம் என்பதும் மறக்க முடியாதது; மறுக்கப்படவும் முடியாதது. 'தேடல்' சஞ்சிகையின் மூலம் கனடாத்தமிழ் இலக்கியத்திலும் காத்திரமாகக் கால் பதித்துள்ளனர்.
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானுடன்..
தேடகம் அமைப்பினர் எதிர்காலத்தில் ஆண்டு விழாவினை நடத்தும்போது ஒன்று கூடல் என்பதுடன் நின்று விடாது, நிகழ்வில் ஆண்டு விழா மலர் வெளியீடும், கலை, இலக்கிய நிகழ்வுகள் என நிகழ்ச்சிகள் சிலவற்றையும் சேர்த்துக்கொள்வது சிறப்பாகவிருக்கும் என்பதென் எண்ணம். கூடவே இளையவர்களின் நிகழ்ச்சிகளையும் வழக்கம்போல் இணைத்துக்கொள்ளலாம்.
சேனா & ராதா
நிகழ்வில் கலையுலகைச் சார்ந்த ஆளுமைகள் பலரைக்காண முடிந்தது. பலரைப்பல வருடங்களின்பின் கண்டேன். முகநூலில் அறிமுகமான கலை,இலக்கிய ஆளுமைகள், சமூக , அரசியற் செயற்பாட்டாளர்கள் பலரையும் காண முடிந்தது. சிலருடன்
உரையாடவும் முடிந்தது. கணன் ஸ்வாமி எனக்கு முகநூல் மூலம் அறிமுகமான நண்பர்களிலொருவர். கிடைத்த நேரத்தில் அவருடன் சிறிது நேரம் உரையாட முடிந்தது. அவ்வுரையாடலில் அவர் பல தகவல்களை அறியத்தந்தார். சுமார் பதினைந்து
வருடங்கள் அவர் புதுக்கோட்டையிலுள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்திருக்கின்றார். அவ்வனுபவங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். அங்கு அகதியாக வாழ்ந்த காலகட்டத்தில் 'பரதேசயின் வலித்தொகை' என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையினை நண்பர்களுடன் இணைந்து நடத்திய விபரங்களையும் கூறினார். பின்னர் 2008 வரை மனுதர் என்றொரு வலைப்பதிவினையும் நடத்தியிருக்கின்றார். அது பற்றிய எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டார். அவர் தனது புதுக்கோட்டை அகதி முகாம்அனுபவங்களைப் பதிவு செய்வது மிகவும் அவசியமானது. செய்வாரென்று எதிர்பார்ப்போம்.
இடமிருந்து வலமாக: ராதா, நான், முருகதாஸ் $ கணன் ஸ்வாமி
நண்பர் காலம் செல்வத்துடன் குறுகிய நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. அப்பொழுது அவர் பதிவுகள் இணைய இதழின் கடந்த காலப்படைப்புகளை நான் முகநூலில் பதிவு செய்வது பற்றியும் , அவை நூலுருபெற வேண்டியதன் அவசியம்பற்றி எடுத்துரைத்தார். அவரது கருத்துகளை வரவேற்கின்றேன். உண்மையில் பதிவுகளின் படைப்புகளின் தொகுப்புகள் வெளிவருவது அவசியம். காலம் அதனைச் செயற்படுத்த உதவுமென்று நம்புகின்றேன். நன்றி செல்வம் கருத்துகளுக்கு.
எழுத்தாளர் சின்னத்தம்பி வேலாயுதத்துடன்
ஊடகவியலாளர் (வானொலி) வை,கே,நாதனுடனும் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. நண்பர் எல்லாளனின் நண்பரிவர். எதிர்காலத்தில் எல்லாளன் போன்ற நண்பர்களுடன், அவ்வப்போது கலை, இலக்கிய ஆளுமைகளுடன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தானும் நிச்சயம் இணைந்து கொள்வதாகவும் உறுதியளித்தார். நன்றி வை.கே.நாதன் அவர்களே.

நிகழ்வில் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்), குமரன் (தேடகம்), ராதா (தேடகம்), சேனா (தேடகம்) , மயில் (தேடகம்) எழுத்தாளர் சின்னத்தம்பி வேலாயுதம் (தாயகம் சஞ்சிகையில் ' 'ஈழம் ஒரு தொடர்கதை' தொடர் எழுதியவர்), கலை, இலக்கிய ஆர்வலர் முருகதாஸ், சமூக அரசியற் செயற்பாட்டாளர் ஆதவன், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், ஊடகவியலாளர் (வானொலி) வை.கே.நாதன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் போல் ராசாத்தி சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், ஓவியருமான நந்தா கந்தசாமி (ஜீவன்), முகநூலில் அறிமுகமான நண்பர் சுடர் சரஸ்வதி, எழுத்தாளர் ராவுத்தர், எழுத்தாளர் பா.அ.ஜயகரன், அருள் நாகமுத்து (தேடகம்) என்று பலரைக் காண முடிந்தது. சிலருடன் புகைப்படங்கள் எடுக்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
காலம் செல்வம், தேவகாந்தன் & கடல்புத்திரனுடன்..
நண்பர் கணன் ஸ்வாமி குறிப்பிட்ட மனுதர் வலைப்பதிவினைச் சென்று பார்த்தேன். புதுக்கோட்டை அகதிமுகாமில் வசித்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட 'பரதேசியின் வலித்தொகை' என்னும் பதிவொன்றினையே அவ்வலைப்பூவில் காண முடிந்தது. அதனையும் இன்னுமொரு பதிவாக இங்கு பகிர்ந்துகொள்வேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.