ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) அல்லது 'வண்ணம் பூசிய பறவை'

Wednesday, 04 December 2019 02:17 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) அல்லது 'வண்ணம் பூசிய பறவை'ஜேர்ஸி கொஸின்ஸ்கியைத் தமிழ் இலக்கிய உலகுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய கட்டுரை சுபமங்களா இதழில் வெளியான Being There கட்டுரை. அது அவரது புகழ்பெற்ற நாவல். அளவில் சிறியதானாலும் காரம் மிக்க நாவல். திரைப்படமாகவும் வெளியானது. விம்ப ஆராதனை மிக்க தற்காலச்சமுதாயத்தை விமர்சிக்கும் நாவல். அக்கட்டுரையை எழுதியவர் வ.ந.கிரிதரனாகிய நானே.

ஜேர்ஸி கொஸின்ஸ்கி போலந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபுகுந்து , ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கி , ஆங்கில இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்.

இவரது 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) நாவல் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தில்; முக்கிய படைப்பாகக் கருதப்படும் படைப்பு. 1965இல் வெளியான இந்நாவல் இதுவரை முப்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகயுத்தக் காலத்து மானுட உரிமை மீறல்கள் வாசிப்பவர்தம் இதயங்கள் உறையும் வகையில் சில இடங்களில் மிகவும் குரூரமாக விபரிக்கப்பட்டுள்ளதால் வாசகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யூதச்சிறிவனொருவனை அவனது பெற்றோர் அவனாவது நாசிகளிடமிருந்து தப்பிப்பிழைக்கட்டும் என்னும் எண்ணத்துடன் மனிதரொருவனுடன் அனுப்பி வைக்கின்றனர். இவ்விதம் அனுப்பப்பட்ட அச்சிறுவன் யுத்தச்சூழல் நிலவிய காலகட்டத்தில் கிழக்கைரோப்பிய நாடுகளெங்கும் தப்பிப் பிழைப்பதற்காக அலைந்து திரிகின்றான். பல்வேறு வகைப்பட்ட அனுபவங்களுக்குள்ளாகின்றான். அவற்ற விபரிப்பதே 'நிறமூட்டப்பெற்ற பறவை' நாவல்.

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுடன் இந்நாவல் பற்றி உரையாடியபோது, அந்நாவலால் ஈர்க்கப்பட்ட அவர் அந்நாவலைத் தமிழில் ஸ்நேகா பதிப்பகம் மூலம் வெளியிட விரும்புவதாகக் கூறினார். நாவலிருந்தால் அனுப்பி உதவுமாறும் கூறினார். நானும் அந்நாவலைபெற்று பாலாஜிக்கு அனுப்பினேன். இது பற்றி நண்பர் பாலாஜி என்னுடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் வருமாறு:

"சார் முன்பு நீங்கள் பரிந்துரைத்த ஜெர்ஸி கொஸின்கியின் `பெயின்ட்டட் பேர்ட்' (வண்ணம் பூசிய பறவை) திரைப்படமாக, இந்த ஆண்டு கோவா உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தினை நன்றாகச் செய்திருக்கிறார்கள். தங்களின் கவனத்துக்காக..... நீங்கள் வாங்கியனுப்பியதுதான் சார். நடுவில் கொஞ்ச நாள்கள் பிரம்ம ராஜன் சாரிடமிருந்தது. பிறகு பெரு முருகனிடம் கொடுத்து ஸ்நேகாவுக்குச் செய்யச் சொன்னோம்.நம் புக்தான் சார்....... டியர் சார் ஸ்நேகா அதை வெளியிடவில்லை. மொழிபெயர்ப்பாளர் தன் சொந்த ஆர்வத்தினால் மொழி பெயர்த்ததும் இன்னொரு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுவிட்டார். நண்பர் என்பதால் நானும் நம் கதாநாயகச் சிறுவனைப் போல எதுவும் சொல்ல முடியாமல் விட்டு விட்டேன். தமிழுக்கு இன்னொரு பட்டாம்பூச்சி கிடைத்ததாக நினைத்துக் கொண்டேன்."

நான் பெற்று அனுப்பிய புத்தகத்தை முதலில் எழுத்தாளர் பிரம்மராஜனிடம் கொடுத்திருக்கின்றார்கள். பின்னரே பெரு முருகனிடம் கொடுத்திருக்கின்றார்கள். ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவரும்பொருட்டு அவரிடம் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் மொழிபெயர்த்ததும் எழுத்தாளர் பெரு. முருகன் புலம் பதிப்பகத்துடன் தொடர்பு கொண்டு வெளியிட்டு விட்டார். அந்நூலே 'வண்ணம் பூசிய பறவை' என்னும் பெயரில் வெளியான நூல்.

தற்போது மேற்படி நாவல் திரைப்படமாகவும் வெளியாகி, பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகள் பல பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திலும் காட்சிகள் நூலிலுள்ளதைப்போலவே படமாக்கப்பட்டுள்ளதால் பலர் அதிர்ச்சிக்குள்ளாகி, தொடர்ந்து பார்க்க முடியாமல் இடையில் எழுந்து சென்றதாக அறிய முடிகின்றது.


 

 

 

 

 

 

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 04 December 2019 02:29