வேந்தனார் கட்டுரைகள் - பாகம் 3வேந்தனார் கட்டுரைகள் - பாகம் 2இன்று 'டொராண்டோ'வில் நடைபெற்ற வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீட்டு விழாவில் வேந்தனார் அவர்களின் ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன. இதற்காக வேந்தனார் அவர்களின் மகன் வேந்தனார் இளஞ்சேயைப்பாராட்ட வேண்டும். நிகழ்வு வெற்றிபெற உறுதுணையாக நின்ற அவரது உறவினரான கஜேந்திரன் ஆறுமுகம் குடும்பத்தினர், யாழ்இந்து(கனடா) பழைய மாணவர் சங்கத்தவர்கள் இவர்களுடன் நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்து , நூல்களை வாங்கிச் சென்ற கலை, இலக்கிய ஆர்வலர்கள் , நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கிய  சிறீமதி சங்கீதா கோகுலன் அவர்களின் சுவர சாகித்திய இசைக்கல்லூரிக் குழுவினர், சிறீமதி ரஜனி சக்திரூபனின் அபிநயலாலய நாட்டியாலயத்தினர் ஆகியோருக்கும், அக்கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவிகள் அனைவருக்கும், நிகழ்வில் சிறப்புரையாற்றிய திருமதி புனிதவதி பரமலிங்கம், திரு.அருண்மொழிவர்மன், திரு.உருத்திரமூர்த்தி சேரன் (கவிஞர் சேரன்)  ஆகியோருக்கும், நூல்கள் பற்றிய உரைகளையாற்றிய பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம், திரு. வல்லிபுரம் சுகந்தன், மற்றும் திரு.தீவகம் வே.இராசலிங்கம் ஆகியோருக்கும் நன்றி கூற வேண்டும். நகரில் வேறு பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த நிலையிலும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்வில் தலைமையுரை, ஏற்புரை மற்றும் நன்றியுரை ஆகியவற்றைச் சிறப்பாக வழங்கியிருந்தார் வேந்தனார் இளஞ்சேய். இறுதியில் கலை, நிகழ்வுகளில் பங்குபற்றிய குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்களைத்தரம் பிரித்திருந்த முறை என்னை மிகவும் கவர்ந்தது. குழந்தைகளுக்கு, இளம் மாணவர்களுக்கு, வாசிப்பு அதிகமுள்ள வளர்ந்தவர்களுக்கு என வெளியான நூல்கள் அமைந்திருந்தன. குழந்தைகளுக்கான குழந்தைப்பாடல்களை உள்ளடக்கிய தொகுதிகள் மூன்றும் முறையே குழந்தைமொழி - பாகம் 1, 2 & 3 என்னும் தலைப்புகளில் வெளியாகியிருந்தன. இளம் மாணவர்களுக்கான மாணவர்களுக்கேற்ற வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு 'மாணவர் தமிழ் விருந்து' என்னும் தலைப்பிலும், வளர்ந்தவர்களுக்கான கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி 'தமிழ் இலக்கியச் சோலை' என்னும் தலைப்பிலும் வெளியாகின. இவை தவிர வேந்தனார் பற்றிக் கலை , இலக்கிய ஆளுமைகள் பலர் எழுதிய கவிதைகள் , கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு 'செந்தமிழ்வேந்தன் வேந்தனார் நூற்றாண்டு விழா மலர்' என்னும் பெயரிலும் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான வித்துவான் வேந்தனாரை இன்றைய தலைமுறையினருக்குச் செய்யும் அரும்பணியினை வேந்தனார் இளஞ்சேய் செய்து வருகின்றார். இதற்காக அவரை மீண்டுமொரு தடவை பாராட்டுவதோடு , மேலும் பல வேந்தனாரின் படைப்புகளை உள்ளடக்கிய தொகுதிகள் பலவற்றை வெளியிட வேண்டுமென்ற அவரது கனவும் நனவாகவும் வாழ்த்துகின்றேன்.

மேற்படி நிகழ்வில் வெளியான  `செந்தமிழன் வேந்தன் வேந்தனார் நூற்றாண்டு விழா மல`ரில் `மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்` என்னும் தலைப்பில்  எனது கட்டுரையும் பிரசுரமாகியுள்ளது.


மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார் - வ.ந.கிரிதரன்

வேந்தனார் நூற்றாண்டு மலர்வித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர்  சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக்  கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.

வேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல் கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து  மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.  இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.

வேந்தனாரின் இலக்கிய நோக்கினை அவரது பின்வரும் கவிதை வரிகளினூடு பார்க்கலாம்,

“பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்”


என்று அவர் பாடினார். வித்துவானான அவரே 'பாட்டென்றால் பண்டிதர்க்கு மட்டும் உரிமையல்ல' என்று சாடினார். கூடவே 'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு குமுறுகின்ற கோளரியே கவிஞனாவான்' என்று எடுத்துரைத்தார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய கவிஞன் அவர். 'மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கை' இதுவே அவரது பிரதானமான இலக்கிய நோக்காக நான் கருதுகின்றேன்.

மேலும் மேற்படி ‘கவிஞன்’ என்னும் கவிதையில் அவர் பின்வருமாறும் பாடுவார்:

“பஞ்சனையில் வீற்றிருந்தே பனுவல் பார்த்துப்
பாடுகின்ற கவிதைகளும் பாராள் வேந்தர்க்
கஞ்சியவர் ஆணைவழி அடங்கி நின்றே
ஆக்குகின்ற கவிதைகளும் அழிந்தே போகும்..”

“வீட்டிற்குள் வீற்றிருந்தே கொள்கை யின்றி
விண்ணப்பப் பதிகங்கள் விளம்பு வோரை
ஏட்டிற்குள் கவிஞரென எழுதி னாலும்
இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும்”


அதிகாரத்திற்கஞ்சி, பிழைப்புக்காய் ஆக்கப்படும் கவிதைகளெல்லாம் அழிந்தே போகும் என்று அவர் கூறியவற்றின் உணமையினை நாம் நேரிலேயே பல தடவைகள் பார்த்ததுண்டு. இவ்விதமாகக் கொள்கையின்றி விண்ணப்பப் பதிகங்கள் எழுதுவோரை ஏடுகள் கவிஞரென எழுதி வைத்தாலும் கால ஓட்டத்தில் இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும் என்பதுதான் எத்துணை உண்மையான வார்த்தைகள். பாரதியாரின் வாழ்க்கையே இதற்கொரு சிறந்ததொரு உதாரணம். இறவாத அவரது கவிதைகள் இன்றும் நிலைத்து வாழ, அவரது காலகட்டத்தில் அவரை எள்ளி நகையாடிய எத்தனைபேரை ஏடுகள் சிலாகித்திருக்கும். தூக்கிவைத்துப் புகழ்மொழி பேசியிருக்கும். இன்று அத்தகையவர்களில் பலர் காலவெள்ளத்தில் அடியுண்டு போகவில்லையா? இதுபோல்தான் இன்றைய பத்திரிகை, சஞ்சிகைகள் பலவற்றில் காணப்படும் பெயர்களில் பலவற்றை இன்னும் ஐம்பது வருடங்களில் காண முடியாது போய் விடலாம். அதே சமயம் இன்று காணமுடியாத பல பெயர்கள் , திறமை காரணமாக மீள்பரிசோதனை செய்யப்பட்டு நிலைத்து நிற்கப் போவதையும் வரலாறு பதிவு செய்யும்.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வேந்தனாரின் சிறுவர் இலக்கியத்திற்கான பங்களிப்பு மகத்தானது. சோமசுந்தரப் புலவரைத் தொடர்ந்து இவரது பல சிறுவர் கவிதைகள் தமிழ்ப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டன. வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப் பாடலான ‘அம்மாவின் அன்பு’ என்னும் தலைப்பில் வெளியான ‘காலைத் தூக்கிக் கண்ணிலொற்றி.. ‘  நவாலி சோமசுந்தரப்புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' என்னும் குழந்தைகளுக்கான பாடல் போல் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்குமொரு சிறந்த பாடல். ‘அம்மாவின் அன்பு’  பாடலின் முழு வடிவமும் கீழே:

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா.

புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா.

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா.

பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்த
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளிற் போடும் அம்மா.

பாப்பா மலர்ப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா.

‘நாட்டில் அன்பு’ என்னுமொரு சிறுவர் கவிதையில் வேந்தனார் பின்வருமாறு கூறுவார்:

“பொருளும் நிலமும் எவர்க்கும்
பொதுவாய் இருத்தல் வேண்டும்
அருளுந் தொண்டும் உலகை
ஆளப் பார்க்க வேண்டும்”


பொருளும் நிலமும் எவர்க்கும் பொதுவாய் இருத்தல் வேண்டும் என்னும் தனது எண்ணத்தை அவர் எத்துணை அழகாகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார் பாருங்கள்! பொதுவுடமைத் தத்துவத்தினை இதனைவிட எளிமையாகக் குழந்தைகளுக்குப் புரியும்படி கூற முடியுமா?

இரசிகமணி கனகசெந்திநாதன் வேந்தனாரின் கவிதைகளில் குறிப்பாகச் சிறுவர் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்தவர். வேந்தனாரின் கவிதைகளைப் பற்றி, சிறுவர் கவிதைகளைப் பற்றி ‘வியத்தகு குழந்தைப் பாடல்கள் பாடிய வேந்தனார்’ (தினகரன்), ‘பாட்டி எங்கள் பாட்டி’ (ஈழநாடு), ‘பாலைக் காய்ச்சிச் சீனிபோட்ட பாவலன்’ மற்றும் ‘வித்துவான் வேந்தனார்’ (ஈழகேசரியில் வெளிவந்த ஈழத்துப் பேனா மன்னர்கள் தொடரில்) எனக் கட்டுரைகள் பல எழுதியவர். சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதெல்லாம் அவற்றைப் பற்றிச் சிலாகித்துப் பேசியவர்.

வேந்தனாரது குழந்தைக் கவிதைகளில் காணப்படும் இன்னுமொரு சிறப்பு சக உயிர்களிடத்தில் அவர் காட்டும் அன்பு. பரிவு. ‘மான்’ என்னும் கவிதையில் மான்களை வேட்டையாடும் மானிடர்களின் செயலை

‘குட்டியோடு மான்கள்
கூடித் திரியும் போது
சுட்டு வீழ்த்த லாமோ
துன்பஞ் செய்ய லாமோ’
எனச் சாடுவார். மான்களை

‘துனபப் படுத்தி டாமல்
தோழ ராகக் கொள்வோம்’
என்பார். இவ்விதமே ‘அணில்’ கவிதையிலும்

‘கூட்டில் அணிலைப் பூட்டி – வைத்தல்
கொடுமை கொடுமை யடா
காட்டில் மரத்தில் அணில்கள் – வாழும்
காட்சி இனிய தடா’
என்றும்,

‘துள்ளும் அணிலின் கூட்டம் – எங்கள்
சொந்தத் தோழ ரெடா’
என்றும் பாடுவார்.

‘கூண்டிற் கிளி’ என்னும் கவிதையில் பவளம் என்னும் சிறுமி கூண்டில் கிளியை அடைத்து வைத்திருக்கின்றாள். கூண்டில் அடைத்து வைப்பதன் மூலம் அக்கிளியைப் பூனையிடமிருந்து காப்பதாகவும், அதற்கு உணவுகள் தருவதாகவும் எண்ணுகின்றாள். அவளைப் பார்த்துக் அந்தக் கிளியானது கூண்டினுள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் வாழும் தன் அடிமை வாழ்வினை விளக்குகின்றது. இறுதியில் உண்மையினைப் புரிந்து கொண்ட பவளம் அக்கிளியைப் பார்த்து

‘நல்ல மொழிகள் கூறியே
நாண வைத்தாய் என்னைநீ
செல்வக் கிளியென் தோழியே
சிறையை நீக்கி விடுகின்றேன்.

கூட்டில் உங்கள் குலத்தினைக்
கொண்ட டைத்தல் கொடியது
காட்டில் வானிற் பறந்துநீர்
காணும் இன்பம் பெரியது.’


என்று கூறியவாறு

‘பவளம் கூட்டைத் திறந்தனள்
பச்சைக் கிளியும் பறந்தது
அவளும் வானைப் பார்த்தனள்
அன்புக் குரலுங் கேட்டது’


இவ்விதமாக குழந்தைப் பாடல்களில் சக உயிர்களிடத்தில் அன்பு காட்டுதலை வலியுறுத்தும் வேந்தனார் பெரியவர்களுக்காக எழுதிய கவிதைகளிலும் இவ்விதமே தன் எண்ணங்களைப் பாரதியைப் போல் வெளிப்படுத்துவார். சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளிலொன்று தெய்வங்களுக்குப் பலி கொடுப்பது. அதனைப் பற்றியதொரு கவிதை ‘உலகம் எங்கள் தாயகம்’. அதில் அக்கொடுஞ் செயலினை

‘ ஆட்டை அன்புக் கோவில்முன்
அறுக்கும் கொடுமை அகற்றுவோம்
நாட்டில் இந்தக் கொடுமையோ
நாங்கள் காட்டு மறவரோ.
’ என்று சீற்றத்துடன் கண்டிக்கும் கவிஞர் நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமையினையும் கண்டிப்பார்

‘பாழுஞ் சாதிப் பகுப்பெலாம்
பட்ட தென்று பாடுங்கள்’
என்று.

வேந்தனாரின் இளம் பருவம் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் அடிமைகளாக இருந்த காலகட்டம். அன்றைய சூழலில் அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதை ஆதரித்து பாரதியைப் போல் வேந்தனாரும் கவிதைகளை யாத்தார். அதே வேந்தனார் பின்னர் தமிழின், தமிழரின் இன்றைய நிலையினை எண்ணிப் பொருமினார். இவற்றிற்கான அடிப்படைக் காரணங்கள் பற்றியெல்லாம் அவர் நெஞ்சு தொடுத்த வினாக்களையும், அவற்றிற்கான அவரது விடைகளையும் புலப்படுத்தும் வகையிலுள்ளன அவரது கவிதைகள் குறிப்பாகக் காவியங்கள்.

தமிழரின் இன்றைய தாழ்ந்த நிலைக்குக் காரணங்கள் எவையாகவிருக்கும்? அவரது கவிதைகளினூடு அவற்றைக் காண்போம். தமிழரின் தாழ்ந்த நிலைக்கு முக்கியமான காரணங்களிலிரண்டு சாதிப் பாகுபாடும், சமயப் பிரிவுகளும். இதனையே அவரது ‘வீரர் முரசு’ கவிதையில் வரும் பின்வரும் வரிகள் புலப்படுத்தும்:

‘ ஆளு கின்ற எம்மை யின்றும்
அடிமை யாக வைத்திடும்
தாழு கின்ற சாதி சமயச்
சண்டைக் கான மெரியவே
மூளு கின்ற சுதந்தி ரத்தீ
முனைந்தெ ழுந்த துடிப்பினாற்
சூழு கின்றோம் தமிழ ரென்று
சொல்லி முரசைக் கொட்டுவோம்’


‘வியத்தகு குழந்தைப் பாடல்கள் பாடிய வேந்தனார்’ என்னும் தனது கட்டுரையில் இரசிகமணி கனக் செந்திநாதன் பின்வருமாறு கூடி முடித்திருப்பார்: ” அவரது குழந்தைப் பாடல்கள் தனிநூலாக அழகான படங்களுடன் பெரிய அளவில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்து ஈழத்துக் குழந்தைகளின் நாவை இனிக்கச் செய்தல் வேண்டும் என்பது எனது அவா’ என்ற அவரது அவாவினை வித்துவான் வேந்தனாரின் குடும்பத்தினரின் உதவியுடன் எழுத்தாளர் எஸ்.பொ.வின்’மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்’ (தமிழகம்) பதிப்பகத்தினர் நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.

இவ்விதமாக மக்கள் இலக்கியம் படைத்த எழுத்தாளர் வேந்தனாரின் பங்களிப்பானது தமிழிலக்கியம் பற்றிய அவரது கட்டுரைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும், குழந்தை இலக்கியப்பங்களிப்புக்காகவும் என்றென்றும் நினைவு கூரப்படும். அவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவை; சேர்ப்பவை. வரலாற்றில் நிலைத்து நிற்கும் வளமான படைப்புகள் அவை. ஒன்று மட்டும் உண்மை. பாரதியைப் போல், புதுமைப் பித்தனைப் போல் வேந்தனாரின் வாழ்வு குறுகியதாக அமைந்த போதிலும், அக்குறுகிய காலகட்டத்தில் அவர் சாதித்தவை அளப்பரியன. அவரது படைப்புகள் மேலும் பல மீள்பதிப்புகளாக, புத்தம் புதிய பதிப்புகளாக வெளிவர வேண்டும். இலக்கியமென்ற பெயரில் குப்பைகளையெல்லாம் நூற்றுக் கணக்கில் வெளியிடும் பதிப்பகங்கள், வேந்தனார் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் நூலுருவாக்க வேண்டும். இத்தகைய படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் அவரவர் குடும்பத்தவரே வெளியிட வேண்டுமென்ற நிலை எதிர்காலத்திலாவது மாற வேண்டும். தற்போது வேந்தனாரின்  படைப்புகளையெல்லாம் தேடி எடுத்து வெளியிட்டுவரும் அவரது குடும்பத்தவர்களுக்குத் தமிழ் இலக்கிய உலகு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..