மலர் உதிர்ந்தது!

பொன்னியின் செல்வன் நாவல்பொன்னியின் செல்வன் நாவலின் மையக்கரு பொன்னியின் செல்வனின் மகுடத்தை மதுராந்தகருக்கு விட்டுக்கொடுத்த தியாகத்தை ஒட்டியதாகவிருந்தாலும் நாவலின் நாயகன் பொன்னியின் செல்வனல்லன். வாணர்குலத்து வீரனான வந்தியத்தேவனே நாவலின் நாயகன். நாவல் வந்தியத்தேவன் தன் நண்பன் கந்தமாறனின் தந்தையான கடம்பூர் சம்புவரையரின் அரண்மனையை நோக்கிச் செல்வதுடன் ஆரம்பமாகும் . இடையில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் அவர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நாவலின் இறுதி மீண்டும் வந்தியத்தேவன் கந்தமாறனுடன் சந்திப்பதில் முடிவுறும்.  கந்தமாறனின் தங்கையான மணிமேகலை வந்தியத்தேவன் மீது மிகுந்த காதல் கொள்கின்றாள். அதன் காரணமாகச் சித்தப்பிரமை மிக்கவளாகின்றாள்.

இறுதியில் வந்தியத்தேவனின் அரவணைப்பில் அவன் மடியில் உயிர் துறக்கின்றாள். நாவலில் வாசிப்பவர் உணர்வுகளை அதிரவைக்கும் துயரச் சம்பவம் மணிமேகலையின் மரணம். ஐந்தாம் பாகத்தின் தொண்ணூற்றோராவது அத்தியாயத்தில் முடிவுறும் நாவலின் அத்தியாயத்தலைப்பு : மலர் உதிர்ந்தது.  அந்த மலர் மணிமேகலை. மணிமேகலையின் மறைவினை வெளிப்படுத்தும் ஓவியர் வினுவின் ஓவியத்தையும் , நாவலின் இறுதிப்பக்கத்தையும் இங்குள்ள பக்கங்களில்  காணலாம். தமிழர்தம் இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் (அகமும், புறமும்) சிறப்பித்துக்கூறுகின்றன. பொன்னியின் செல்வனும் காதலையும், வீரத்தையும் சிறப்பித்துக் கூறுமொரு நவகால உரைநடைக் காவியமாகவே நான் கருதுகின்றேன். வந்தியத்தேவன் - குந்தவை காதல், வானதி - இராஜராஜன் காதல், மணிமேகலை - வந்தியத்தேவன் காதல், மந்தாகினி - சுந்தரசோழர் காதல் என்று மானுடர் பலரின் காதலைச் சிறப்பித்துக்கூறும் பொன்னியின் செல்வன் அக்காலத் தமிழரின் வீரத்தையும் சிறப்பித்துக்  கூறுகின்றது. இதனால்தான் நாவல் தமிழர்கள் மத்தியில் தலைமுறைகள் கடந்து இன்றும் விருப்புடன் வாசிக்கப்படுகின்றது.

என்னைப்பொறுத்தவரையில் சிலப்பதிகாரம் , மணிமேகலை போல் தமிழர் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கப்போகுமொரு உரைநடைக்காப்பியம்தான் கல்கியின் பொன்னியில் செல்வன். மக்களை அடையாத எந்தவொரு இலக்கியமும் நிலைத்து நிற்காது. பொன்னியின் செல்வன் விமர்சகர்கள் பலரின் புலமைத்துவ எதிர்ப்புகளையும் மீறி மக்களைச் சென்றடைந்த உரைநடை இலக்கியம். மக்கள் இலக்கியம் நிலைத்து நிற்கும்.

பொன்னியின் செல்வன் கடைசிப்பக்கம்


அட்டைப்பட ஓவியம் தவறான சொற்பிரயோகமா?

எழுத்தாளர் அ.யேசுராசா அட்டைப்படம் பற்றிப் பின்வரும் கருத்தொன்றைத் தனது முகநூற் பதிவொன்றில் கூறியுள்ளார்:

"அட்டைப்  பட  ஓவியம் என்பது! 'மல்லிகை' சிற்றிதழால் பரவலாகி, தற்போது பலர் இவ்வாறே கையாள்கிறார்கள்! அட்டைப் படம் அல்லது அட்டை ஓவியம்  என்று எழுதுவதே சரியானது!"

அட்டைப் படம் என்பதும் சரி. அட்டை ஓவியம் என்பதும் சரி.  அட்டைப்பட ஓவியம் என்பதும் சரியே. அட்டைப்படத்துக்கான ஓவியம் என்று பொருள்படுமல்லவா?  ஆனால் மல்லிகை சஞ்சிகையில் குறிப்பிடப்படும் அட்டைப்பட ஓவியம்  என்பது ஒருவிதத்தில் தவறானது. ஏனெனில் அட்டைப் பட ஓவியங்களாக வெளியானவை பல ஓவியங்கள் அல்ல (சில ஓவியங்களாகவுமிருக்கலாம்).  அவை புகைப்படங்கள். அவை அட்டைப்படப் புகைப்படங்கள்; அட்டைப்பட ஓவியங்களல்ல. ஓவியங்களாக வெளியானவை மட்டும் (அப்படி வெளி வந்திருந்தால்) அட்டைப்பட ஓவியங்கள்.

அ.யேசுராசா: " அட்டைப் படம் என்பது, அட்டையிலுள்ள படம் என்று பொருள்படும்; அட்டை ஓவியம் என்பது அட்டையிலுள்ள ஓவியம் என்று பொருள்படும். இவை எளிமையாகப் புரியக்கூடியவை. ஓவியம் என்பதைப் படம் என எழுதுவதுமுண்டு - ஓவியம் வரைந்தார் ; படம் வரைந்தார் என்கிறமாதிரி. //அட்டைப்பட ஓவியம் என்பதும் சரியே. // - இது, அட்டைப்பட படம் என்கிறமாதிரியாகிறதே! அட்டைக்கான ஓவியம் என்று எழுதலாம்."கிரிதரன் நவரத்தினம் என்கிற ஒருவர் கூறினார்" என்று எழுதலாம் ; "கிரிதரன் நவரத்தினம் என்கிற கிரிதரன் நவரத்தினம் கூறினார்" என்று எழுத முடியாதுதானே?"

கிரிதரன்: " //கிரிதரன் நவரத்தினம் என்கிற கிரிதரன் நவரத்தினம் கூறினார்" என்று எழுத முடியாதுதானே?/ அவ்விதம் அட்டைப்பட ஓவியம் பாவிக்கப்படவில்லையே. 'அட்டைப்பட ஜோக்ஸ்' என்கின்றோம். 'அட்டைப்படச் சிறுகதை' என்கின்றோம். 'அட்டைப்படக் கவிதை' என்கின்றோம். அட்டைப்படக் கட்டுரை என்கின்றோம். அதுபோல் அட்டைப்படத்துக்குரிய ஓவியம் என்பதைக் குறிப்பிட அட்டைப்பட ஓவியம் என்கின்றோம். ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானே. அட்டை ஓவியமும் சரி. அட்டைப் படமும் சரி. அதுபோல் அட்டைப்பட ஓவியமும் சரியே என்பதே என் கருத்து. இங்கு அட்டை , படம் ஆகிய இரு பெயர்ச்சொற்களும் இணைந்து அட்டைப்படம் என்னும் ஓரு பொருளைக் குறிக்கின்றன. இச்சொற்பதத்தில் படம் என்பதைப் பிரித்துத் தனியாகப் பார்க்க முடியாது. 'அட்டைப்படம்' என்னும் சொல்லின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். மல்லிகையில் அட்டைப்பட ஓவியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறான சொற்பதமல்ல என்பதுவே என் கருத்து."

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.