சாண்டில்யன்என் வெகுசன எழுத்து வாசிப்பில் எழுத்தாளர் சாண்டில்யனுக்கும் (இயற்பெயர் பாஷ்யம்) முக்கியமானதோரிடமுண்டு. என் பால்ய பருவத்தில் வீட்டில் அப்பா கல்கி, விகடன், அம்புலிமாமா, கலைமகள், தினமணிக்கதிர், மஞ்சரி என்று தமிழகச் சஞ்சிகைகள் பலவற்றை வாங்கினார். ஆனால் குமுதம் சஞ்சிகையை மட்டும் வாங்கவில்லை. அக்காலத்தில் சாண்டில்யனின் நாவல்கள் குமுதம் சஞ்சிகையிலேயே வெளியாகிக்கொண்டிருந்தன. அதனால் கல்கி, ஜெகசிற்பியன், அகிலன் , நா,பார்த்தசாரதி, மீ.ப.சோமு போன்ற எழுத்தாளர்களின் வரலாற்று நாவல்களையறிந்திருந்த எனக்குச் சாண்டில்யனின் வரலாற்று நாவல்களை அறிந்திருக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

அச்சமயத்தில் வவுனியா மகாவித்தியாலயத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் மாணவரின் வீட்டில் குமுதம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர் மூலமே எனக்குக் குமுதம் சஞ்சிகை முதலில் அறிமுகமாகியது. அதில் வெளியாகிக்கொண்டிருந்த சித்திரக்கதைத்தொடரான 'கடற்கன்னி' என்னை மிகவும் கவரவே அப்பாவிடம் குமுதம் சஞ்சிகையையும் வாங்குமாறு கூறினேன். அப்பாவும் வாங்கத்தொடங்கினார். அப்பொழுது குமுதத்தில் சாண்டில்யனின் ராஜமுத்திரை வெளியாகிக்கொண்டிருந்தது. ஏற்கனவே முதற்பாகம் முடிந்து இரண்டாவது பாகம் தொடங்கியிருந்தது. இரண்டாம் பாகத்தில் இந்திரபானு என்னும் தளபதியே நாயகன். முதற்பாகத்தில் சேரமன்னன் வீரரவியால் கடத்தப்பட்ட அவனது காதலியான பாண்டிய ராஜகுமாரியை மீட்பதில் பெரும்பங்கு வகித்தவன் இந்திரபானு. நான் வாசித்த முதலாவது சாண்டில்யனின் நாவல் ராஜமுத்திரை நாவலின் இரண்டாம் பாகம்தான். வெகுகாலத்துக்குப் பின்னரே ராஜமுத்திரையின் முதற்பாகத்தைப் படித்தேன்.

அதன் பின்னர் ராணிமுத்து பிரசுரங்களாக வெளியான சாண்டில்யனின் ஜீவபூமி, உதயபானு, இளையராணி , மஞ்சள் ஆறு ஆகிய நாவல்களை வாசித்தேன். இவை பெரிய நாவல்களல்ல. இவற்றில் ஜீவபூமி என்னை மிகவும் கவர்ந்த நாவல். அதில்வரும் ராஜபுதனத்து வீரனான ரதன் சந்தாவத் சலும்பரா என்னை மிகவும் கவர்ந்த சாண்டில்யனின் நாயகர்களில் ஒருவர்.

இதன் பின்னர் என் வாழ்க்கை யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மாறியபோதே ஆச்சி வீட்டிலிருந்த பழைய குமுதம் சஞ்சிகைகளில் வெளியாகியிருந்த சாண்டில்யனின் கடல்புறா நாவலின் முதற்பாகத்தின் ஆரம்ப அத்தியாயங்கள் சில கிடைத்தன. அவற்றைப் படித்தபோது இளைய பல்லவனும், காஞ்சனாதேவியும் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அவர்களைக் குமுதத்தில் வரைந்த ஓவியர் லதாவின் ஓவியங்களுக்கும் நான் அடிமையாகிப்போனேன். இளைய பல்லவன் என்னைக் கவர்ந்ததற்கு இன்னுமொரு காரணமுமுண்டு. அது: யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள தொண்டைமானாறுக் கால்வாயை வெட்டுவித்தவன் இவனே என்பது வரலாறு. இவனை வைத்துக் செயங்கொண்டார் கலிங்கத்து வெற்றியை மையமாக வைத்துக் கலிங்கத்துப் பரணி பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முதலாம் குலோத்துங்கனின் படைத்தளபதியான கருணாகரத்தொண்டைமான் வரலாற்றுப் புகழ்மிக்க சோழர் படைத்தளபதிகளில் முதன்மையானவன்.

அதன் பின் நீண்ட காலமாக நான் கடல்புறாவைத் தேடினேன். அந்நாவலின் மூன்று பாகங்களும் பின்னர் யாழ் பொதுசன நூலகத்தில் எனக்குக் கிடைத்தன. அதே சமயம் நாவலின் இரண்டாம் பாகம் அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நிலையில் நண்பர் ஒருவரிடமிருந்து கிடைத்தது. அழகான லதாவின் ஓவியங்களுடனிருந்த அந்தப் பிரதி என்னை மிகவும் கவர்ந்தது.

கடல்புறா நாவலின் முதல் அத்தியாய ஓவியம். ஓவியர் -  லதா.

சில வருடங்களுக்கு முன்னர் கடல்புறாவின் மூன்று பாகங்களும் வெளியானபோது வெளிவந்த லதாவின் ஓவியங்களுடன் இணையத்தில் கிடைத்தன. கடல்புறாவின் ஏனைய பாகங்களையும் ஓவியர் லதாவின் ஓவியங்களுடன் வாசிக்க வேண்டுமென்று என் பதின்ம வயதுகளில் எண்ணினேன். அவ்வாசை அப்போதுதான் நிறைவேறியது.

பேராசிரியர் பசுபதி அவர்களின் 'பசுபதிவுகள்' வலைப்பதிவில் வெளியான சாண்டில்யனின் நினைவு நாட் பதிவின் மூலம் சாண்டில்யனின் நினைவு தினமும் செப்டெம்பர் 11 என்பதையறிந்தேன். அதன் விளைவுதான் இப்பதிவு.

கடல்புறாவுக்கு இன்னுமோர் அரசியல் முக்கியத்துவமுண்டு. ஊடகச் செய்திகளின்படி விடுதலைப்புலிகளின் தலைவர் அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பிடித்த வெகுசனப்புனைகதைகள் இரண்டு: ஒன்று ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'. அடுத்தது சாண்டில்யனின் 'கடல்புறா'. புலிகளின் கப்பல்களிலொன்றுக்குப் பெயரும் 'கடல்புறா'தான்.

இவ்விதமாகப் பல்வகைகளில் கடல்புறாவுக்கு முக்கியத்துவமிருந்தது. ஶ்ரீலங்கா புத்தகசாலையில் புத்தக அலமாரிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடல்புறாவின் மூன்று பாகங்களையும் வாங்கப்பணமற்று ( மூன்று பாகங்களும் ரூபா 120 விலையென்று ஞாபகம்) ஆசையுடன் அவற்றைப்பார்த்து ,பத்து ரூபாவுக்கு சாண்டில்யனின் 'பல்லவ திலகம்' நாவலை வாங்கி வந்ததை இப்போதும் நினைவு கூருகின்றேன்.

ராணி முத்து  பிரசுரமாக 'ஜீவபூமி' -

இக்கடல்புறா என்றதும் நினைவுக்கு வருமின்னுமொரு விடயம்: என் உறவுக்கார அக்காவொருத்தியின் சிநேகிதியொருவர் ஒவ்வொரு முறை அவரைச் சந்தித்து மீண்டும் வீடு திரும்புகையிலும் அவரை அவரது வீடு மட்டும் நான் பத்திரமாகக் கூட்டிச் சென்று விடுவதற்காகச் செய்யும் தந்திரம் அவரது சித்தன்கேணி உறவினரிடமிருக்கும் கடல்புறா நாவலை மறுமுறை வருகையில் கொண்டு வந்து தருவதாக அளிக்கும் சத்தியம்தான். இவ்விதம் அவர் பல தடவைகள் நம்பிக்கையூட்டியிருப்பார். ஆனால் கடல்புறா ஒருபோதும் கிடைத்ததேயில்லை.

இவ்விதமாகப் பால்ய , பதின்ம வயதுகளில் என்னை ஈர்த்த நாவல்களில் சிலவற்றை ஒரு நினைவுக்காக வாங்கி வைத்திருக்கின்றேன். அவற்றுள் கடல்புறாவும் ஒன்று. அதே கடல்புறாவின் மூன்று பாகங்களையும் 'டொரோண்டோ' நூலகக் கிளையொன்று விற்பனைக்குப் போடப்பட்டிருந்தபோது வாங்கினேன். அம்மூன்று பாகங்களையும் நண்பரொருவருக்குக் கொடுத்துவிட்டேன்.

வானதி பதிப்பகம் வெளியிட்ட கடல்புறா அட்டை ஓவியம். ஓவியர் - லதா.

வானதி பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் அட்டைப்படம் சிறப்பாக அமைந்த நூல்களிலொன்று கடல்புறா என்பேன்.ஓவியர் லதாவின் கண்ணைக்கவரும் 'கடல்புறா' அட்டைப்பட ஓவியமே கடல்புறா என்றதும் முதலில் நினைவுக்கு வரும் ஓவியம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.