தொடர் நாவல்: மனப்பெண் (3)

Wednesday, 02 September 2020 12:05 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

அத்தியாயம் மூன்று: நித்திராதேவியின் தழுவலில் தன்னை  மறந்த காளை!

தொடர் நாவல்: "மனப்பெண் " - வ.ந.கிரிதரன் -மணிவண்ணன் வீட்டை நெருங்கியபோது இரவு மணி  ஒன்பதைத்தாண்டி விட்டிருந்தது. முழு நகரும் முழுநிலவின் தண்ணொளியில் குளித்துக்கொண்டிருந்தது.

"டேய் கேசவா, வீட்டை வந்து கொஞ்ச நேரம் கதைச்சுட்டுப் போயேன். அம்மா தோசை சுட்டி வைத்திருப்பா.அதையும் கொஞ்சம் சாப்பிட்டிடுப் போ"

மணிவண்ணன் இவ்விதம் கேட்கவும் கேசவனுக்கும் அது சரியென்று தோன்றியது. மணிவண்ணனின் புத்தக அலமாரியிலிருந்தும் மேலும் சில நூல்களை எடுக்கலாமென்றும் தனக்குள் எண்ணிக்கொண்டான். இதற்கிடையில் நண்பர்களிருவரும் வீட்டினுள் நுழைவதைக் கண்ட மணிவண்ணனின் அம்மா "தோசை சுட்டு சாப்பாட்டு மேசையிலை மூடி வைச்சிருக்கு. இரண்டு பேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ. இன்னும் தேவையென்றால் சொல்லுங்கோ. சுட்டுத்தாறன்" முன் கூடத்துக்குச் சென்று தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தாள். அருகிலிருந்த மேசையில் ஏதோ படித்துக்கொண்டிருந்தாள் இந்திரா.

"ஓமம்மா.தேவையென்றால் சொல்லுறன். இல்லையென்றால் நானே சுட்டுச் சாப்பிடுறன்" என்று பதிலுக்குக் கூறியபடியே மணிவண்ணன் கேசவனை அழைத்துக்கொண்டு முன் விறாந்தையின் இடது பக்கத்திலிருந்த தனது அறைக்குள் சென்றான். அங்கு அவனுக்கென்றொரு புத்தக அலமாரியிருந்தது. நூல்கள், சஞ்சிகைகளில் வெளியாகிப் 'பைண்டு; செய்யப்பட்ட நாவல்கள் அதில் இடம் பிடித்திருந்தன.

"கேசவா, ஏதாவது குடிக்கக் கொண்டு வரட்டா?"

"எனக்குமொரு கோப்பி போட்டுக்கொண்டு வாடா மணி'

மணிவண்ணன் கோப்பிக்கு அடிமையாகிவிட்டிருந்தான். கேசவனும் அவனைப்போல் ஒரு கோப்பி பைத்தியம்தான். மணிவண்ணன் கோப்பி போட்டுக்கொண்டு வரச் சென்ற இடைவெளியைப்பாவித்து கேசவன் மணிவண்ணனின் புத்தக அலமாரியைத் துலாவத்தொடங்கினான். கல்கியில் வெளியான நாவல்கள் பல அந்த அலமாரியில்  இடம் பிடித்திருந்தன. அவனுக்குப் பிடித்த ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' , கல்கியின் 'பொன்னியின் செல்வன்' , காண்டேகரின் நாவல்கள் எனப் பல நாவல்களிருந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றைக் கேசவன் ஏற்கனவே வாசித்திருந்தான்.

இதற்கிடையில் மணிவண்ணன் பாற்கோப்பியுடன் வந்தான்.

மணிவண்ணனின் அந்த அறை கட்டில், அலமாரி, படிக்கும் மேசை , கதிரையுடன் விளங்கிய அவனது தேவைகளுக்குப் போதுமானதொரு சிற்றறை. ஜன்னலைத் திறந்து விட்டான். ஜன்னைலினூடு விரிந்திருந்த இரவு வானும், முழுநிலவும் அருகில் சுடர்களும் தெரிந்தன. வவ்வால்கள் அடிக்கடி பறந்துகொண்டிருந்தன. சுவரில் இரண்டு பல்லிகள் விளக்கொளியில் அடிக்கடி வந்து நிற்கும் பூச்சிகளை எதிர்பார்த்துக்காத்திருந்தன.

மணிவண்ணன் உரையாடலை ஆரம்பித்தான்.

"கேசவா, நீ அன்றைக்குச் சொன்னாயே வரலாற்றுப் பொருள்முதல்வாதமென்று. .எனக்குச் சரியாக இன்னும் பிடிபடேலை. சுருக்கமா இன்னுமொருக்கா சொல்லுறாயா?"

கேசவன் ஓரளவுக்கு மார்க்சியக் கோட்பாடுகளை அறிந்து வைத்திருந்தான். அறிந்து வைத்திருந்த அளவில் தர்க்கரீதியாக அவனால் அக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இன்னும் அவன் அறிய வேண்டியவை நிறைய இருந்தன. ஆனால் அறிந்திருந்த அடிப்படைக்கருதுகோள்கள் அவனுக்கு அக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளப்போதுமானவையாகவிருந்தன. தனக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக்கொடுப்பதில் அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியேயடைந்தான். அவ்விதம் சொல்லிக்கொடுக்க அவன் தயங்கியதேயில்லை.

"வரலாற்றுப்பொருள்முதல்வாதம் என்ன கூறுகிறதென்றால்.. மானுட சமுதாய அமைப்புகளை வரலாற்றினூடு ஆராய்கிறது. எப்பொழுதுமே உற்பத்தியுடனுள்ள மானுட உறவுகள்தாம் ஒவ்வொரு காலகட்டச் சமுதாய அமைப்புகளையும் தீர்மானிக்கின்றன. ஆதியில் மானுடர் குழுக்களாக வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தாயொருத்தியே தலைவியாகவிருந்தாள். காடுகளில் குகைகளில் வாழ்ந்து வந்த சமுதாயம் ஆற்றங்கரைகளில் குடியேறத்தொடங்கியது. பயிரிட்டு வாழப்பழகிக்கொண்டது. குழு வாழ்க்கை நீங்கிக் குடும்பம் என்னும் அமைப்பு உருவாகியது. அதுவரை தாய் வழிச் சமுதாய அமைப்பு முறை நிலவிய மானுட சமுதாயத்தில் ஒருவன், ஒருத்தி என்னும் குடும்ப முறை ஏற்பட்டதும் பெண் தன் உரிமைகளைப் படிப்படியாக இழக்கத்தொடங்கினாள். குடும்பத்தலைவனான ஆணே அக்குடும்பத்தைக்  காப்பவனானான். குடும்பத்தலைவியான பெண்ணோ வீட்டிற்குள் முடங்கத்தொடங்கினாள். இது பற்றி எங்கெல்ஸ் சிறப்பானதொரு நூல் எழுதியுள்ளார். கொண்டு வந்து தாறன்,  வாசித்துப்பார். பின்னர் அடிமை உடமைச் சமுதாய அமைப்பு முறை நிலவியது. அதன் பின்னர் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு  முறை நிலவியது. அதன்  பின்னர் முதலாளித்துவ சமுதாய அமைப்பு முறை நிலவியது. "

இவ்விதமாகத் தானறிந்தவற்றைக் கேசவன் மணிவண்ணனுக்கு விபரித்தான். அவன் தொடர்ந்தும் கூறினான்:

"ஆதிக்குழுக்களில் அறியாமை நிலவியது. ஆனால் அங்கு பொதுவுடமை நிலவியது. பின்னர் ஏற்பட்ட சமுதாயத்தில் குறிப்பாக மனித சமுதாயம் மதம், சாதி, மொழி, இனம் , வர்க்கம் என்று பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு போனது. இவ்விதம் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு மானுட சமுதாயம் முதலாளித்துவ சமுதாய அமைப்பில் முதலாளி , தொழிலாளி என்னும் இரு வர்க்கங்களாகப் பிளவுண்டது. இவ்விரு வர்க்கங்களில் பெரும்பான்மை வர்க்கம் தொழிலாள வர்க்கமே. ஆனால் அப்பெருமை வர்க்கத்தை ஆட்சி செய்வது சிறுபான்மை வர்க்கமான முதலாளித்துவ வர்க்கம். ஆனால் பெரும்பான்மை வர்க்கமான தொழிலாள வர்க்கத்தினை ஆட்சி செய்யும் சிறுபானமை வர்க்கமான முதலாளித்துவ வர்க்கம் கூறுகின்றது அதுவே உண்மயான ஜனநாயகமென்று. அதெப்படி முறையான , நீதியான ஜனநாயகமாகவிருக்க முடியும்?"

மணிவண்ணனுக்கும் கேசவனின் கேள்வி நியாயமாகவே தோன்றியது.

"கேசவன், நீ கூறுவதே சரி. அது உண்மையான ஜனநாயகமாகவிருக்க முடியாது. வர்க்கரீதியாகப் பார்த்தால் பெரும்பான்மை வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்திடமே ஆட்சி இருக்க வேண்டும். அதுதான் சரியாக எனக்கும் தோன்றுகின்றது."

கேசவனுக்கு மணிவண்ணன் விரைவாகத் தான் கூறியவற்றைப் புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. அவன் மேலும் தொடர்ந்தான்:

"இதனைத்தான் மார்க்சியம் கூறுகின்றது. முதலில் சிறுபான்மை வர்க்கத்திடமிருந்து ஆட்சியைப் பறித்தெடுத்துப் பெரும்பான்மை வர்க்கமான தொழிலாள வர்க்கத்திடம் கொடுக்க வேண்டும். அவ்விதம் ஆட்சியைத் தொழிலாள வர்க்கம் கைப்பற்றினாலும் அதனைத் தட்டிப்பறிக்க ஆட்சியை இழந்த முதலாளித்துவ அமைப்பு கடுமையாக முயற்சி செய்யும். மீண்டும் தனியுடமைச் சமுதாய அமைப்பைக்கொண்டு வர முயற்சி செய்யும் . அதைத்தடுப்பதற்காகத்தான் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய தொழிலாள வர்க்கம் அதைத்தக்க வைப்பதற்காக இடைக்காலச் சர்வாதிகாரத்தைக் கடுமையாக அமுல் படுத்த வேண்டும். பொதுவுடமைச் சமுதாயத்தை நிலைநிறுத்துவதற்காக அச்சர்வாதிகாரம் மிகவும் அவசியம். அவ்விதம் செய்தால் இறுதியில் மானுட சமுதாயம் கம்யூனிச சமுதாய அமைப்பை அடையும். அங்கு அரசு என்பதே இருக்காது. மானுடர் யாவரும் தமது மானுடப்பணிகளைச் செய்வார்கள் எவ்விதம் அரசுகளுமில்லாமல்."

கேசவன் சென்று நீண்ட நேரமாகியும் மணிவண்ணனின் காதுகளில் கேசவனின் சொற்களே ஒலித்துக்கொண்டிருந்தன. அச்சமயம் அவனுக்கு ஓரெண்ணமெழுந்தது. எதற்காக இலங்கையில் வர்க்கப்புரட்சியை ஆதரிக்கும் தென்னிலங்கை இடதுசாரிகள் இனவாத அரசான ஶ்ரீமா அம்மையாரின் அரசுடன் ஒட்டியிருக்கின்றார்கள். எதற்காகத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க முடியவில்லை? அடுத்தமுறை கேசவனைச் சந்திக்கும்போது இக்கேள்விகளையெல்லாம் மறக்காமல் கேட்டுவிடமேன்று எண்ணியவாறு படுக்கையில் புரண்டபோதும் நித்திராதேவி அவனை அணைக்க மாட்டாளென்று நீண்ட நேரம் அடம் பிடித்தாள். அடுத்த நாள் அதிகாலை டியூசனுக்குச் செல்ல வேண்டும். அவனது உள்ளங் கவர்ந்த காதலியான சந்திரமதிக்குக் கடிதம் கொடுக்க வேண்டும். இவ்விதம் பல முக்கிய விடயங்களிருக்கையில் அவனைத்தழுவ நித்திராதேவி முரண்டுபிடித்துக்கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் அவனது சிந்தையில் கார்க்கியின் தாய் நாவலின் நாயகன் பாவெலின் நினவு தோன்றியது. பாவெலின்  துரதிருஷ்ட்டம் பிடித்த நாவலின் ஆரம்பத்திலேயே மரணித்த அவனது தந்தையின்  நினைவு தோன்றியது. அடக்கு ஒடுக்குமுறைகள் நிலவிய அவன் வாழ்ந்த சமுதாய  அமைப்பு நினைவுக்கு வந்தது.

இறுதியாக அவன் மேல் இரக்கப்பட்டு நித்திராதேவி அவனை அணைத்துத் தழுவ முடிவு செய்தாள். கண்கள் சொருக ஆரம்பிக்கையில் அவன் சந்திரமதியை நினைக்க விரும்பினான். அவளது கரிய விழிகளை, பொட்டு முகத்தை, சுருள் முடியை, மயக்கும் முறுவலை, ஆடி அசைந்து நடைபயிலும் இடுப்பை நினைத்தான். அவன் அவளிடம் கடிதத்தைக் கொடுத்தபோது அவள் வெட்கத்துடன் அவனை நோக்கிச் சிரித்ததாக உணர்ந்தான். இவ்விதமாக நித்திராதேவியின் இறுக்கம் மிகுந்த அணைப்பில் தன்னை மறந்து விழித்தபோது காலை மணி பத்தைத்தாண்டி விட்டிருந்தது.

[தொடரும்]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 07 October 2020 00:51