கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

Saturday, 29 August 2020 21:34 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

LOCKDOWN LYRICS - TAMIL POEMS IN TRANSLATION

கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு டிஸ்கவரி புக் பலஸ் வெளியீடாக LOCKDOWN LYRICKS என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் இக்கவிதையின் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றுள்ளது.

கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின. அந்நரிக்குடும்பத்தின் புகைப்படத்தையே இங்குள்ள கவிதையுடன் காண்கின்றீர்கள். அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.


கவிதை: கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

- வ.ந.கிரிதரன் -

மாநகர் துஞ்சும் நள்ளிரவில்
வெளியே வந்தேன்.
நுண்கிருமியின் தாக்கம்.
சுருண்டு கிடந்தது மாநகர்
உந்துருளியில் நகர்வலம்
வந்தாலென்ன? வந்தேன்.
வாகனவெள்ளம் பாயும் நதிகள்
வற்றாதவை வற்றிக்கிடந்தன.
கட்டடக்காட்டில் இருள்
கவிந்து கிடந்தது.
நிசப்தம் நிலவியது நகரெங்கும்.

இயற்கையைச் சுகித்துறங்குகிறதா
இந்த மாநகர்?

என் நகர்வலம் தொடர்கிறது.
தொலைவில் ஒண்டாரியொ வாவி
விரிந்து கிடந்தது.
வாவிக்கரையில் குழந்தையை
வாரிமுகர்ந்தபடி நரி அன்னை..
வீதியை ஊடறுத்து மான்கள் சில
விரைந்து மறைந்தன.

மானுடரின் மெளனத்தில்
மிருகங்களின் புத்துயிர்ப்பு

ஓசோன் துவாரம் சிறுத்ததாம்;
ஓடும் கங்கை நீர் தெளிந்ததாம்.
அத்தியாவசியச் செலவில் வாழ்வில்
அத்தியாவசியமற்ற செலவுகள்
அருகினவாம்..

நகர்வலம் முடிந்து மீள்கையில்
மென்துயரில் தோய்ந்ததென்
நெஞ்சம்.
தெளிவிழக்கப்போகின்ற நதிகளை,
உலகை எண்ணினேன்.

LOCKDOWN LYRICS - TAMIL POEMS IN TRANSLATION

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 31 August 2020 02:21