ஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு!கடந்த இரு நாட்களாக பதிவிடும் மனநிலையில்லை. இதற்குக் காரணம் ஓவியர் நகுலேஸ்வரி (இயற்பெயர் மீனகுமாரி நகுலன்) அவர்களின் மறைவுதான், இவர் என் அம்மாவின் இளைய சகோதரியும் , முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையுமான அமரர் நகுலேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் புதல்வி. குழந்தைப்பருவத்திலிருந்து நான் அறிந்த, நான் நன்கு பழகிய ஒருவர். எனக்கு அக்கா முறையானவர். தனது அறுபத்து நான்காவது வயதில் மாரடைப்பினால் மறைந்துவிட்டார். சிறந்த ஓவியர். இவரது ஓவியங்கள் சிலவற்றை இங்கு சென்ற வருடம் பதிவு செய்திருந்தேன். உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே இவர் இவ்விதம் ஓவியங்கள் வரைவது தெரியும். அவரும் அத்துடன் திருப்தியடைந்தவராகவேயிருந்தார். இவரை இத்துறையில் மேலும் ஊக்குவிப்பதற்காகவே பதிவுகள் இணைய இதழிலும், முகநூலிலும் இவரது ஓவியங்கள் சிலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அது அவருக்கு மகிழ்ச்சியைத்தந்தது. தொடர்ந்து இத்துறையில் அதிகமாக ஈடுபடுவாரென்றெண்ணியிருந்தேன். அது இனி நடைபெறப்போவதில்லை. அவரது இறுதிச் சடங்கும் அவரது விருப்புக்கேற்ப குடும்பத்தவர்கள், உறவினர்களுக்கு மட்டுமுரிய அந்தரங்க நிகழ்வாக அமைந்து விட்டது.

இவரது மறைவு குழந்தைப் பருவத்து நினைவுகள் பலவற்றை நினைவூட்டிவிட்டது. பாடசாலை விடுமுறை நாட்களில் சின்னம்மாவின் குழந்தைகளுடன் ஆச்சி வவுனியாவுக்கு வந்து விடுவார். அப்பொழுது நாம் வவுனியாவில் வசித்து வந்தோம். இல்லாவிட்டால் நாம் யாழ்ப்பாணத்துக்குச் சென்று விடுவோம். அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் பார்த்த திரைப்படங்களின் கதைகளைச் சுவாரசியமாக எங்களுக்குக் கூறுவார். நாங்கள் சுற்றியிருந்து ஆவலுடன் கேட்போம். அவ்விதம் கூறிய திரைப்படங்களிலொன்று வாத்தியாரின் 'கன்னித்தாய்'. அக்கா என்னும் உரிமையுடன் 'டேய்..' என்று செல்லமாக அழைப்பார். அந்த அழைப்பை இனி நான் கேட்கப்போவதில்லை.

நாங்கள் எல்லோருமே தீவிர வாசகர்கள். வெகுசன இதழ்களில் மூழ்கிக்கிடப்போம். இவரது ஓவியத்திறமையை ஊக்குவித்தவர் ஓவியர் ஜெயராஜ். ஆனந்த விகடனில் தொடர்கதைகளுக்கு ஓவியர் ஜெயராஜ் வரையும் ஓவியங்களை அப்படியே பிரதிபண்ணி ஓவியங்களை வரைவார். அவர் எழுபதுகளிலேயே கனடா சென்று விட்டார். அப்பொழுது ஓவியர் ஜெயராஜ் தபால் மூலம் நடத்திய ஓவியப்பள்ளியில் இவர் சேர்ந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அல்லது அவருடன் தொடர்புகளை மட்டுமே கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை. பின்னர் இவர் 'வாட்டர்கலர்' மூலம் அழகான ஓவியங்கள் பலவற்றை வரைவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். ஆனால் அவற்றைக் குடும்பத்தவர், நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டுமே திருப்தி கொண்டிருந்தார்.

ஓவியர் நகுலேஸ்வரியின் (மீனகுமாரி நகுலன்)  ஓவியம்

கனடாவின் பொருளியல் வாழ்க்கைக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் ஓய்வு பெற்ற பின்னர், குழந்தைகளெல்லாம் வளர்ந்து தம் வாழ்வைக் கவனிக்கத்தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் பொழுதுபோக்குக்காக ஓவியத்தின்பால் அதிகம் கவனத்தைச் செலுத்ததொடங்கினார். அவ்வாறான சமயங்களில் தான் அண்மைக்காலத்தில் இவர் வரைந்த சில ஓவியங்களைப்பார்த்தேன். எனக்குப் பிரமிப்பாகவிருந்தது. அவ்வோவியங்களைப் பார்த்ததும் இவரது ஓவியத்திறமை தெளிவாகப்புலப்பட்டது. மலர்கள், குருவி, மரங்களென இயற்கைக்காட்சிகளை பார்ப்பவர் உள்ளங்களைக் கவரும் வகையில் வரைந்திருந்தார். அவ்விதமே எனக்குத் தென்பட்டது. அவரை இத்துறையில் ஊக்கப்படுத்துவதற்காக 'ஓவியர் நகுலேஸ்வரி' என்னும் பெயரில் அவரது ஓவியங்கள் சிலவற்றுடன் பதிவொன்றினை முகநூலிலும் , பதிவுகள் இணைய இதழிலும் வெளியிட்டேன். அவரது ஓவியங்களைப்பற்றி எழுத்தாளரும், ஓவியருமான ஜெயந்தி சங்கரும் தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.

ஓவியர் நகுலேஸ்வரியின் (மீனகுமாரி நகுலன்)  ஓவியம்

அவரது நினைவாக அவர் வரைந்த ஓவியங்கள் சிலவற்றையும், தையல் வேலைப்பாடுகளையும் பகிர்ந்துகொள்கின்றேன். அவர் ஓவியக்கலையில் மட்டுமல்ல தையற்கலையிலும் சிறந்தவர். மேலதிகமாகச் சமையற்கலையிலும் வல்லுநர். அவரது மறைவு எதிர்பாராதது. இவ்வளவு விரைவில் பிரிந்துவிடுவார் என்பதை நாம் எண்ணியிருக்கவில்லை. எல்லோருக்குமே அதிர்ச்சிதான். அவர் இனி நினைவுகளிலும், வரைந்த ஓவியங்களிலும் நிலைத்து வாழ்வார்.

ஓவியர் நகுலேஸ்வரியின் (மீனகுமாரி நகுலன்)  ஓவியம்

ஓவியர் நகுலேஸ்வரியின் (மீனகுமாரி நகுலன்)  தையல் வேலைபாடு

ஓவியர் நகுலேஸ்வரியின் (மீனகுமாரி நகுலன்)  தையல் வேலைப்பாடு

ஓவியர் நகுலேஸ்வரியின் (மீனகுமாரி நகுலன்)  ஓவியம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.