கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

அண்மையில் மல்லிகை சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் செ.யோகராசா அன்று எழுதிய அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு  பற்றி எழுதிய கட்டுரையைப் பதிவிட்டிருந்தேன். அதற்குத் தன் எதிர்வினையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனுடன் கருத்துகளைப் பரிமாறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் கேள்விகள் சிலவற்றுக்கு அவரும் சளைக்காமல் பதிலளித்தார். முடிவில் பார்த்தபோது அதுவே சிறியதொரு நேர்காணலாக இருப்பதை அறிந்தேன். அதனைத்தொகுத்து இங்கு பதிவு செய்கின்றேன். நண்பர்களே! நீங்கள் உங்கள் நட்பு வட்டத்திலுள்ள கலை, இலக்கிய , அரசியல் ஆளுமை எவருடனாவது இவ்விதமாகக் கேள்விகள் கேட்பதன் மூலம் நேர்காணலற்ற நேர்காணல்களைச் செய்ய முடியும். யார் சொன்னது முகநூல் ஆரோக்கியமற்றதென்று? இது முகநூலின் ஆரோக்கியமான விளைவுகளிலொன்று. எழுத்தாளர் எம்.எஸ்.எம். இக்பால் பற்றி கே.எஸ்.எஸ் அவர்களும், எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் அவர்களும் பின்வருமாறு கருத்துகளை முன் வைத்தார்கள்.

கே.எஸ்.சிவகுமாரன்: எம்.எஸ்.எம். இக்பால் அவர்கள் மறைந்து விட்டார்கள். அவர் ஒரு தீவிரவாசகர். காரசாரமாக விமர்சிப்பவர்

ஜவாத் மரைக்கார்: தனது வாழ்வின் இறுதிக்காலப் பகுதியில் ( 1975 தொடக்கம் மரணிக்கும் வரை) என்னுடன் நெருக்கமாகவும் அன்போடும் பழகியவர் எம்.எஸ்.எம். இக்பால். துணிந்த கட்டை  

நான்: நான் மதிக்கும் எழுத்தாளர்களில் அவரும் முக்கியமானவர். அவரது கட்டுரைகள், கவிதைகளை மல்லிகை சஞ்சிகையில் கண்டிருக்கின்றேன். இலங்கைத்தமிழ் முற்போக்கு இலக்கியத்துக்கு முஸ்லீம் எழுத்தாளர்கள் பலர் மிகுந்த பங்களிப்பினை ஆற்றியிருக்கின்றார்கள். தேசாபிமானியிலிருந்து பிரிந்த பின்னர் இளங்கீரன் அவர்கள் பல மார்க்சிய ஆய்வுக்கட்டுரைகளைத் தொழிலாளி பத்திரிகையில் எழுதியிருக்கின்றார்.

கே.எஸ்.சிவகுமாரன்: காரசாரமாக விமர்சிப்பவர். 1961 ஆம் ஆண்டில் நான் உள்ளூர் ஆட்சி சேவை அதிகாரசபை அலுவலகத்தில் தமிழ் மொழிபெயர்பாளராக பதவி வகுத்தேன். அந்த அலுவலகம் கொழும்பு கோட்டையிலுள்ள கபூர் கட்டடத்தில் அமைந்து இருந்தது. அந்தக் கட்டடத்தில் மேல் மாடியில் வேலை பார்த்த இக்பால் அவர்களின் நட்பு கிடைத்தது. அவரே என்னை அ.ந.க  அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

கே.எஸ்.சிவகுமாரன்: எனது சந்திப்பை பின்னர் எழுதுவேன்,

நான்: நீங்கள் நிச்சயம் உங்கள் எழுத்துலக அனுபவங்களை எழுத வேண்டும். இலக்கிய ஆளுமைகள் பலருடன் பழகியிருப்பீர்கள். அவற்றை அறிய ஆவலாகக் காத்திருக்கின்றோம்.

கே.எஸ்.சிவகுமாரன்: அ.ந.க  அவர்கள் அக்காலப் பகுதி்யில் தகவல் திணைக்களத்தில் வேலை பார்த்தார். MSM.இக்பால் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு அவரை சந்திக்கச் சென்றார். சந்தித்தோம்.

நான்: கே.எஸ்.சிவகுமாரன்: அப்பொழுது அவர் ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரியப்பீடத்திலுமிருந்தார் என்று நினைக்கின்றேன். அவருடைய ஆக்கங்கள் பலவற்றை அக்கால ஶ்ரீலங்கா சஞ்சிகைகளில் கண்டேன். நூலகம் தளத்திலுள்ளன. தகவல் திணைக்களம் வெளியிட்ட சஞ்சிகை ஶ்ரீலங்கா.

கே.எஸ்.சிவகுமாரன்: கருமை நிறக் கண்ணன் அவர். நெடிய உருவம். முத்துப் பல் வரிசை. மனம் நிறைந்த புன்சிரிப்பு. நீண்ட ,கையை மூடும் 'சேர்ட்'. கறுத்த கால்சட்டை...அந்நாட்களில் இளங்கீரனின் மரகதம் இதழில்,ஐரோப்பிய நாவல் ஆசிரியர்கள் பற்றி எழுதி வந்தேன் . அவற்றைத் தான் வாசித்ததாகச் சொன்னார்.. பின்னர் சந்திப்போம் என்றார். நாங்கள் மீண்டும் எங்கள் அலுவலகங்களுக்குத் திரும்பினோம்.

கே.எஸ்.சிவகுமாரன்: பின்னர் சந்திக்கும் போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்துவார்.

கே.எஸ்.சிவகுமாரன்: அவருடைய 'மதமாற்றம்' நாடகத்தைப் பார்க்கும்படி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அதனைப் பார்த்து விட்டு TRIBUNE சஞ்சிகையில் எனது குறிப்புகளை எழுதினேன். நான் வேலை செய்த அலுவலகத்துக்கு வந்து நன்றி தெரிவித்தார். அவரது 'நானா' சுதந்திரன் பத்திரிகையில் வந்தமையை நினைவூட்டினார்.

நான்: அவர் ட்ரிபியூனில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார். டிரிபியூன் ஆசிரியப் பீடத்திலும் இருந்ததாகச் சிலர் கூறுவர். குறள் பற்றி, அர்த்த சாத்திரம் பற்றிய அவரது ட்ரிபியூன் ஆங்கிலக் கட்டுரைகளை வாசித்துள்ளேன். அவை பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

கே.எஸ்.சிவகுமாரன்: S P அமரசிங்கம் அவர்கள் நடத்திய Tribune ஒரு வார அரசியல் திறனாய்வு சஞ்சிகை. நான் கிரமமாக அதனை வாசிப்பதில்லை.அதனால் அங்கு அவர்களின் கட்டுரைகளை வாசிக்கவில்லை.

கே.எஸ்.சிவகுமாரன்: பின்னர் அடிகடி அவரை சந்தித்து உரையாடுவதும் உண்டு. அந்நாட்களில் சில்லையூரார்,  MSM இக்பால், ராமநாதன், ரெயின்போ கனகரத்தினம் ஆகியோரே என்னை முற்போக்கு எழுத்துகளை வாசிக்கும்படி தூண்டியவர்கள்.

நான்: மேலுள்ள அ.ந.க.வின் ஆங்கிலக் கட்டுரைகள் பதிவுகள் இதழில் வெளியாகியுள்ளன. இவை மட்டுமே என்னிடமுள்ளன.  தினகரனில் அவரது 'மனக்கண்' வெளியானபோது வாசித்ததுண்டா? அல்லது அறிந்திருக்கின்றீர்களா?

கே.எஸ்.சிவகுமாரன்: இடைக்கிடை வாசித்ததுண்டு. முழுதாக வாசிக்கவில்லை. அக் காலத்தில் என் போக்கு வேறுவிதமாக இருந்தமையே காரணம்.

நான்: அண்மையில் உங்கள் கட்டுரைகள் பலவற்றை மல்லிகையில் வாசித்தேன். முக்கியமானதொன்று மு.தளையசிங்கத்தின் போர்ப்பறை பற்றியது. நல்லதொரு கட்டுரை. நூலின் சாரத்தை மிகவும் சுருக்கமாகக் கூறியிருந்தீர்கள். கடந்த அறுபது வருடங்களாக எங்கு பார்த்தாலும் உங்கள் ஆக்கமொன்றைக் காண முடிகிறது. உங்களது தளராத, அயராத உழைப்பு என்னை மிகவும் கவர்ந்ததொன்று.

இவ்விதமாகக் கே.எஸ்.சிவகுமாரனுடன் எழுத்தாளர் அ.ந.க பற்றி, டிரிபியூன் சஞ்சிகை பற்றி, அவரது இலக்கிய நண்பர்கள் பற்றி உரையாடினேன். உரையாடலின்போது அவர் தான் அ.ந.கந்தசாமியுடனான தனது தொடர்புகள் பற்றிய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். இவ்வகையில் இச்சிறு உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. பயனுள்ளதோர் உரையாடலைச் சாத்தியமாக்கிய முகநூலுக்கும் என் நன்றி.  உரையாடலில் அவர் குறிப்பிட்டது எம்.எஸ்.எம். இக்பால் பற்றி. நான் எழுத்தாளர் ஏ.இக்பால் என்று எண்ணி உரையாடியிருந்தேன். அவரும் முற்போக்கு எழுத்தாளர்களிலொருவர். அ.ந.கந்தசாமியின் எழுத்துகளில் மதிப்பு கொண்டவர். அவரை நேரிலும் அறிந்தவர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.