வரலாற்றுச் சுவடுகள்: மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ்.

Thursday, 18 June 2020 18:44 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

* மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் - கலைப்பெருமன்றம் உழவர் விழா மலர் , அம்பனை, தெல்லிப்பழை - 1973 -

இலங்கைத்தமிழ் இலக்கிய உலகம் பெருமைப்படத்தக்கதொரு மலரிது . இம்மலரில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்குச்  'சிந்தனைச் செல்வர்'என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவரைப்பற்றி, அவரது இலக்கியப் பணி பற்றி இலக்கிய ஆளுமைகள் பலரின் அரிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இதற்காக தெல்லிப்பழை கலைமன்றத்தினர்,   மலர்க்குழுவினர் ( ஆ.சிவநேசச் செல்வன், மயிலங்கூடலூர் பி.நடராசன், பொன்.நாகரத்தினம், வை.குணாளன்) பெருமைப்படலாம். மறக்காமல் கெளரவிக்கப்பட வேண்டிய இலக்கியவாதியொருவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இவ்வமைப்பும், தொகுப்பாளர்களும் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றார்கள். காரணம்: அ.செ.மு பற்றிய விரிவான மலர் என்பதுடன் அவர் 'சிந்தனைச் செல்வர்' என்னும் பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவ்வகையில் இதுவரை வெளியான முதலாவதும் , ஒரேயொரு நூலும் இதுதான். (நான் அறிந்தவரை) என்பதற்காக.

அ.செ.முருகானந்தனின் இலக்கியப் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. சிறுவனாக ஈழகேசரியின் மாணவர் பகுதியான 'கல்வி அனுபந்த'த்தில் எழுதியது தொடக்கம் பின்னர் ஈழகேசரி, ஈழநாடு , மறுமலர்ச்சி சஞ்சிகை உட்படப் பல பத்திரிகை, சஞ்சிகைகளில் அவரது படைப்புகள் அதிக எண்ணிக்கையில் வெளியாகியுள்ளன. இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களில் அதிக எண்ணிக்கையில் எழுதிய எழுத்தாளர் அவராக இருக்கக்கூடுமோ என்று நான் நினைப்பதுண்டு.

அவரது பங்களிப்பு ஈழகேசரியில் பல்வேறு புனைபெயர்களில் வெளியாகியுள்ளன. பாட்டைசாரி என்னும் பெயரில் தொடர்ச்சியாகப் பல வருடங்கள் ஈழகேசரியில் அவரது பத்தி வெளியாகியுள்ளது. ஈழகேசரியில் வெளியான  நூல் விமர்சனங்கள் பலவற்றை எழுதியுள்ளார். பிஷ்மன் என்னும் பெயரில் யாத்திரை என்னும் நாவலை எழுதியுள்ளார். யாழ்தேவி என்னும் பெயரில் இசையாளர்கள் பற்றிய தொடரை எழுதியுள்ளார்.

இதுபோல் ஈழநாடு வாரமலரிலும் 'காலச்சக்கரம்', 'வெள்ளிமல்லிகை', 'பசுந்துளிர்' & ஜீவபூமி, 'மணிப்புறவம்' என்னும் பத்திகளைப் பல்வேறு புனைபெயர்களில் தொடராக  எழுதியுள்ளார், இவற்றில் 'வெள்ளி மல்லிகை' மட்டும் அ.செ.முருகானந்தன் என்னும் சொந்தப்பெயரில் வெளியான பத்தித் தொடர்.

ஈழநாடு வாரமலரிலும் அவரது சிறுகதைகள் பல வெளியாகியுள்ளன. எழுபதுகளின் இறுதியில் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழநாடு வாரமலரில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனின் சிறுகதைகள் வெளியாகியன். அவற்றில் என் கண்களில் அகப்பட்டவை 'தளரா வளர் தெங்கு" (5 ஏப்ரில் 1981 ஈழநாடு வாரமலர்) , சோமலதை (6.11.77). ஜெயந்தி என்னும் புனகதையும் தொடராக ஆனால் ஒழுங்கில்லாமல் வெளியானது. அது தொடர் நாவலா, அல்லது குறுநாவலா என்பது தெரியவில்லை. அத்தொடரை மீண்டுமொருமுறை தேடி வாசிக்க வேண்டும். 6.11.77 வாரமலரில் வெளியாகிய சோமலதை சிறுகதையை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அச்சிறுகதை வெளியான ஈழநாடு வாரமலரின் இணைய முகவரி:

http://noolaham.net/project/384/38322/38322.pdf

'எரிமலை' என்னும் சஞ்சிகையொன்றினைத் தாளையடி சபாரத்தினத்துடன் இணைந்து வெளியிட்டிருக்கின்றார். மறுமலர்ச்சி சஞ்சிகையிலும் ஆசிரிய பீடத்தில் வரதருடன் இணைந்து இயங்கியிருக்கின்றார். அத்துடன் 'மறுமலர்ச்சி' அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவராகவும் இருந்திருக்கின்றார்.

உண்மையில் இவர் பட்டதாரியல்லர். ஆனால் இவர் இவர் படித்த மகாஜனாக் கல்லூரி நிச்சயம் பெருமைப்படத்தக்க பங்களிப்பை இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குச் செய்திருக்கின்றார்.

இவரது சிறுகதைத்தொகுதியின்றினை யாழ் பல்கலைக்கழக 'மறுமலர்ச்சி' அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். 'புகையில் தெரிந்த  முகமும்'  நூலுருப்பெற்றுள்ளது.

* உயிருடன் வசதியாக இருப்பவர்களுக்கு விருதுகள் கொடுத்துக் கெளரவிப்பவர்கள் இவரைப்போன்ற மறைந்த எழுத்தாளர்களுக்கும் விருதுகள்  கொடுத்துக் கெளரவிப்பதுடன், விருதுப் பணத்தை அவர்கள்தம் படைப்புகளை நூலுருப்பெறப் பாவித்தால் அது ஆரோக்கியமானதாக அமையும். அமைப்பினர் கவனிப்பார்களாக.

http://noolaham.net/project/326/32538/32538.pdf

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Friday, 19 June 2020 02:13