'சுட்டி' கணேசன்!அண்மையில் 'சுட்டி விகடன்' ஆசிரியர் சுட்டி கணேசன் பற்றிய கட்டுரையொன்றினை இணையத்தில் வாசித்தேன் , அதை எழுதியவர் தகவற் தொழில்நுட்ப வல்லுநரும், அத்துறையில் தமிழ் நூல்கள் பலவற்றை எழுதியவருமான காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்கள். அவர் அக்கட்டுரையில் 'சுட்டி' விகடன் சஞ்சிகையுடன் தனக்கேற்பட்ட அனுபவமொன்றினையும் பகிர்ந்துகொண்டிருந்தார். நல்லதொரு கட்டுரை. அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். 'சுட்டி' விகடன் அவர்கள் என் முகநூல் நண்பர்களில் ஒருவரும் கூட. அக்கட்டுரைக்கான இணைய இணைப்பு: http://compcarebhuvaneswari.com/?p=483

'சுட்டி' கணேசன் அவர்களைப்பற்றிய மேற்படி கட்டுரை ஆச்சரியத்தைத்தரவில்லை. ஏனென்றால் அவரை நான் 1996ஆம் ஆண்டிலிருந்து அறிவேன். 'ஸ்நேகா' பாலாஜியாக அறிமுகமானவர். ஸ்நேகா பதிப்பகமே எனது நூல்களான 'அமெரிக்கா' (சிறுகதைகள் மற்றும் சிறு நாவற் தொகுப்பு) மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்களைத் தமிழகத்தில் சிறப்பாக வெளியிட்டது. அவையே தமிழகத்தில் முதலில் வெளியான எனது நூல்கள்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இவரை 'சவுத் ஏசியன் புக்ஸ்' பாலாஜியாக அறிந்திருப்பார்கள். 'சவுத் ஏசியன் புக்ஸ்' நிறுவனமும், இலங்கையின் தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து பல நூல்களை வெளியிட்டுள்ளன்மை குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து இன்று வரை இவருடனான தொடர்பு நீடித்து வருகின்றது. இவரது பல கடிதங்களும் என்னிடம் இன்னுமுள்ளன. எனது நூல்களை வெளியிட்ட காலத்தில் அவர் எழுதிய கடிதங்கள் அவை.

இவரைப்பற்றி நினைத்ததும் வேறு பல நினைவுகளும் உடன் நினைவுக்கு வரும். எனது படைப்புகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் இவரே.

அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் வெளியான தினகரன் பத்திரிகைத்தாள்களின் 'போட்டோ'ப் பிரதிகளை இலங்கைச் சுவடிகள் திணைக்களம் எனக்கு அனுப்பியபோது A14 அளவு தாள்களில் அனுப்பியிருந்தனர். அவை வாசிக்க முடியாத அளவுக்கு எழுத்துகள் சிறியதாகவிருந்தன. இவருக்கு அவற்றை அனுப்ப, அவற்றைத் தட்டச்சு செய்து அனுப்ப உதவினார்.

இன்னுமொரு முறை 'அமெரிக்கா' தொகுதியிலுள்ள எனது சிறுகதையான 'பொந்துப்பறவைகள்' சிறுகதையினைச் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு அவர்களது பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு அனுப்பிய விண்ணப்பப்படிவங்களை எனக்கு அனுப்பி வைத்துதவினார். மறக்க முடியாது.

'சுட்டி' கணேசன் அவர்களின் பதிப்பக மற்றும் இதழியற் பங்களிப்புகள் முக்கியமானவை. வாழ்த்துகள் 'சுட்டி' கணேசன் அவர்களே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.