அனைவரையும் நினைவு கூர்வோம்!

Wednesday, 27 November 2019 01:23 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்னும் நிலையிலிருந்து வேறொரு கோணத்தில் பயணிக்கின்றது. 2009இல் ஆயுதப் போராட்டம் பேரழிவுடன், பாரிய மனித உரிமை மீறல்களுடண் முடிவுக்கு வந்தது. ஆயுதப் போராட்டக் காலத்தில் இலங்கையில் பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டன. இலங்கைப்படையினருக்கும் , போராளிகளுக்குமிடையிலான மோதல்களில் போராளிகள், பொதுமக்கள், படையினர் எனப் பலரும் அழிந்தனர். சிறைகளில் அடைக்கப்பட்டனர். பல்வேறு வதைகளுக்கு உள்ளாகினர். இலங்கை அரசு பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தியதால் இனங்களுக்கிடையிலான கலவரங்கள், மோதல்கள் அழிவுகளைத் தந்தன. தற்போது அந்நிலையினைத் தாண்டி இன்னுமொரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

இக்காலகட்டத்தில் கடந்த கால வரலாறானது பக்கச்சார்பற்றுப் பதியப்படுவதுடன், நினைவு கூரப்படவும் வேண்டும். ஏற்பட்ட அழிவுகளிலிருந்து பாடங்களைக் கற்க வேண்டும். தமிழ் அரசியல் அமைப்புகள் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு இருந்தாலும், இவ்விடயத்தில் ஒன்று பட்டுச் செயற்படலாம். எதிர்காலத்தில் இவ்விதமாகப் பல்வேறு விடயங்களில் ஒன்றுபட்டு இயங்குவதற்கு இதுவோர் ஆரம்பமாக இருக்க உதவும். வரலாறானது பக்கச்சார்பற்று அணுகப்பட வேண்டுமென்பது எதனை வெளிப்படுத்துகின்றது? அனைத்து அமைப்புகளும் தமக்கிடையில் நிலவிய முரண்பாடுகள் காரணமாகப் பல்வேறு சார்பு நிலைகளை எடுத்தன. பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன. இயக்கங்களின் வதை முகாம்களில் பலர் வதைக்கப்பட்டனர். அதே சமயம் இடம் பெற்ற யுத்தத்தினால் மாந்தர்கள் பலரும் பேரழிவுகளுக்குள்ளாகினர்.

இன்று கடந்த காலத்தை அணுகும்போது குறை ,நிறைகளுடன் அணுக வேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயம் இலங்கையில் தமிழ் மக்கள் அனைவரும் , சிறுபான்மையின மக்கள் அனைவரும் இலங்கை அரசியல் சட்டத்தில் சட்டபூர்வமாக நியாயமான உரிமைகளைப் பெறும் வரையில் தொடர்ந்து அரசியல்ரீதியாகப் போராடி வரவேண்டும். அதற்கு அவர்கள் உபகண்ட, சர்வதேச அரசியல் சக்திகளை உரிய வகையில் பாவித்துப் பயன்பெறலாம். அதே சமயம் இலங்கையில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக , நல்லிணக்கத்துடன் ,வாழவேண்டுமென்றால் அனைத்தினங்களுக்குமிடையிலும் பூரணமான நல்லிணக்கம் நிலவ வேண்டும். அனைத்தினங்களும் கடந்த கால வரலாற்றை குறை ,நிறைகளுடன் அணுக வேண்டும்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி அண்மையில் இந்தியத் தொலைக்காட்சிக்களித்த பேட்டியொன்றில் உலகத்தமிழர்கள், உள்ளூர்த் தமிழர்கள் அனைவரும் கடந்த காலத்தை விமர்சிப்பதிலிருந்து விலக வேண்டும். பெரும்பான்மையின் மக்களின் அபிலாசைகளைப் புரிந்து செயற்பட வேண்டுமெனக் கூறியிருந்தார். இது தவறான அணுகுமுறை. பெரும்பான்மையினர், ஏனைய சிறுபான்மையினர் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து செயற்பட வேண்டும். நியாயமான மக்களின் அபிலாசைகளை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டும். பெரும்பான்மையினரின் அபிலாசைகளுக்காக ஏனையவர்கள் தம் அபிலாசைகளை விட்டுக்கொடுத்து வாழ முடியாது. நாடு அனைவருக்கும் உரியதென்றால் அனைவரும் ஒருவரையொருவர் உணர்வு பூர்வமாக மதித்து வாழ வேண்டும். அவ்விதம் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையிலான சட்டதிட்டங்களை அரசு அமுல்படுத்த வேண்டும். நாட்டுச் சட்டங்கள் அனைவரையும் ஒன்றாக நோக்கும் நிலை உருவாகும் நிலை தோன்றினால் காலப்போக்கில் நாடு தன்பாட்டிலேயே இயல்பாக , ஆரோக்கியமாக இயங்கத்தொடங்கும். ஆனால் புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடனேயே கடந்த அரசாங்கத்தில் நடந்த குற்றங்களைப் புலனாய்வு செய்து, உரியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திய புனாய்வுத்துறை அதிகாரியான் நிசந்தா சில்வா குடும்பத்தினருடன் நாட்டை விட்டே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. விசாரணைகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் நாட்டை விட்டுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவல் துறையிடம் இருக்க வேண்டிய நாட்டின் பாதுகாப்பு படையினர் கைகளுக்கு மாறியுள்ளது. இவையெல்லாம் ஆரோக்கியமான செயல்களாகத் தெரியவில்லையே. நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து செயற்பட வேண்டும். சட்டமானது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

இந்நாடு பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. ஏனைய சிறுபான்மையினத்தவர் பெளத்த சிங்கள மக்களுக்குப் பணிந்து செயற்பட வேண்டுமென்ற நோக்கமே புதிய ஜனாதிபதியின் எண்ணத்திலுள்ளது போல் தெரிகின்றது. இது சரியான அணுகுமுறை அல்ல.

இவ்விதமானதொரு சூழலில் உண்மையில் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்களுட்பட அனைத்துச் சிறுபான்மையின மக்களும், பெரும்பான்மையின மக்களும் கடந்த யுத்தக் காலகட்டத்தில் மரணித்த அனைவரையும் குறை நிறைகளுடன் நினைவு கூரலாம். யுத்தக் கால வரலாற்றைப்பாரபட்சமின்றிப் பதிவு செய்யலாம்; நினைவு கூரலாம். நாடு சுதந்திரமிடைந்த காலகட்டத்திலிருந்து நாட்டை ஆட்சி செய்த அரசுகளின் செயற்பாடுகளே நாட்டில் ஏற்பட்ட யுத்தத்துக்குக் காரணம் என்பதை முதலில் நாட்டின் பெரும்பான்மையினத்தவர் உணர வேண்டும். அதனை உணராத வரையில் அவர்களால் ஒருபோதுமே சிறுபான்மையினத்தவரின் நியாயமான அபிலாசைகளைப் புரிந்துகொள்ள முடியாது. அதே சமயம் அனைத்தினங்களும் அவரவர் நோக்கில் கடந்த கால வரலாற்றையும் , மரணித்தவர்களையும் நினைவு கூரும் உரிமையினையும் அனைவரும் மதிக்க வேண்டும். இவ்விதமான புரிந்துணர்வே அனைத்தினங்களில் இயங்கும் இனவாதச் சக்திகளை ஓரங்கட்ட உதவும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 27 November 2019 01:30