கணையாழி: ஆஷா பகேயின் 'பூமி' பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!

Monday, 04 November 2019 22:08 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

- கணையாழி சஞ்சிகையின் நவம்பர் 2019 இதழில் 'ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!' என்னும் தலைப்பில் வெளியான கட்டுரை. -


கணையாழி: ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்! | தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!மராத்திய எழுத்தாளரான ஆஷா பகேயின் முக்கியமான நாவல்களிலொன்று 'பூமி' பி.ஆர்.ராஜாராமின் மொழிபெயர்ப்பில் தமிழில் 'சாகித்திய அகாதெமி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆஷா பகேயின் படைப்புகளில் நான் வாசித்த முதலாவது படைப்பு இந்த நாவல்தான். ஏற்கனவே சாகித்திய அகாதெமியினரால் வெளியிட்டப்பட்ட வங்க நாவலான 'நீலகண்டப் பறவையைத்தேடி', 'தகழி சிவசங்கரம்பிளையின்' ஏணிப்படிகள்' மற்றும் 'தோட்டி', சிவராம காரந்தின் 'மண்ணும் மனிதரும்', எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை', எம்.டி.வாசுதேவன் நாயரின் 'காலம்' போன்ற நாவல்களின் வரிசையில் என்னைக்கவர்ந்த இந்திய நாவல்களிலொன்றாக 'பூமி' நாவலும் அமைந்து விட்டது.

இந்த நாவலின் கதையும் வித்தியாசமானது. மராத்திய டாக்டர் ஒருவருக்கும், தமிழ் நர்ஸ் ஒருவருக்கும் மகளாகப்பிறந்தவளே நாவலின் நாயகி. சிறு வயதிலேயே அவள் தந்தையை இழந்து விடுகின்றாள். தாயாரே அவளைக் கண்ணுங்கருத்துமாக வளர்த்து வருகின்றார். நாயகியின் மாணவப்பருவத்திலேயே தாயாரும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகுகின்றது. தாயின் இறுதிக்காலம் மனதை அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்கியமான பகுதிகளில் அதுவுமொன்று. தாயாரும் இறந்து விடவே தனித்து விடப்படும் சிறுமியான நாயகியை அவளது தந்தையின் மராத்தியச் சகோதரி பம்பாய்க்குத் தன்னுடன் அழைத்துபோகின்றாள்.

நாவல் தமிழ்நாடு, பம்பாய் என இரு நகரங்களில் நடைபோடுகிறது. அத்தையுடன் வாழும் தன் இளம் பருவத்தில் பகுதி நேர வேலையாக மறைந்த பேராசிரியர் ஒருவரின் செல்வந்த மனைவிக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண்ணாகவும் வேலை பார்க்கின்றாள். அச்சமயத்தில் பேராசிரியரின் வீட்டு நூலகத்து நூல்களெல்லாம் அவளது இலக்கியப்பசியைத்தீர்த்திட உதவுகின்றன.

மராத்தியக் கலாச்சாரத்தில் வாழும் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து பெரியவளாகும் நாயகி ஆரம்பத்தில் படிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும், அவளது வாசிப்புப் பழக்கம் அவளுக்குக் கை கொடுக்கிறது. அவளது ஆளுமையினை ஆரோக்கியமான திசையை நோக்கித்தள்ளி விடுகிறது. அதுவே பின்னர் வெற்றிகரமான பெண்ணாகவும் உருமாற்றி விடுகிறது. அவள் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த அச்செல்வந்தப்பெண்ணின் மகனையே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் திருமணமும் செய்து கொள்கிறாள். திருமணத்தின் பின்பு கலாநிதிப்பட்டமும் பெற்று பல்கலைக்கழகவிரிவுரையாளராகப் பணிபுரிகின்றாள்.

அவர்களிருவரின் தாம்பத்தியத்தின் விளைவாக அவர்களுக்கு மகனொருவன் பிறக்கின்றான். இருந்தாலும் கணவன், மனைவியருக்கிடையில் பல்வேறு வகையான உளவியல் பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஒரு கட்டத்தில் கணவனைப்பிரிந்து தனித்து வாழும் அவள் இறுதியில் பணியில் ஓய்வு பெற்றுக்கணவனிடம் திரும்புகின்றாள். அவ்விதம் பிரிந்திருக்கும் காலத்தில் அவளுடன் பணிபுரியும் , நோயாளிக்குழந்தையுடன் வாழும் சக விரிவுரையாளர் ஒருவருடனான அவளது ஆத்மார்த்தமான தொடர்பும் நாவலில் ஆராயப்படுகிறது.

இந்த நாவலின் முக்கிய சிறப்பாக நான் கருதுவது பாத்திரப்படைப்பு. நாவலின் நாயகியான மைதிலியின் பாத்திரப்படைப்பு முழுமையானது. நாவலில் வரும் மராத்திய அத்தையும் அற்புதமான மன இயல்புகள் வாய்க்கப்பட்டவள். இந்நாவலில் வரும் பிரதான பாத்திரங்களெல்லாரும் உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஆளுமைகள் சிறப்பாக அவர்கள்தம் குறை, நிறைகளுடன் வடித்தெடுக்கப்பட்டுள்ளன..

மைதிலி என்னும் பெண்ணின் வாழ்வை விபரிக்கும் நாவல், அவ்வாழ்வில் அவள் அடைந்த அனுபவங்களை, உணர்ச்சிப்போராட்டங்களை (தோல்வியடைந்த அவளது இளமைக்காதலுட்பட), அவளது மண வாழ்வினை, அவ்வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை, தாய்மை ஏற்படுத்தும் மாற்றங்களை ,திருமணத்துக்கப்பாலான உளரீதியிலான உறவினை, மற்றும் அவளது எழுத்துலக இலக்கிய வாழ்வினை எல்லாம் விபரிக்கின்றது.

நல்ல நாவலொன்றின் சிறப்பு அந்த நாவலை வாசிக்கும் ஒருவரை அந்த நாவல் விபரிக்கும் கதாபாத்திரங்களின் வாழ்வினுள் கொண்டசென்று    நிறுத்த வேண்டும். அதன் பின்னர் அந்த வாசகரும் அப்பாத்திரங்கள் வாழும் வாழ்வினில் ஒருவராகி, அப்பாத்திரங்கள் அடையும் பல்வேறு உணர்வுகளுக்குமிடையில் சிக்கி தன்னை மறந்து விட வைத்திட வேண்டும்.  இந்த நாவலும் அத்தகையதே. இந்நாவலின் கதாநாயகி தன் வாழ்வில் அடையும் இன்ப துன்பங்களையெல்லாம் வாசிக்கும் நீங்களும் அடைவீர்கள்.

இந்நாவலின் இன்னுமொரு சிறப்பு இரு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களினூடு பெண்களின் பிரச்சினைகளை ஆராய்வதுதான். ஒருத்தி நவகாலத்து நாயகி மைதிலி. அடுத்தவள் பழைய தலைமுறையினைச்சேர்ந்த அவளது மராத்திய அத்தை.

ஆஷா பகேயின் 'பூமி' நாவலின் நடை மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது. ஆனால் மொழிபெயர்ப்பில் அதிகமாக எதிர்ப்படும் தமிங்கிலிஸினைத் தவிர்த்திருக்கலாமென்று ஏற்படும் உணர்வினைத்தவிர்க்க முடியவில்லை. ஆனால் நூலினை வெளியிட்ட அமைப்பே தன் பெயரைச் 'சாகித்ஹிய அகாதெமி' என்று குறிப்பிடும்போது  எவ்விதம் அவ்வமைப்புக்காக மொழிபெயர்ப்பு செய்யும் எழுத்தாளர் மட்டும் தமிங்கிலிசைத்தவிர்த்திட முடியும் என்றும் எண்ணாமலுமிருக்க முடியவில்லை.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 05 November 2019 02:00