அலைபேசியில் அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளர் வி.என்.மதியழகன்!

Sunday, 27 October 2019 09:38 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

ம் பதின்ம வயதுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்புச் சேவையில் ஒலித்த குரல்களில் என்னைக் கவர்ந்த குரல்களாகப் பின்வருவோரின் குரல்களைக் கூறுவேன்: இராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீட், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், வி.என். மதியழகன், சற்சொருபவதி நாதன். இவர்களெல்லாரும் தொழிலைத் தெய்வமாக மதித்தவர்கள்; மதிப்பவர்கள். கடுமையான உழைப்பினால் வானொலியில் எவ்விதம் சீராகத் தம் குரல் வளத்தைப் பாவிக்க வேண்டுமென்பதில் திறமையானவர்கள். பன்முக அறிவாற்றலைப் பெருக்கிக்கொண்டவர்கள். அதனால்தான் இன்றுவரை இவர்கள் இன்னும் எம் நினைவுகளில் நிறைந்திருக்கின்றார்கள்.

இன்று காலை என் அலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. சனி காலையே நேரத்துடன் வந்த அழைப்பைத் தவற விட்டுவிட்டேன். ஆனால் அதுவும் ஒரு விதத்தில் நன்மையாகவே முடிந்தது. தனது இன்குரலால், வானொலியில் உரையாற்றுவது போன்றே தன் தகவலையும் அலைபேசியில் பதிவு செய்திருந்தார். அக்குரலில் அத்தகவலைக் கேட்கையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் அவர் குரலுக்கு அடிமையாகி அவர் வாசிக்கும் செய்திகளைக் கேட்பதுண்டு. அதே குரலை அதே மாதிரி இன்றும் கேட்க முடிந்தது உண்மையில் மகிழ்ச்சியே. அக்குரலுக்குச் சொந்தக்காரர்: வி.என்.மதியழகன்.

அவர் என் அலைபேசியில் பதிவு செய்திருந்த செய்தி ஒரு வாழ்த்துச் செய்தி. என் முகநூற் பதிவுகளைப்பற்றி ,என்னைப்பற்றி தன் எண்ணங்களைப் பதிவு செய்திருந்தார். ஆரோக்கியமான, கனிவான வாழ்த்துச் செய்தியினை வானொலியில் செய்தியினை வாசிப்பது போன்று நிதானமாக, தெளிவாக, சீராக, சொற்களில் எவ்விதப் பிசிறுமில்லாமல் பதிவு செய்திருந்தார். தன் பதிவில் என் முகநூற் பதிவுகளைப்பற்றிக் கூறுகையில் அவை 'தூய்மையான, நேர்மையான, அழுத்தமான , ஆளுமை மிக்க பதிவுகள் ' என்றும், அவை 'இலங்கையிலுள்ள பழைய ஆளுமைகளை நினைவு படுத்துகின்றன என்றும், மிகவும் பயனுள்ளவை என்றும் , அவற்றைத் தாம் தொடர்ச்சியாக வாசித்து வருவதாகவும் பகிர்ந்திருந்தார்.

இவ்விதம் தம் எண்ணங்களை எனக்கு அலைபேசிக்கு அழைத்துக் கூறவேண்டுமென்று எத்தனை பேர் நினைப்பார்கள்? அவர் இவ்விதம் அழைத்துக் கூற வேண்டுமென்பதில்லை. ஆனால் அழைத்துக் கூறியிருக்கின்றார். அவரது அழைப்பினை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது. அதற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனால் அதனால் கிடைத்த பயனே அவரது குரலில் ஒலித்த எண்ணங்களின் ஒலிப்பதிவு.. நன்றி திரு. வி.என். மதியழகன் அவர்களே.

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 27 October 2019 09:45