வாசிப்பும், யோசிப்பும் 348 : தேவகாந்தனின் 'நவீன தமிழ் இலக்கியம்: ஈழம் - புகலிடம் - தமிழகம்'

Wednesday, 25 September 2019 00:02 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

வாசிப்பும், யோசிப்பும் : தேவகாந்தனின் 'நவீன தமிழ் இலக்கியம்: ஈழம் - புகலிடம் - தமிழகம்' அக்டோபர் 5 அன்று 'டொராண்டோ'வில் வெளியிடப்படவுள்ள எழுத்தாளர் தேவகாந்தனின் ஐந்து நூல்களிலொன்று 'நவீன இலக்கியம்: ஈழம் -  புகலிடம் - தமிழகம்".  பூபாலசிங்கம் (இலங்கை) பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட நூல். தேவகாந்தனின் பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் பேசும் விடயங்களாக தமிழ்க்கவிதைகளின் செல்நெறி, இலங்கைத்தமிழ்க் கவிதைகள் பற்றிய வரலாற்றுப் பார்வை, இலங்கைத்தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனப் பார்வை, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன் மற்றும் நா.பார்த்தசாரதி போன்றோரின் படைப்புகள் , தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நோக்கு, புலம் பெயர் இலக்கியம், மலேசிய இலக்கியம், பின் காலனித்துவ இலக்கியம், கனடா இலக்கியச் சஞ்சிகைகள் இவற்றுடன் மு.தளையசிங்கத்தின்  படைப்புகள் ஆகியன அமைந்துள்ளன. கட்டுரைகள் 1998 -2018 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை.

தேவகாந்தன் அவர்கள் முகத்துக்காக எழுதுபவரல்லர். தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர். இங்குள்ள கட்டுரைகளில் அவரது இவ்வாளுமையினைக் காணலாம். அவரது சிந்தனை வீச்சினைக் காணலாம். ஒருவரது படைப்புகளை வாசித்துச் சிந்தித்து அவர் எடுக்கும் முடிவுகளிலிரிந்து இதனை அவதானிக்கலாம். உதாரணத்துக்கு மு.தளையசிங்கத்தின் படைப்புகளிலிருந்து அவர் எடுக்கும் பின்வரும் முடிவினைக் கூறலாம்:

"சர்வோதயம் சார்ந்து அவர் எவ்வளவுதான் பின்னாளில் எழுதியிருந்தாலும் , இச்சிறுகதை உருவான காலத்தில் ஒரு தமிழ்த் தேசியவாதியாக தன்னை உணர்ந்துள்ளார் மு.த. அதுவும் இறுக்கமான நடவடிக்கைகள் அவசியமென்ற கருத்துக்கொண்டு. அப்படியில்லை என்று வாதிடுவதெல்லாம் வீண்."
(பக்கம் 118; கட்டுரை 'படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்: மு.த. குறித்தான ஓர் இலக்கிய விசாரணை'.)

தொகுப்பின் கட்டுரைகள் கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள் எனப் படைப்பாளிகள் பலரை அவர்கள் தம் எழுத்துகளை, சஞ்சிகைகள், இணைய இதழ்களை அறிமுகப்படுத்துவதுடன் தேவகாந்தனின் கருத்துகளையும் கூடவே வெளிப்படுத்துகின்றன. நவீனத் தமிழ்க் கவிதைகள் கூறும் பொருள் பற்றிக் குறுப்பிடுகையில் "இன்றைய தமிழ்க் கவிதையின் தளம் மிக விஸ்தீரணமானது.  அதுமனுக்குலம் எதிர்நோக்கும் புதிய புதிய பிரச்சினைகளைப் பேசுகின்றது. மனித அவலங்களை, நம்பிக்கைகளை, பெண்ணிய எழுச்சிகளை, ஜனநாயக அறை கூவல்களைப் பேசுகின்றது.  சில கவிதைகள் யுத்தங்களின் நியாயத்தை, சில கவிதைகள் ஆயுதங்களின் நாசத்தை மொழிகின்றன. சில் பொருளாதாரத்தளத்தில்  மூன்றாம் உலக நாடுகளின் பொதுக் கொடுமைகளான பசி, பிணி, அறியாமை பற்றியும் , சில உலகப் பொதுப் பிரச்சினைகளான விபசாரம், எயிட்ஸ் நோய் போன்றன குறித்தும் பிரஸ்தாபிக்கின்றன. பேசப்படும் பொருள் அது குறித்து ஒரு பொது அடையாளத்தைப் பொறித்திருப்பினும் அவற்றுக்கு விசேட அடையாளங்களுமுண்டு. இத்தனிப்பண்புகள் கவிதைத்தரத்தை நிர்ணயிக்க, பொதுப்பண்புகள் கவிதைச் செல்நெறியை வரைகின்றன." (பக்கம் 1 & 2;  கட்டுரை 1: 'சமகால தமிழ்க்கவிதைகளின் செல்நெறி குறித்து....) என்று அவர் கூறுவது ஓருதாரணம்.

'நாவல் , சிறுகதை, நாடகங்களை விடவும் கவிதையே  ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் வலு வீச்சுக் காட்டி வளர்ந்திருக்கிற இலக்கிய வடிவம்' (பக்கம்5; கட்டுரை :' சமகாலத்தமிழ்க்கவிதைகளின்  செல்நெறி குறித்து மேலும் சில விவரணங்கள்') என்று கூறும் தேவகாந்தன் யுத்த பூமியாகிய இலங்கையில்  'எங்கும் வாழ்வுப்பிரச்சினைகள், கொடுமைகள் மலிந்து கிடக்கின்றன. இவற்றினால் கொதித்தெழுந்த உணர்ச்சிகள்  கவிதைகளாய் வெடித்திருக்கின்றன. ' என்றும் கூறுவார். (பக்கம் 5 & 6; சமகாலத்தமிழ்க்கவிதைகளின்  செல்நெறி குறித்து மேலும் சில விவரணங்கள் )

இவரது இன்னுமொரு கட்டுரையான 'அரசியல், சமூக எதிர்ப்பு நிலைகளின் இன்னொரு முகாம்: பின் காலனித்துவ இலக்கியம் குறித்து..'  என்னும் கட்டுரை சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் 'பண்பாட்டுப் பொற்கனிகள்; நூலை அறிமுகப்படுத்துகையில் 'இந்நூல் குறி வைத்திருக்கும் ஒரே இலக்கு 'பின் காலனியம்'' என்று கூறுவதுடன் பின் - காலனித்துவ இலக்கியம் பற்றியும் அறியத்ட்தருகின்றது. பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் அறிந்த பலர் பின் - காலனித்துவ இலக்கியம் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். அதனை தேவகாந்தன் 'பண்பாட்டுப் பொற்கனிகள்' நூலறிமுகத்தினூடு நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார்.

புலம்பெயர்  இலக்கியம் பற்றிய தேவகாந்தனின் கருத்தொன்றும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. 'புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்' கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுவார்:

"புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின்  ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு நிச்சயமாகத்தவிர்க்கப்பட்டாக வேண்டும்.  தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப்படைப்புகளையும் புகலிடத்தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டுமென்ற கருத்தினையும் இவ்வுரைக்கட்டு கருத்திலெடுத்திருக்கின்றது.  இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிருஷ்ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் சு.கி.ஜெயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையியான் வகைமைக்குள்ளும் கொண்டுவந்துவிட முடியாது.
" (பக்கம் 128)  

இக்கூற்றில் வரும் 'தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப்படைப்புகளையும் புகலிடத்தமிழிலக்கியமாகவே ' என்பது 'தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப்படைப்புகளையும் புலம்பெயர்த் தமிழிலக்கியமாகவே ' என்று வந்திருக்க வேண்டுமென்பதே என் கருத்து. ஏனென்றால் தமிழகப்படைப்பாளிகள் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்தவர்களல்லர். கல்வி, தொழில்வாய்ப்பு காரணமாகப்புலம் பெயர்ந்தவர்கள். அவர்களைப் புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைப்பதே பொருத்தமானது.

இவ்விதமாக தேவகாந்தனின் 'நவீன இலக்கியம்: ஈழம் -  புகலிடம் - தமிழகம்' சிந்தனைக்கு விருந்தளிப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றது. இலக்கியத்தின் பன்முகப்புரிவுகளிலும் வெளியான நூல்களை, படைப்பாளிகளை அறிமுகப்படுத்துகின்றது. புலம்பெயர்தமிழ் இலக்கியம் பற்றி (புகலிடத்தமிழிலக்கியத்தையுமுள்ளடக்கி) பரவலான அறிமுகத்தை முன் வைக்கின்றது., இலக்கியக்கோட்பாடுகள் பலவற்றைப்பற்றி பேசுகின்றது. இவற்றுடன் தேவகாந்தனின் நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துகளையும் வாசகர் மத்தியில் முன் வைக்கின்றது.


 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 23 October 2019 00:33