வாசிப்பும் யோசிப்பும் 343: பல்வகைச் சிந்தனைகள்!

Sunday, 11 August 2019 00:45 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

விஜை சேதுபதி  முத்தையா முரளிதரனாக...

முத்தையா முரளிதரன் சிறந்த துடுப்பெடுத்தாட்ட வீரன். அதே சமயம் முரளிதரனின் இலங்கைத்தமிழர்கள் பற்றிய அரசியல்ரீதியிலான கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. முரளிதரன் என்னும் ஆளுமையை வைத்து ஒருவர் திரைப்படம் தயாரித்தால் அதில் நடிக்கும் நடிகர் ஒருவரை அவ்வேடத்தில் நடிக்கக்கூடாது என்று கூறுவது நடிகர் ஒருவரின் நடிப்புச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.  எடுக்கப்படும் திரைப்படம் முரளிதரன் என்னும் ஆளுமையைக் குறை, நிறைகளுடன் வைத்து வெளிப்படுத்துகின்றதா என்று பார்க்க வேண்டுமே தவிர அவ்வேடத்தில் நடிக்கும் நடிகர் ஒருவரைப்பார்த்து நீ அவ்வேடத்தில் நடிக்கக்கூடாது.நடித்தால் உன் படத்தைப்புறக்கணிப்போம் என்று வெருட்டுவது சரியான செயற்பாடு அல்ல. முரளிதரனின் ஆளுமையை எதிர்ப்பவர்கள் படத்தைப்புறக்கணியுங்கள். அது பற்றிய உங்கள் விமர்சனத்தை முன் வையுங்கள். ஆனால் நடிகர் ஒருவரைப்பார்த்து நீ அவ்வேடத்தில் நடிக்காதே என்று கூறுவதன் மூலம் அந்நடிகனின் நடிப்புச் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.

யூதர்களை இனப்படுகொலை செய்த அடொல்ஃப் ஹிட்லரை வைத்து எத்தனை  திரைப்படங்கள் , தொலைக்காட்சித்திரைப்படங்கள் வெளியாகின. இத்திரைப்படங்களிலெல்லாம் ஹிட்லரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியிருப்பார்கள். நடிகர்கள் பலர் ஹிட்லரின் வேடங்களில் நடித்திருப்பார்கள். யூதர்கள் யாரும் இத்திரைப்படங்களில் நடித்த நடிகர்களை எவரையாவது பார்த்து  ஹிட்லரின் வேடத்தில் நடிக்காதே என்று கூறியிருப்பார்களா? அப்படிக்கூறியிருந்தால்கூடக் கலையுலகம் அதனை ஏற்றிருக்குமா?

நாம் எதிர்க்கவேண்டியது அல்லது விமர்சிக்க வேண்டியது முரளிதரனின் திரைப்படம் வெளியாகும்போது அத்திரைப்படத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உண்மையினைத்திரித்துக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றைத்தாமே தவிர அப்படத்தில் முரளிதரனாக நடிக்கும் நடிகரை அல்ல. யுத்தச் சூழலில் இந்தியப்படைகளுடன், இலங்கைப்படைகளுடன் எல்லாம் பல்வேறு முரண்பாடுகள் காரணமாக இயங்கியவர்களையெல்லாம் இன்று இலங்கைத்தமிழ் மக்கள் தம் அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இவ்விதமானதொரு சூழலில் முரளிதரனின் கூற்றுகளை அதுவும் பலவருடங்களின் முன்னர் கூறிய கூற்றுகளை வைத்து அவருக்கெதிராகப்போர்க்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தைத்தருகின்றது. இத்தனைக்கும் அவர் அரசியல் தலைவர்களில் ஒருவர் கூட அல்லர்.


ஒரு காலத்தில் எழுத்தாளர்களின் படைப்புகளைச் சேமித்து வைப்பதில் சிரமங்கள் பலவிருந்தன. ஆனால் இன்று இணையத்தின் வருகை அதனை மாற்றி வைத்துவிட்டது. டிஜிட்டல் நூல்கங்கள், பல்வகை இணையத்தளங்களில் வெளியாகும் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படைப்புகளை வாசகர்கள் தாமாகவே கண்டுணரும் நிலையினை இணையம் சாத்தியமாக்கியுள்ளது. இதனால்தான் எழுத்தாளர்கள் தம் படைப்புகளை இணையத்தில் பதிவு செய்வது அவசியமென்று கருதுகின்றேன். மின்னூல்களாக அவற்றைப்பதிவு செய்வதில் எழுத்தாளர்கள் கவனமெடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது படைப்புகள் பன்னாடுகளில் வாழும் வாசகர்களை மிகவும் எளிதாகச் சென்றடைகின்றன. இத்தொழில்நுட்பத்தை எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இணையத்தின் வருகைக்கு முன்னர் நூலுருப்பெற்று நூலகங்களில் சேமிக்கப்பட்டுள்ள படைப்புகளையே, சுவடிகள் திணைக்களங்களில் சேமிக்கப்பட்டுள்ள படைப்புகளையே , தனிப்பட்டவர்களின் சேமிப்புகளிலுள்ள படைப்புகளையே தீவிர ஆய்வுகள் மூலம் பெற முடிந்தது. தேடுதலற்றவர்கள் விமர்சகர்கள் விதந்தோறும் ஒரு சிலரின் படைப்புகளையே அடிப்படையாகக்கொண்டு கிளிப்பிள்ளையாகத்தம் ஆய்வுகளைச் செய்வார்கள். அவ்விமர்சகர்களோ தம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கேற்பச் சிலரைத்தூக்கியும், சிலரைத்தாக்கியும் தம் விமர்சனங்களை முன் வைப்பார்கள். இதனால் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் பற்றிய விபரங்கள் அதிக அளவில் கிடைப்பதில்லை. அந்த நிலையினை இணையத்தின் வரவு மாற்றி வைத்துள்ளது. இன்று எழுத்தாளர்கள் தம் படைப்புகளை உலகளாவியரீதியில் வாசகர்களின் முன் வைக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்குத் தம் படைப்புகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாத்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை அனைவரும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


வ.ந.கிரிதரன்KrishnaRaja KrishnaMeenan என்னும் முகநூற் பக்கத்தில் 'புலம்பெயர் தமிழ் உறவுகளே என விளித்துப் பதிவொன்று இடப்பட்டிருந்தது. அதில் "புலம்பெயர் தமிழ் உறவுகளே; சற்றுச் சிந்தியுங்கள்...! இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் "வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.' என்று அறிவுரை கூறப்பட்டிருந்தது. அதற்கான என் எதிர்வினை கீழேயுள்ளது:

மேற்படி கூற்றுக்கான எனது எதிர்வினை கீழே:

"இலங்கையில் கிடைப்பது இலவசக் கல்வி (பல்கலைக்கழகம் வரை). மேலும் அங்கு கிடைப்பது சிறப்பான கல்வி. பொருளாதாரம் ஒன்றுதான். அங்குள்ள மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியுடன் தொழில்நுட்பக்கல்லூரிகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த வேலையையும் செய்யும் மனப்பக்குவத்தை அவர்கள் அடைய வேண்டும். இங்குள்ள ஒருவர் அங்கு சென்று கட்டடப்பொருட்கள் உருவாக்கும் தொழிற்சாலையொன்றினை உருவாக்கியபோது அங்குள்ள இளைஞர்கள் அவ்விதமான வேலைகளைச் செய்வதற்கு முன்வரவில்லையென்றார். அதனால் அவர் கனடாவிலிருந்து இளைஞர்களை அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டார். மேலும் தென்னிலங்கைத் தொழிலாளர்களே இவ்விதமாகச் சகல வேலைகளையும் செய்ய முன்வருவதால் அவர்களே வடக்குக்கு வந்து வேலைகள் செய்வதாகவும் கூறினார்.

முதலில் யாழ்ப்பாணவத்தவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது கல்வியோ அல்லது பொருளாதாரமோ அல்ல. மேற்கு நாடுகளின் சமூக அமைப்பை. இங்குள்ள மக்கள் மத்தியில் சமூக ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. சகல தொழில்களையும் எல்லோரும் செய்கின்றார்கள்.. தொழில்நுட்பக்கல்லூரிகளில் அனைத்துத்துறைகளிலும் கற்பிக்கின்றார்கள். எல்லோரும் பல்கலைக்கழகங்கள் செல்வதில்லை. அவரவர் பிடித்த துறைகளில் திறமை பெறும் கற்கைநெறிகளைக் கற்றுத் தொழில் செய்கின்றார்கள். கனடியர்களில் 20% சுய தொழில் செய்பவர்கள். இதுபோல் சுய தொழில் செய்யும் பக்குவத்தைக்கொண்டவர்களாக இளைஞர்கள் உருவாக வேண்டும்.

மேற்கு நாடுகளில் உள்ளதுபோல் தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூகத்தை உருவாக்கும் நிலையினை அங்குள்ள சமூக, அமைப்புகள் உருவாக்க வேண்டும். தொழில் எதுவாயினும் அதனை எவரும் செய்யும் நிலை உருவாகவேண்டும். பல்வகைத்தொழில்களுக்கான கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தி அவற்றைக் கற்பதற்கு மாணவர்களைத் தூண்டும் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். அது முக்கியம்."

முகநூல் எதிர்வினைகள்:

1. Sugan Paris வடமாகாணசபை வேலைத்திட்டம் இது.உதாரணத்திற்கு துப்பரவுத் தொழிலாளர்கள் இன்னும் பழைய சாதி வழியிலேயே நீடிக்கிறார்கள். நவீன தொழில் நுட்பம் அங்கு இல்லை. பழைய கூலி முறையும் ஈக்கட்டு வழியும்தான். இரண்டு முறையில் இதை மாற்றவேண்டும். ஒன்று அதிக சம்பளம் நிரந்தர ஓய்வூதியம் குறுகியகால வேலை

2. Giritharan Navaratnam //இரண்டு முறையில் இதை மாற்றவேண்டும். ஒன்று அதிக சம்பளம் நிரந்தர ஓய்வூதியம் குறுகியகால வேலை இரண்டாவது நவீன தொழில் நுட்பம்// கனடா ,அமெரிக்காவில் நகரத்துத் துப்புரவு தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. நியூயார்க்கில் வருடம் $100,000 உழைக்கும் துப்புரவுத்தொழிலாளர் ஒருவரைப்பற்றிய செய்தியொன்றினை ஒருமுறை இங்குள்ள பத்திரிகையொன்றில் வாசித்துள்ளேன்.இரண்டாவது நவீன தொழில் நுட்பம் .
3. Sugan Paris கருணை அடிப்படையில் சம்பளம் கொடுப்பதாக இருக்கிறது யாழ் மாவட்ட துப்பரவு தொழிலாளர் நிலை. தற்காலிகமாக மேற்கு நாட்டின் துப்பரவு நிறுவனம் ஒன்றுடன் தற்காலிகமாக ஒப்பந்தம் ஒன்றை செய்யலாம் ,அத்தனை கட்டுமானங்களும்ம் தொழில் நுட்பங்களும் அங்கு போய்ச் சேரும் .

4. Sugan Paris நான் துப்பரவு தொழிலாளர் தான் ,நான்கு மணிநேர வேலை இரண்டுநாள் லீவு. மாதத்திற்கு எல்லாம் பிடித்தது போக 1050 euro Net . வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை சம்பளத்துடன்.

5. Giritharan Navaratnam வெளிநாடுகளில் நம்மவர்கள் பொருளியல் அடிப்படையில் எல்லா வேலைகளையும் செய்கின்றார்கள். இவ்விதமான நிலையினை அங்கு தோற்றுவிப்பதற்கு தொழிற் கல்வியை (பல் பிரிவுகளிலும்) அங்கு நவீனப்படுத்துவதோடு,அதிக வருவாய் உள்ளதாக மாற்ற வேண்டும். காலப்போக்கில் சகல தொழில்களையும் செய்யும் பக்குவத்தை அனைவரும் அடைவர். யாழ்ப்பாணத்தில் விவசாயம் செய்யாத இளைஞர்கள் கூட சிறீமா அம்மையார் காலத்தில் விசுவமடு போன்ற பகுதிகளுக்கு 'வெளிக்கிட்டு' மிளகாய் விவசாயம் செய்து பெரு இலாபம் ஈட்டினார்கள். சூழலை ஏற்படுத்திக்கொடுத்தால் அந்நிலை தோன்றும்.

6. Sugan Paris ஒருவருடம் மேலதிக கற்கை ,வாரத்தில் ஒருநாள் ,சம்பளத்துடன்.


காலத்தால் அழியாத கானங்கள்: "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்".பி.பி. ஶ்ரீனிவாஸ் & பி.சுசீலாவின் குரலினிமை,கவிஞர் கண்ணதாசனின் மொழியினிமை, எஸ்.எஸ்.ஆர் & விஜயகுமாரியின் நடிப்பினிமை ,இசைச்சித்தர் கே.வி.மகாதேவனின் இசையினிமை... அனைத்துமே இனிமை. கேட்பதில்., கேட்டு இரசிப்பதில்தான் எத்துணை இனிமை!

"இரவும், பகலும் உன் உருவம். அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்.
மறைக்க முயன்றேன் முடியவில்லை. உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை". - கவிஞர் கண்ணதாசன்

https://www.youtube.com/watch?v=3bzUv0io7mE


ஶ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) -ஊடகவியலாளரும், எழுத்தாளரும் என் முகநூல் நண்பர்களிலொருவருமான கீதா பிரியன் அவர்கள் அண்மையில் எழுதிய முகநூற் பதிவொன்றில் எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கத்துரை) பற்றி எழுதியிருந்தார். அது என் பால்ய காலத்து வாசிப்பு அனுபவங்கள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டி விட்டது.

இவர் என் பால்யப் பருவத்தில், எனக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அக்காலகட்டத்தில் தினமணிக்கதிரில் வெளியான 'நீ நான் நிலா' தொடர் நாவலை (ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியான தொடர்) விரும்பி வாசித்தேன். கல்கி இதழின் அல்லது தினமணிக்கதிரின் இலவச இணைப்பாக வெளியான இவர் எழுதிய நெடுங்கதையான 'நடு வழியில் ஒரு ரயில்' எனக்கு மிகவும் பிடித்த கதைகளிலொன்றாக அக்காலகட்டத்தில் விளங்கியது. இவையெல்லாம் அவர் ஶ்ரீ வேணுகோபாலன் என்னும் பெயரில் எழுதியவை. இவர் முதன் முதலாக புஷ்பா தங்கத்துரை என்னும் பெயரில் எழுதிய தொடர் நாவல் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்று நினைக்கின்றேன். அது தினமணிக்கதிரில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியானது. வெளியான காலத்தில் மிகுந்த வரவேற்பைப்பெற்றிருந்தது.

அறுபதுகளில் கல்கி சஞ்சிகையில் இவரது சிறுகதைகள், நெடுங்கதைகள், சிறப்புச் சிறுகதைகள் பல வெளியாகின. 'நடுவழியில் ஒரு ரயில்' நெடுங்கதை கூட முதலில் கல்கி சஞ்சிகையிலேயே வெளியாகியிருக்க வேண்டும்.

கல்கி - பெர்க்லி சிறுகதைப்போட்டியொன்றில் இவரது சிறுகதையான 'நாங்களும் நடிகைகள்' இரண்டாவது பரிசு பெற்றிருக்கின்றது. அவ்வருடத்துக்கான அப்போட்டியில் முதற் பரிசினைப்பெற்ற சிறுகதையான 'இவள் என் மனைவி' சிறுகதையினை எழுதியிருந்தவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. அதுவே இ.பா. எழுதி நான் வாசித்த முதலாவது அவரது படைப்பு.

நான் ஶ்ரீ வேணுகோபாலனின் எழுத்துகள் என் வாசிப்பு அனுபவத்தில் இன்பமளித்த வெகுசன எழுத்துகளில் குறிப்பிடத்தக்கவை.

பொதுவாக எழுத்தையே நம்பி வாழும் , வாழ்ந்த எழுத்தாளர்களை நான் பெரிதும் மதிப்பவன். பொருளியல்ரீதியில் அவர்களது பங்களிப்பு சிறப்பாக அமையாது விட்டாலும், அவர்களது எழுத்துலகப் பங்களிப்பு முக்கியமானது என்று கருதுபவன். அவ்வகையில் எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனையும் மதிப்பவன்.

வருமானத்தை மையமாக வைத்து புஷ்பா தங்கத்துரை என்னும் பெயரில் அவர் எழுதிய படைப்புகளில் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகின்றது' படைப்பினைத் தவிர ஏனையவை என் கவனத்தைக் கவரவில்லை.ஆனால் ஶ்ரீ வேணுகோபாலன் என்னும் பெயரில் அவர் எழுதிய பல படைப்புகள் இன்னும் நினைவிலுள்ளன.

ஒரு காலத்தில் எழுத்தாளர்களின் படைப்புகளைச் சேமித்து வைப்பதில் சிரமங்கள் பலவிருந்தன. ஆனால் இன்று இணையத்தின் வருகை அதனை மாற்றி வைத்துவிட்டது. டிஜிட்டல் நூல்கங்கள், பல்வகை இணையத்தளங்களில் வெளியாகும் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படைப்புகளை வாசகர்கள் தாமாகவே கண்டுணரும் நிலையினை இணையம் சாத்தியமாக்கியுள்ளது. இதனால்தான் எழுத்தாளர்கள் தம் படைப்புகளை இணையத்தில் பதிவு செய்வது அவசியமென்று கருதுகின்றேன். மின்னூல்களாக அவற்றைப்பதிவு செய்வதில் எழுத்தாளர்கள் கவனமெடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது படைப்புகள் பன்னாடுகளில் வாழும் வாசகர்களை மிகவும் எளிதாகச் சென்றடைகின்றன. இத்தொழில்நுட்பத்தை எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 11 August 2019 01:07