அ.ந..க.

கவிதை: அ.ந..க.வின்  'கடைசி நம்பிக்கை'!

பொதுவாகப் பெற்றொர் பிறக்கும் பிள்ளை புத்திக்கூர்மையுடன் இருக்க வேண்டுமென்று விரும்புவர். ஆனால் இந்தத்தந்தையோ அதற்கு நேர்மாறு. காரணம் மிகுந்த புத்திக்கூர்மை மிக்க தந்தையிவருக்கு இவருடைய புத்திக்கூர்மை வாழ்க்கைக்கு உதவவில்லை. 'யானோ எனது புத்தியின் கூர்மையால் , வாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கின்றேன்' என்று வருந்துகின்றார். இதனால் இவர் வேண்டுவதுதான் யாதோ? தனது பிள்ளை அறியாமையிலும், மடமையிலும் சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்றார். அவற்றில் எவர்க்கும் குறைவிலாதிலங்க வேண்டுமென்று விரும்புகின்றார். :-)

"இன்றென் நினைவு ஒன்றேயாகும் -
என்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து
அறியாமையிலும் மடமைச்சிறப்பிலும்
எவர்க்கும் குறைவிலா திலங்கி அமைதி
நிலவும் வாழ்க்கை நீள நடாத்"த வேண்டுமென்று விரும்புகின்றார்.

எதற்காகத் தெரியுமா?

அப்படியென்றால்தான் ,

"ஈற்றில் இந்த நாட்டை இயக்கும்
மந்திரி சபையிலும் குந்தியிருப்பான்" :-)

ஓரு சீனக்கவிதையின் தமிழாக்கமிது. தமிழாக்கியிருப்பவர் அ.ந.கந்தசாமி. 'தேன்மொழி' சஞ்சிகையின் இரண்டாவது இதழில் (ஐப்பசி 1955) வெளியான கவிதை இது. இன்று ஆட்சிக்கட்டிலுள்ள அமைச்சர்கள் பலரைப்பார்க்கும்போது இக்கவிதையில் விரவிக்கிடக்கும் அங்கதம் இதழ்க்கோடியில் புன்னகையினை வரவழைக்கின்றது. அன்று பாடியது இன்றும் நன்கு பொருந்துகிறதல்லவா.

கவிதை : கடைசி நம்பிக்கை!

புத்திரன் பிறந்தால் புத்திக் கூர்மை
மெத்தவே அவனிடம் மேவுதல் வேண்டும்
என்றே எவரும் எண்ணுவர் ஆயின்,
யானோ எனது புத்தியின் கூர்மையால்
வாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கிறேன்
இன்றென் நினைவு ஒன்றே யாகும்:
என்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து
அறியா மையிலும் மடமைச் சிறப்பிலும்
எவர்க்கும் குறைவிலா திலங்கி அமைதி
நிலவும் வாழ்க்கை நீள நடாத்தி
ஈற்றில் இந்த நாட்டை இயக்கும்
மந்திரி சபையிலும் குந்தி யிருப்பான்
என்ற ஆசை ஒன்றே
என்னுளம் மன்னி இருப்பது வாமே.

[தேன்மொழி 2, 1955. இது அ.ந.கந்தசாமி மொழிபெயர்த்த சீனக்கவிதை).


ஈழத்துத் தமிழ்க் கவிதை: அ.ந.க.வின் 'நான் செய் நித்திலம்!'

அ.ந..க.'தேன்மொழி' சஞ்சிகையின் மூன்றாவது இதழில் (கார்த்திகை 1055) வெளியான 'நான் செய் நித்திலம்' என்னுமிக் கவிதை எனக்குப்பிடித்த தமிழ்க் கவிதைகளிலொன்று. அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) அவர்கள் மார்க்சியவாதியாகவிருந்தபோதும் அவரது எழுத்துகள் பிரச்சார வாடையற்றவை. இலக்கியநயம் மிக்கவை. கற்பனையாற்றல் மிக்கவை. மொழிவளம் மிக்கவை. அவரது மரபுக்கவிதைகள் ஏனைய பண்டிதர்களின் பலரின் மரபுக்கவிதைகளைப்போல் வெறும் வரட்டுச் சூத்திரங்களோ அல்லது பிரச்சாரங்களோ அல்ல. அவரது மரபுக்கவிதைகள் சமூக அநீதிக்கெதிராகப்பொங்கி எழுந்தன. உதாரணத்துக்கு 'வில்லூன்றி மயானம்', 'தேயிலைத்தோட்டத்திலே', 'முன்னேற்றச்சேனையொன்று' போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவரது காதலை, குடும்ப உறவுகளைப்பற்றிப்பாடின. உதாரணத்துக்கு 'நான் செய் நித்திலம்' போன்ற கவிதைகளைக் கூறலாம். மானுட சமூக, அரசியல் , பொருளியல் அமைப்பைப்பற்றிச் சிந்தித்தவை அவரது கவிதைகள். அறிவியலினூடு இவற்றை நோக்கிய கவிதையான 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னைப்பொறுத்தவரையிலிருபதாம் நூற்றாண்டுத்தமிழ்க் கவிதைகளில் சிறந்த முதற் பத்துக் கவிதைகளிலொன்றாக விளங்கும். இலங்கைச் சாகித்திய விழாவொன்றில் அவரால் பாடப்பட்ட அவரது கவிதையான 'கடவுள் என் சோர நாயகன்' என்னும் கவிதைபற்றி தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் 'இதுபோன்ற கவிதைகள் நூறாண்டுகொருமுறையே தோன்றும்' என்று விதந்தோதியதாக எழுத்தாளர் அந்தனி ஜீவா தினகரனில் வெளியாகிய அவரது அ.ந.க பற்றிய கட்டுரைத்தொடரான 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த கவிஞர்களிலொருவராகவும் விளங்குபவர் அ.ந.க . அவரது கவிதையற்ற இலங்கைத்தமிழ்க் கவிதைத்தொகுப்புகளை என்னால் பூரணமான தொகுப்புகளாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.

தேன்மொழி சஞ்சிகையில் வெளியான இக்கவிதையை ஒரு கணம் கூர்ந்து கவனியுங்கள். பிறந்த குழந்தையினை இக்கவிதை கூறும் தலைவனின் மனைவி கொண்டுவந்து தலைவனின் மடிமீது கிடத்துகின்றாள். இதனை மையமாக வைத்து அ.ந.க பின்னிய கவிதையிது. சிறப்புமிகு கவிதையிது.

எனக்கு மிகவும் பிடித்த பாவினம் ஆசிரியப்பா. குறிப்பாக நிலைமண்டில ஆசிரியப்பா. இக்கவிதை அவ்வகைக்கவிதை. இக்கவிதையில் அ.ந.க முத்து (நித்திலம்), சிப்பி (இப்பி) ஆகியவற்றைப் பலவற்றுக்கு உருவகித்திருப்பார்; உவமையாக்கியிருப்பார். அவற்றை உணர்ந்து அறியும்போதுதான் கவிதை இனிக்கும். இன்பத்தைத்தரும். கவிதை 'வானிலோர் முத்தாக' வளர்மதியைக் கூறுவதுடன் ஆரம்பிக்கின்றது. அடுத்து மாடியில் இப்பி ஒன்றினுள் இட்ட முத்து பற்றிக் கூறுகின்றது. அதன் விளைவாக ஈரைந்து மாதம் கழிந்து கண்ணன் போலொரு கனிவாய்க்குழந்தை வருகின்றபோது மாடியிலிட்ட முத்தையும் , இப்பியையும் அவை எவையென அறிந்துகொள்கின்றோம். மனையாள் குழந்தையை மடியிடைக் கிடத்தி முன்னர் நீங்கள் செய்த நித்திலம் இதுவே என்கின்றாள். அவ்வேளையில் அவள் கண் ஓரம் ஒளிமுத்தொன்று தோன்றுகின்றது. இதனைப்பற்றிக் குறிப்பிடுகையில் 'உள்ளத்திப்பியில் உதித்துக் கண்வழி வந்த அம் முத்து' என்கின்றார். இங்கு உள்ளம் இப்பியாக உருவகிக்கப்படுகின்றது. இவ்விதம் கண்களுகுத்த முத்து மடியில் கிடந்த குழந்தைமீது விழுகின்றது. குழந்தையஒ எடுத்து அதன் மலர்க்கரம் தடவி உளம் மகிழ்கையில் நினைக்கின்றார் 'நான் செய் நித்திலம் தேன் செய்ததுவே. முத்தையும் சிப்பியையும் வைத்து இனிய குடும்பமொன்றின் இன்பத்தினை எவ்வளவு அழகாகக் கவிதையாக்கியிருக்கின்றார் அ.ந.க .

இக்கவிதையை ஆசுகவி வேலுப்பிள்ளையின் பேரனும், எழுத்தாளரும், கவிஞரும் , கலைஞருமான அமரர் 'சிலோன்' விஜயேந்திரன் தொகுத்த ஈழத்துக்கவிதைகளின் தொகுப்பான 'கவிதைகனிகள்' தொகுப்பிலும் காணலாம்.

நான் செய் நித்திலம்! - அ.ந.கந்தசாமி (கவீந்திரன) -

வானிலோர் முத்தினை வைத்திழைத் ததுபோல்
வளர்மதி தவழ்ந்தது; மாடியின் மீதுயான்
இப்பி ஒன்றில் முத்தொன் றிட்டனன்;
இப்பி மூடிற்று; ஈரைந்து மாதம்
கழிந்தது; கழிந்தபின் என்மனை விளங்கக்
கண்ணன் போலொரு கனிவாய்க் குழந்தை
வந்தது; வந்தபின் வாணிலா முகத்தென்
மனையாள் அதைஎன் மடியிடைக் கிடத்தி
ஈரைந்து திங்களின் முன்னால் ஒருநாள்
நீங்கள் செய்த நித்திலம் இதுவே,
என்று கூறி மகிந்தனள்; அவள் கண்
ஓரம் கண்டேன்; ஒளிமுத் தொன்று
அங்கு துடித்ததும் கண்டனன்; அவள் விழி
தொட்டேன்; முத்துத் தீய்ந்தது; மகிழ்ச்சியில்
உள்ளத்திப்பியில் உதித்துக் கண்வழி
வந்தவம் முத்தில் வையகத் தின்பம்
யாவும் கண்டனன்; அம்முத்தெனது
மடியிடைக் கிடந்த மணிமிசை விழுந்திட
மணியை எடுத்து நான் மலர்க்கரம் தடவி
உச்சி மோந்து உளம்மகிழ்ந் திட்டேன்,
நான் செய் நித்திலம் தேன்செய் ததுவே!

- தேன்மொழி சஞ்சிகையின் மூன்றாவது இதழில் வெளிவந்த கவிதை. -


 

'தேன்மொழி' சஞ்சிகையின் இரண்டாவது இதழில்  அ.ந.கந்தசாமி பற்றிய அறிமுகமும்  கடைசிப்பக்கத்திலுள்ளது:

" அன்பர் அ.ந.கந்தசாமி அவர்கள் ஈழத்து வாசகர்கள் நன்றாக அறிவார்கள். சிறந்த கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் புனைவதோடு நில்லாமல் கவிதைத்துறையிலும் புகுந்துள்ளவர். ஓசை அழகிலும், சொல் அழகிலும் அதிக கவனம் செலுத்திப் பொழுளழகைக் கைதவறவிடும் பல கவிஞர்கள் போலில்லாமல், கருத்துச் செறிந்த கவிதைகள் தருபவர்.  'கவீந்திரன்' முதலிய பல புனைபெயர்களிலும் எழுதியிருக்கிறார். சுதந்திரன், வீரகேசரி ஆகிய பத்திரிகையிகளில் கடமையாற்றியவர். இப்போது அரசாங்கத்தின் தகவற்ப்குதியில் மொழிபெயர்ப்பாளராகவிருக்கிறார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.