வாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு   கனடா) எஸ்.கே.வி பார்வையில் 'குடிவரவாளன்'சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல் பிரிவுகளிலும் தன் பன்முக ஆளுமையைப் பதித்து வரும் எழுத்தாளர் எஸ்.கே,.விக்னேஸ்வரன் ஜனவரி 2019 'தாய்வீடு' பத்திரிகையில்  'பூவுலகின் ஓசைகள்' என்னுமொரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் வாசித்த நூல்களில் பத்து நூல்களைத் தேர்ந்தெடுத்து அவை பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்த பத்து நூல்களின் விபரங்கள் வருமாறு:

1.  Beween Parenst and Child  by Heim G.Ginott
2. Black Boy by  Richard Wright
3. The Glass Palace by Amitav Ghosh
4.  மாதொருபாகன் (நாவல்) - பெருமாள் முருகன்
5. குடிவரவாளன் (நாவல்) - வ.ந.கிரிதரன்
6. நிலவளம் (நாவல்)  - க.நா.சுப்பிரமணியம் (The Growth of the Soil by Knut Hamsun என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு)
7. அன்புவழி (நாவல்)  - க.நா.சுப்பிரமணியம் Barabbas by  Par Lagerkvist என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு)
8. கதை - பார்த்திபன் (சிறுகதைத்தொகுப்பு)
9.  ஏழு கடற்கன்னிகள் - தமயந்தி (சிறுகதைகள்)
10. உம்மத் (நாவல்) - ஸர்மிளா ஸெய்யத்

இவற்றில் அவர் என் நாவலான 'குடிவரவாளன்' பற்றி எழுதிய குறிப்புகளை ஒரு தகவலுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

குடிவரவாளன்:
"குடிவரவாளன் நாவல் அதன் கதை சொல்லி ஒரு ஈழத்து அகதி. நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவின் நியூயோர்க் மாநகரில் ஒரு சட்டவிரோதக் குடிவரவாளனாக எவ்விதம் தனது இருப்பினைத் தக்க வைப்பதற்காகப் போராடுகின்றான் என்தை விவரிக்கும் ஒரு படைப்பு.  எழுத்தாளர் வ.ந.கிரிதரன் அவர்கள் தனது  புலம்பெயர்வு அனுபவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய இரண்டாவது நாவல் இது.  புலம்பெயர் சூழலில்  நாவல் வடிவில்  இந்த விடயம் சார்ந்து ஈழத்தமிழ் படைப்பாளர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த எழுத்து இவரதே என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

அமெரிக்காவில் அரசியற் தஞ்சம் புகுந்து, பல்வேறு நெருக்கடிகள் மத்தியில் தன்னை ஒரு குடிவரவாளனாக உருவாக்கிக்கொள்வதற்காக ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றை எதிர்கொள்ள அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் அவரது வாழ்வின் மீதான உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த இந்த நாவல், ஒரு வரலாற்று ஆவணம் என்ற முக்கியத்துவத்தையும் கூடவே கொண்டுள்ளது. அகதிகளாக வந்த இளைஞர்களிடையே எதிர்காலம் பற்றிய எந்தவித நிச்சயமான முடிவுமில்லாத  நிலையில் நடக்கும் உரையாடல்கள் , பரிமாறப்படும் உணர்வுகள், தமது அனுபவங்க்ளைப் பகிர்ந்துகொள்ளல் என்று விரிவதுடன் வாழ்ந்த பிரதேசத்தை, வாசிப்பவர்கள் கண்முன்னே காட்சிப்படுத்தும் விதத்திலான மொழியையும் கொண்டதாக அமைந்துள்ள இந்த நூல் கனடாவில்  வாங்கக் கிடைக்கிறது."

நாவலைப்பற்றித் தனது கருத்துகளைப்பகிர்ந்துகொண்டதற்கு எஸ்.கே.விக்கு நன்றி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.