நூல் அறிமுகம்: கசாக்கின் இதிகாசம் பற்றி....  - 30.10.2017 அன்று 'ரொறன்ரோ' தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் மூல வடிவத்தை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இதனை மையமாக வைத்துத்தான் அவ்வுரையினை ஆற்றியிருந்தேன். இருந்தாலும் உரையாற்றும் நேரக் கட்டுப்பாடு காரணமாகக் கூற வேண்டிய யாவற்றையும் கூறினேனா இல்லையா என்ற சந்தேகமிருப்பதால் இக்கட்டுரையினை இங்கு பதிவிடுகின்றேன். - வ.ந.கி -


இங்கு நான் அண்மையில் நான் வாசித்த நூலொன்றினை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இது நூல் பற்றிய அறிமுகமேயன்றி விரிவான திறனாய்வு அல்ல என்பதையும் முதலிலேயே கூறிக்கொள்ள விழைகின்றேன். இதுவொரு புதினம்.  மலையாள மொழியிலிருந்து தமிழுக்கு  எழுத்தாளர் யூமா வாசுகியால்  மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  ஓ.வி.விஜயனின் (ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்)  'கசாக்கின் இதிகாசம்' நாவலைத்தான் குறிப்பிடுகின்றேன். இம்மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

முதலில் சுருக்கமாக நாவலாசிரியர் ஓ.வி.விஜயன் அவர்களைப்பற்றிப் பார்ப்போம். ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன் மலையாள மொழியில் எழுத்தாளர், பத்திரிகையாளர், கேலிச்சித்திரக்காரர் எனப்பன்முகபரிமாணங்களைக்கொண்டவர். நாவல், சிறுகதை, மற்றும் கட்டுரை என இவரது இலக்கியக் களம் விரிந்தது. இவரது சகோதரி ஓ.வி உஷா,வும் மலையாளக் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2.7.1939இல் கேரள மாநிலத்திலுள்ள கோழிகோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College, Madras) ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2005இல் மறைந்து விட்டார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாக்கித்திய அக்காதெமி மற்றும் கேரள மாநில அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளைப்பெற்ற ஓ.வி.விஜயன் இந்திய அரசின் பத்மபூஷண் விருதினையும் பெற்றவர். இவரது மனைவி தெரசா . அவரும் அமரராகிவிட்டார். ஒரே மகனான மது அமெரிக்காவில் வசிக்கின்றார்.

'கசாக்கின் இதிகாசம்' என்னுமிந்த நாவல் மலையாளத்தில் வெளிவந்த ஆண்டு 1969. இதுவே ஓ.வி.விஜயனின் முதலாவது நாவலாகும். இதிகாசமென்றதும் பன்னூறு பக்கங்களைக் கொண்ட விரிந்த நாவலாக இதனை யாரும் கருதி விடாதீர்கள்.  தமிழ் மொழிபெயர்ப்பு 239 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. விக்கிபீடியாக் குறிப்புகளின்படி இந்நாவலை ஆசிரியர் எழுதுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. இந்நாவலின் கட்டுக்கோப்பான மொழி இறுக்கத்தின் காரணத்தை உணர் முடிகின்றது. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவலாக இதனைக் குறிப்பிடுவார்:

"கசாகின் இதிகாசம் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவல். ஒருவருடகாலம் அது தொடராக வந்தாலும் எழுதியது வெறும் நாற்பது நாட்களுக்குள் என்று விஜயன் சொன்னார். திருப்பி எழுதவில்லை. வாசிக்கவும் செய்யவில்லை. அச்சில் வந்தபின்னரே வாசித்து அடுத்த பதிப்புகளில் கொஞ்சம் விரிவாக்கிக்கொண்டார்" என்று அவர் தனது வலைப்பதிவு கட்டுரையொன்றில் குறிப்பிடுவார். இந்நாவலில் பாவிக்கப்பட்டுள்ள கட்டுக்கோப்பான மொழிச்சிக்கனமும், சிறப்பும் குறுகிய காலத்தில் அவசரப்பட்டு எழுதிய நாவல்களிலொன்றாக இதனை வெளிப்படுத்தவில்லை.

இந்நாவலை நான் தேர்வு செய்ததற்குக் காரணம் இந்நாவல் பிரதிபலிக்கும் இலக்கியப்போக்கு. தமிழில் இருத்தலியற் பண்புள்ள நாவல்கள் மிகக்குறைவாகவே வெளியாகியுள்ளன. தத்யயேவ்ஸ்கி, காப்கா போன்றோரின் படைப்புகள் இருத்தலியற் பண்பினைப் பிரதிபலிக்கும் படைப்புகளாக இலக்கியத் திறனாய்வாளர்கள் சிலாகிப்பர். அந்த வகையில் இந்நாவலும் அவ்வகையான இலக்கியப்போக்குப்பண்பு மிக்க நாவலாகச் சிலாகிக்கப்படுகின்றது. ஆனால் இந்நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம் நூல் பற்றிய பின் அட்டை அறிமுகத்தில் இந்நாவலை மாய எதார்த்தப்போக்கினைப் (மாஜிக்கல் ரியாலிசம்) பிரதிபலிக்கும் நாவலாக விபரித்துள்ளது.

நாவலின் முக்கிய பாத்திரம் இளைஞன் ரவி. படித்தவன். கசாக் கிராமத்தில் ஒராசிரியர் பள்ளி ஒன்றை அமைக்கும் ஜில்லா போட்டின் புதிய திட்டத்துக்கேற்ப அங்கு அவ்விதம் அமைக்கப்படும் பள்ளி ஆசிரியனாக ரவி பேருந்தில் வந்து கூமன் காடுப்பகுதிக்கு வந்து இறங்குவதுடன் நாவல் ஆரம்பமாகின்றது. கூமன்காட்டிலிருந்து கசாக்கிற்கு நடந்துதான் செல்ல வேண்டும். காட்டுத்தேன் கூடுகளை உள்ளடக்கிய செதலி மலை கசாக்கின்பின்னால் அதனை அரவணைத்தபடி விரிந்து கிடக்கின்றது. ஓடை, பள்ளிக்கூடம்,  சிதைந்த பள்ளிவாசல், ஓடைக்கு அப்புறம் வயல்கள், தாமரைக்குளம்.. இதுதான் கசாக் பிரதேசம்.

கசாக்கின் மனிதர்கள்: அல்லாப்பிச்சா மொல்லாக்கா , அவர் மனைவி தித்திபி. மகள் கசாக்கின் அழகியான மைமூனா. இக்கதை நடக்கும் காலத்தில் மைமூனாவுக்கு வயது 28. கசாக்குக்கு 12 வருடங்களுக்கு வந்த போது அவளுக்கு வயது 16.  [பக்கம்26].

ஓ.வி.விஜயன்நைசாமலியை மைமூனாவின் வயதினையொத்த சிறுவனாக அல்லாப்பிச்சா மொல்லாக்கா வீட்டுக்குக்கூட்டிக் கொண்டு வருகின்றார். அவனது பெண்மைத்தன்மையான இளமை அல்லாப்பிச்சா மொல்லாக்காவை எவ்விதம் ஆகர்சித்தது என்பது பற்றியும் தன் மொழியில் நாவலாசிரியர் சுருக்கமாக, வாசகர்களே அவ்விடயம் பற்றி புரிந்துகொள்ளும்படி கோடு காட்டியிருக்கின்றார். ஆரம்பத்தில் அவர்களுடன் தங்கியிருக்கும் அவன் பின்னர் அங்கிருந்து சென்று கூமன்காவில் அத்தரின்  பீடிக்கொம்பனியில் வேலை செய்கின்றான். அடுத்த ஐந்து வருடத்தில் அவன் சொந்தமாய் கூமன்காவில் கம்பனி தொடங்குகின்றான். அதற்குரிய பணத்தை அத்தரின் மனைவி கொடுத்ததாகக் கதையொன்றும் உலவுகின்றது. மீண்டும் கசாக் வருகின்றான். பாழடைந்த பள்ளிவாசலில், அவனுக்கும் மைமூனாவுக்குமிடையில் தொடர்பு தொடர்கின்றது. இந்நிலையில் கசாக் திகைக்கும்படி மைமூனாவை அல்லாப்பிச்சா மொல்லாக்கா முங்ஙாங்கோழி என்னும் வயது முதிர்ந்த, ஏற்கனவே கல்யாணமாகி , மைமூனா வயதில் பெண்ணொருத்தியை உடைய  முதியவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார். மீண்டும் கசாக்கை விட்டு  நைசாமலி நீங்குகின்றான் இரண்டாவது தடவையாக. அடுத்த ஒரு வருடம் அவன் எங்கு சென்றான் என்பது யாருக்கும் தெரியவில்லை. பின் மீண்டும் அத்தரின் பீடிக் கொம்பனியில் தொழிலாளியாக வருகின்றான். தொழிலாளர்களை அணிதிரட்டி மார்க்சியச் சார்புள்ள யூனியன் அமைக்கின்றான். அவன் வேலை நீக்கம் செய்யப்படுகின்றான். தொழிலாளர் போராட்டம் வெடிக்கின்றது. அத்தரும் , நைசாமலியும் கைது செய்யப்படுகின்றனர். போலிசாரின் சித்திரவதை அவனை மாற்றுகின்றது. தொழிலாளர் தலைவன் அதன்பிறகு ஷெய்க்கின் காலியாராக கசாக்குக்குத் திரும்புகின்றான். காலியாரின் இருப்பிடம் பாழடைந்த அந்த ராஜாவின் பள்ளிவாசல்.

மைமூனாவை மணந்த முங்ஙாங்கோழி என்னும் சுரு ராவுத்தரின் முதல் மனைவிக்குப் பிறந்தவள் ஆபிதா.  அவளது அம்மா கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள்.  சுரு கொன்றதாகவும் கதையொன்று உலவுகின்றது. ரவி ஆரம்பித்துள்ள தனி ஆசிரியர் பாடசாலையில் வேலைக்காரியாக மாதவன் நாயர் கொண்டு வந்து சேர்க்கிறார்.  முங்ஙாங்கோழியின் கவனிப்பிலிருந்த ஆபிதா மீதான முங்ஙாங்கோழியின் கவனத்தைப் புது மனைவி மைமூனா எடுத்துக்கொள்ளவே ஆபிதா தனிமைப்படுத்தப்படுகின்றாள். போதாதற்கு மைமூனா அவளை வேலைக்குச் செல்லக் கட்டாயப்படுத்துகின்றாள். இதற்கிடையில் மைமூனாவுக்கும், காலியாருகுமிடையிலான உறவு தொடர்வதை அவதானித்த அவள் அதனைத் தந்தையிடம் கூறப்போவதாக எச்சரிக்கின்றாள். சொல்லவும் செய்கின்றாள். அதற்காக அவளை அடித்துக் காயப்படுத்தியபடி துரத்திச்செல்லும் முங்ஙாங்கோழி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கின்றார்.

கசாக்கின் ஏனைய முக்கிய பாத்திரங்களாக சிவராமன் நாயர், அழகியான மனைவி நாராயணியம்மாள், பனையேறி குப்புவச்சன் (மதுவிலக்குக் கொள்கை காரணமாக தொழில் நட்டமடைந்து, மனைவி கல்யாணியும் விட்டுச் சென்ற நிலையில், அலியாரின் தேநீர்க்கடை முன்னாலுள்ள சுமைதாங்கியில் சாய்ந்திருந்தபடி பிறரின் அந்தரங்கங்களைப்பற்றிய ஊகங்களை வதந்திகளாக்கி வாழும் மனிதன்.), ரவியின் பாடசாலைக்கு ஆபிதாவுக்குப் பிறகு வேலை செய்ய வரும் சாந்தும்மா (ஆவி குடியிருக்கும் புளியமரத்துப் பேய்களுக்குப் பலியாகியவர் அவள் கணவன் ராவுத்தர்.) ஆகியோரைக் குறிப்பிடலாம். சிவராமன் நாயரின் அழகியான மனைவி மீதான சந்தேகங்களும் நாவலில் விபரிக்கப்பட்டுள்ளன.

கசாக்கில் ஏற்கனவே 12 பள்ளிவாசல்கள்  அழிந்து போயிருக்கின்றன. 13வது பள்ளிவாசலில்தான் அல்லாப்பிச்சா மொல்லாக்கா தற்போது ராவுத்தர்களின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது. ஏற்கனவே  இருந்த பள்ளிவாசல்களிலொன்றுதான் அழிந்த நிலையில் பேய் வீடாகிவிட்ட ராஜாவின் பள்ளிவாசல்.  அரபிக்குளத்தின் மேட்டில் அது இருளடைந்து நின்றது.  

கசாக்கின் முக்கியமான மனிதர்கள் இவர்கள். இம்மானுடர்களை எவ்விதம் காமம், ஐயங்கள் போன்ற மானுட உணர்வுகள் ,  சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் , ஆட்டிப்படைக்கின்றன என்பதை விபரிக்கும் கசாக்கின் இதிகாசம் ரவி ஓராசிரியர் பள்ளியை உருவாக்கிக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக கூமன்காடு வரை பேருந்தில் வந்திறங்கி, கசாக் நோக்கி நடப்பதுடன் ஆரம்பமாகி, அதே ரவி தன் பதவியை ராஜினாமாச் செய்து மீண்டுக் கசாக்கை விட்டு விலகிச்செல்வதற்காகக் கூமன்காவு வந்து பேருந்துக்காகக் காத்து நிற்பதுடன் முடிகின்றது. ஆனால் அவ்விதம் காத்துநிற்கும்போது மழை பெய்து கொண்டிருக்கின்றது. அச்சமயம் மண் கட்டிகளினூடு எதிர்ப்படும் அரவமொன்றின் தீண்டலுக்குத் தன்னை  முழுமையாக, விருப்பத்துடன் வழங்குகின்றான். மரணம் அவனை அரவணைத்துக்கொள்கின்றது. மண்ணில் வீழ்ந்து கிடக்கும் அவனது தோற்றத்துடன் நாவல் முடிவு பெறுகின்றது.

இந்நிலையில் ரவியைப்பற்றியும் சிறிது விளக்க வேண்டும். இவனொரு விஞ்ஞானப்பட்டதாரி. பத்மா என்னும் பெண்ணின் காதலுக்குரியவன். அவள் அவனைத்தன்னுடன் அமெரிக்கா வந்து படிப்பைத்தொடரும்படி வற்புறுத்துகின்றாள்.  நோய்வாய்ப்பட்ட தந்தையின் இரண்டாவது மனைவியான அழகியான சிற்றன்னையுடன் ஏற்பட்ட தொடர்பால் ஏற்பட்ட உளவியற்பாதிப்பால் துறவு நாடிக் காசிக்குச் சென்றவன் ரவி. பின்னர் அங்கிருந்தே கசாக்குக்கு ஆசிரியனாகத் திரும்புவான். பத்மா அவனைக் காசி சென்று தேடி கசாக்கில் அவனிருப்பதை அறிந்து வந்து மீண்டும் தன்னுடன் வரும்படி வேண்டுகின்றாள். ரவி மறுத்து விடுகின்றான். அதே சமயம் நாவல் முழுவதும் ரவியால் காமத்தின் ஆதிக்கத்திலிருந்து மீண்டு வெளியே வரவே முடியவில்லை. கசாக்கிலும் பலருடன் அவனது காம உறவு இறக்கும் வரையில் தொடர்கின்றது. கசாக்கின் மனிதர்களைப் பற்றிய எனது இச்சிறு விளக்கம் நாவலின் போக்கைச் சிறிது விளக்கியிருக்கலாம்.

இந்நாவலை இருத்தலியல் நாவல்களிலொன்றாக ஒப்பிட்டு எழுத்தாளர் கஸ்தூரிரங்கன் (இவர் கணையாழி கஸ்தூரிரங்கன் அல்லர்) 'இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும்' என்றொரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் மீள்பிரசுரம் செய்திருந்தார். அதில் எழுத்தாளர் கஸ்தூரிரங்கன் நாவலை  “கசாக்கின் இதிகாசம்” வரலாற்றில் (நான் மிகுந்த தயக்கத்துடன் பயன்படுத்தும்) “'இருத்தலியல்' சார்ந்த சிந்தனையின், தரிசனத்தின் கூர்முனைகளில் ஒன்று" என்று குறிப்பிடுவார். நவீன இருத்தலியலின் மூலவர்களான மார்ட்டின் ஹைடெக்கர், ஜீன் போல் சார்த்தர் ஆகியோரி இருத்தலில் நோக்கு பற்றிச் சுருக்கமாக விளககியிருப்பார்.  நான் இங்கு இருத்தலியால் கோட்பாடுகள் பற்றிய விரிவான சர்ச்சையில் ஈடுபடப்போவதில்லை. ஆனால் நாவல் இருத்தலியற் சிந்தனைக்களுக்கமைய வெளிப்பட்டிருக்கின்றதா என்பதை மட்டும் நோக்கப்போகின்றேன்.

இருத்தலியற் சிந்தனைகள் உயிர்களின் இருப்பு பற்றி, இருப்பின் இறுதி நிலையான மரணம் பற்றி, இருப்பின் காரணம் பற்றி, இருப்பியங்கும் காலம் பற்றி விபரிக்கின்றன; தேடலைத் தொடர்கின்றன. இருத்தலியற் சிந்தனைகள் இருப்பு மரணத்தில் முழுமையடைக்கின்றது என்பதைப்பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன. இந்நாவல் முழுவதும் மரணம் வியாபித்துக்கிடக்கின்றது. நாவலின் ஆரம்பத்தில் கசாக் நோக்கிச்செல்லும் ரவியின் தாயின் மரணம் விபரிக்கப்படுகின்றது. நாவலின் இறுதி ரவியின் மரணத்துடன் முற்றுப்பெறுகின்றது. இடையில் நாவலின் பல பாத்திரங்களின் மரணங்கள் எதிர்ப்படுகின்றன. முங்ஙாங்கோழியின் மரணம் கவித்துவமானதொரு மொழியில் விபரிக்கப்படுகின்றது.

முங்ஙாங்கோழியின் இளம் மனைவியும் , கசாக்கின் பேரழகியுமான மைமூனாவுக்கும் அவளது இளம்பருவத்துக் காதலுமான நைசாமலியுடனான தொடரும் தொடர்பு பற்றிய விபரத்தினைக் கூறியதற்காகத் தனது முதல் மனைவிக்குப்பிறந்த குழந்தையான இருபது வயது ஆபிதாவை அடித்துத்துரத்திக்கொண்டிருந்த முங்ஙாங்கோழி , மகளைப்பற்றி எண்ணிப்பாடியபடியே மரணத்தைத் தழுவிக்கொள்கின்றார்: மகளைத் தூங்க வைப்பதற்காக ஒருகாலத்தில் தான் பாடிய பாடலைப்பாடுகின்றார்.

[
"தல பெருத்த மீனே.
என் சேர மீனே.
என் குட்டி மகளுக்கொரு
மணி கொண்டு வருவாய்.."

கிணற்றுக்குள்  பாய்ந்தார். கிணற்றைக் கடந்து உள் கிணற்றுக்கு.. தண்ணீரின் வெல்வெட் திரைகளினூடே அவர் சென்றார்.  கண்ணாடிக் கதவுகள் கடந்து, கனவினூடே, அந்திப்பிரக்ஞையினூடே, தன்னைக் கை நீட்டி அழைத்த பொருளை நோக்கி அவர் யாத்திரையானார்.  அவருக்குப் பின்னால் கதவுகள் ஒவ்வொன்றாய் மூடிக்கொண்டன." பக்கம்  88. ]

ஆபிதா என்னும் அந்த இளம் பெண்ணின் உணர்வுகள், தந்தையின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கிய அவள் வாழ்க்கையில் தந்தையின் இரண்டாவது மறுமணம் அவளைத் தனிமைப்படுத்திவிட்டதனால் ஏற்படுத்திய உணர்வுகள், அவளது அலைச்சல், உளவளர்ச்சி குன்றிய அப்புக்கிளியுடனான அவளது உரையாடல்கள் எல்லாம் அவளது இருப்பை வாசிப்பவர் நெஞ்சங்களை அதிர வைக்கும் வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தீராத மானுட சோகங்கள் நெஞ்சை வாட்டும். இவை அனைத்தையும் அவர் 'முதல் பாடங்கள்' என்னும் அத்தியாயத்தில் வெளிப்படுத்தியிருப்பார். இருப்பொன்றுதான் எத்தனை வகையான உணர்வுகளினூடு பயணிக்க வேண்டியிருக்கின்றது?

நாவலின் இறுதி ரவியின் மரணத்துடன் முடிவடையும் பகுதி பின்வருமாறு விபரிக்கப்பட்டிருக்கின்றது.

"நீலநிற முகம் உயர்த்தி அது மேலே பார்த்தது. பிளவுற்ற  கருநாக்கை வெளியே சொடுக்கியது. பாம்பின் படம் விரிவதை ரவி ஆவலுடன் பார்த்தான்.  பேரன்புடன்.  பாதத்தில் பற்கள் பதிந்தன. பல் முளைக்கும் சின்னப்பயலின் குறும்பு. அவை மீண்டும் மீண்டும் பாதத்தில் பதிந்தன. படத்தைச் சுருக்கி, ஆவலுடன், பேரன்புடன் , ரவியைப் பார்த்துவிட்டு அது மீண்டும் மண்கட்டிகளிடையே ஊடுருவிச் சென்றது. " பக்கம் 239]

இதற்கு முன்னர் தன்னிருப்பிடத்தைப் பூட்டி விடைபெறுகையில் இவ்விதம் வருகின்றது:

"பூட்டப்பட்ட கதவை ரவி கொஞ்சம் நேரம் பார்த்தான். குடையும் பையுமாகப் புறப்படும்போது  நொடி நேரம் அவன் கண் மூடினான். அந்தி யாத்திரைகளின் தந்தையே, ரவி சொன்னான். விடை கொடுங்கள்.  வெள்ளெருக்கின் இலைகள்  சேர்த்துத் தைத்த இந்த மறுபிறவியின் கூடுவிட்டு நான் மீண்டும் பயணிக்கின்றேன். " [பக்கம் 238]

இந்நாவல் முழுவதும் பல்வேறு சமயங்களில் அந்திப்பொழுது பல்வேறு அர்த்தங்களில் விபரிக்கப்பட்டுள்ளது. அந்திப்பொழுதுதான இருப்பின் அந்திம காலத்தின் குறியீடாகவே பாவிக்கப்பட்டுள்ளதை நாவலில் பல இடங்களில் பாவிக்கப்பட்டுள்ள மொழிப்பிரயோகம் மூலம் அறிய முடிகின்றது.

ரவி குழந்தைகளுக்கு உயிர்ப்பரிணாமம் பற்றிக் கூறும் பகுதியொன்று பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது. மனிதர், மரம் போன்ற அனைத்துமே ஓர் அடியிலிருந்து உருவானவையே என்று டார்வினின் பரிணாமத்தத்துவம் கூறும். அதனையே ஆசிரியர் மிக இலகுவான, குழந்தைகளுக்குரியதொரு மொழியில் பின்வருமாறு கூறியிருப்பார்.

முன்னொரு காலத்தில், பச்சோந்திகளுக்கும் முன்பு, தினோசர்களுக்கும் முன்பு, ஒரு மாலை பொழுதில் இரண்டு உயிர்துளிகள் நடப்பதற்கு புறப்பட்டன. அஸ்தமனத்தில் குளித்து நின்ற ஒரு அடிவாரத்தை அடைந்தன.

“இதோட மறுபக்கத்தை பார்க்க வேண்டாமா?” சிறிய துளி பெரிதிடம் கேட்டது.

பசுமையான அடிவாரம், அக்கா சொன்னது “நான் இங்கயே இருக்கேன்.”

“நான் போறேன்,” தங்கை சொன்னது.

தன் முன்னால் கிடந்த எல்லையற்ற வழிகளை தங்கை பார்த்தாள்.

“நீ அக்காவ மறப்பியா?” அக்கா கேட்டாள்.

“மறக்கமாட்டேன்” தங்கை சொன்னாள்.

“மறந்துடுவ” அக்கா சொன்னாள். இது கர்மத்தொடர்ச்சியின் அன்பற்ற கதை. இதில் பிரிவும் துயரமும் மட்டுமே உண்டு.
தங்கை நடந்து சென்றாள். அஸ்தமனத்தின் அடிவாரத்தில் அக்கா தனியாக நின்றாள். பாசி விதையிலிருந்து மீண்டும் அவள் வளர்ந்தாள், பெரிதானாள். வேர்கள் முன்னோர்களின் உறக்க ஸ்தலங்களில் இறங்கின. மரணத்தின் முலைப்பால் குடித்து கிளைகள் படர்ந்து திடம் கொண்டாள். கண்களில் மையும், கால்களில் தண்டையுமிட்ட ஒரு சிறுமி செதலியின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள். அங்கே தனித்து நின்ற செண்பத்தின் கிளையொடித்து பூவை கிள்ளியெடுத்தபோது செண்பகம் சொன்னது… “தங்கச்சி, நீ என்ன மறந்திட்டியே…” [பக்கம் ]  -

இந்நாவலில் அந்திப்பொழுது எவ்விதமொரு குறியீடாகப்பாவிக்கப்பட்டுள்ளதோ அவ்விதமே இன்னுமொரு குறியீடாகப் பாவிக்கப்பட்டுள்ள உயிரினம் தும்பிகள். அப்புக்கிளி எப்பொழுதும் தும்பி பிடித்துக்கொண்டே அலைந்து திரிந்து கொண்டிருப்பான். தும்பிகள், ஓணான்கள் இருப்பின் இன்மைக்குப் பின் தொடர்ந்தும் இருப்பின் நினைவுகளைக் காவிச்செல்லும் உயிரினங்களோ? இருப்பின் உயிர்ச்சக்தி மேலும் பல்வகை இருப்புகளில் புகுவதற்குச் சாத்தியங்களுள்ளனவோ என்பது பற்றிய சந்தேகங்களை இவ்வகையான தும்பிகளைப்பற்றிய , ஓணான்களைப்பற்றிய விபரிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

உதாரணத்துக்குச் சில விபரிப்புகள்:

"....பெரியதொரு பச்சைத்தும்பி. மங்கிய நினைவைப்போல கண்கள் ஒளிர்ந்தன. யாருடைய முன் ஜென்ம நினைவு அது. அவளுடைய அம்மாவுடையதாக இருக்கலாம்.  அந்தக் கண்கள் அவளை நோக்கின." [பக்கம் 84]

".. அரச மரங்களின் நிழலில் அவள் மெதுவாக நடந்தாள். அவள் யாரின் நினைவு?  அவளுடையதே ஆன முற்பிறவியின் , துக்கம் நிறைந்த மறு பிறவியின் நினைவு.." [பக்கம் 85]

"... பச்சோந்திகள் தும்பிகளைப் பிடிக்கின்றன. இறந்தவர்களின்  நினைவுகள்தான் தும்பிகள்.." [பக்கம் 76]

இவ்விதமாக ஓணானைப்பற்றியும் ஓரிடத்தில் வருகின்றது.

குட்டாடன் பூசாரி ஒணானொன்றைக் கொல்வது பற்றி வரும் பகுதி அது:

".. ஓணானின் புராதனங்களான கண்களைப்பார்த்தான். திடீரென்று, அவனுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. ஓணான் அல்ல, கூடு பாய்ந்த ஆவி இது.." [பக்கம் 154]

இந்நாவலானது மேற்பார்வைக்கு கசாக்கில் வாழும் பல்லின மக்கள் பற்றி, அவர்களுக்கிடையில் நிலவிய ஐதீகங்கள், நம்பிக்கைகள், புராணக்கதைகள் பற்றிப்பேசினாலும், அவர்களுக்கிடையில் நிலவிய வர்க்க, மத ரீதியிலான முரண்பாடுகளைப்பற்றிப் பேசினாலும், அடிப்படையில் மானுட  இருப்புப் பற்றியதொரு குறியீட்டு நாவலாகவே இந்நாவல் மீதான என் வாசிப்பு உணர்த்துகின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட விடயங்களுடன் கீழுள்ள விடயங்களையும் குறிப்பிடலாம். இவை என் வாசிப்பின் புரிதல் சரியானதென்பதையே எனக்கு உணர்த்துகின்றன.

உதாரணத்துக்குக் கீழுள்ள விபரிப்புகளைப்பார்ப்போம்:

1.  நாவலின் ஆரம்பத்தில் கூமன்காவில் வந்திறங்கும் ரவியைப்பற்றிய விபரிப்பில் இவ்விதம் வருகின்றது:

".. ஆட்கள் பேருந்தை விட்டிறங்கி கலைந்து செல்லத்தொடங்கினார்கள். அந்த இடம் பேருந்து வழித்தடத்தின் முடிவுப்பகுதி. ஒரு காலசந்தியைப் போல அந்தச் சிறிய கடைகளின் நடுவிலாகி அந்த வழி முடிந்தது.." [பக்கம் 7]

2. "...ரவி தனியாவான். தனித்தமர்ந்து சன்னல் வழியாக வெளியே பார்ப்பான்....இருட்டில் ஆங்காங்கே மின்மினிகள்... ஊர் விளக்குகள் என்ற பயணிகள். இப்போது நாற்றுபுரை ஒரு ரயில் பெட்டி. பட்டென்று வெளியிலுள்ள இருட்டைப் பற்றி நினைத்துப் போனான். தான் இப்போது இருப்பது எங்கே?  இருபுறமும் இருட்டின் தரிசுகளினூடே திரிவிளக்குகள் நீங்கி மறைந்தன.  பயணத்திற்கிடையிலொருமுறை , எங்கிருந்தோ மற்றொரு தண்டவாளம் பாய்ந்து நெருங்கியது.  மற்றொரு பிரயாணம்.  கர்மபந்தத்தின்  நொடிநேரப் பரிச்சயம். .."[பக்கம் 57]
"

3. "... அந்த  நாட்கள்  முழுதும் உதிர்ந்த  தூசு மட்டும் அவற்றின் மேலே தடித்திருக்கின்றது.  ஒரு மணம்: ரவி அது என்னவென்று யோசித்துப்பார்த்தான். பயணத்தின் மணம். காலத்தினூடே ஜடப் பொருட்களின் பயணம்..."  [பாக்கம் 104]

4. "...அந்தி கருக்கையில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றின.  பிரபஞ்சப்பயணி அந்த நட்சத்திரங்களை நோக்கித் தன் கப்பலைத் திருப்பினான்.  மரணமும் வியர்த்தமும் சுமந்துகொண்டு  ஏதோ கிரகத்தில்  அவன் கப்பலைச் சேர்த்தான்.  அங்கே வித்துக்கள் பாவினான்..." அல்லாப்பிச்சாமொல்லாக்காவின் மரணப்படுக்கையில் ஏற்படும் சிந்தனை. ஒவ்வொரு உயிருமே ஓர் இருப்புத்தான். இருப்புகள் பலவற்றால் உருவானதுதான் நாம் காணுமிந்த இருப்புகள் நிறைந்த உலகம். இருப்பு ஒவ்வொன்றுமே அதன் இன்மையிலேயே மரணத்திலேயே முழுமையடைகின்றது. இவ்விதமாக ஒவ்வோரிருப்பும் , அங்கிருக்கும் ஒவ்வொன்றும் (being there) அங்கு தூக்கி எறியப்பட்டுள்ளன. இவ்விதமாக அங்கு அல்லது இங்கு எறியப்பட்டுள்ள இருப்பு ஒவ்வொன்றுக்கும் அதனை எறிந்த செயலில் எந்தவிதக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. எந்தவித சுயவிருப்பு அல்லது வெறுப்பின் அடிப்படையில் அவை இங்கு தூக்கி எறியப்படவில்லை. ஆனால் இங்கு இருக்கும் வரை அவற்றின் மரணத்தை நோக்கிய யாத்திரை தொடர்கின்றது. இவ்விதமான இருப்பின் யாத்திரையில் காலமானது எப்பொழுதுமே எதிர்ப்படும் இருத்தலுக்கான சாத்தியங்களின் தேர்வுகளே தவிர வேறல்ல. சாத்தியங்களின் தேர்வுகளில் இருப்பின் இருப்பு தொடர்கின்றது.  இருத்தலியல் அர்த்தத்தில் காலம் நேற்று, இன்று, நாளை என்னும் அர்த்தத்தில் அணுகப்படுவதில்லை. எதிர்ப்படும் சாத்தியங்களின் தேர்வுகளாகவே அணுகப்படுகின்றது. இருப்பின் இருப்பே அந்திம யாத்திரைதான். இந்த யாத்திரையில் மட்டுமே இருப்பு பூரணத்துவமடைகின்றது. அதனால்தான் இருத்தலியல்வாதிகள் மரணத்தை இன்பத்துடன் எதிர்கொள்கின்றார்கள்.

இருப்புக்குத் தொடர்ச்சிகளுண்டா? மீண்டுமொருமுறை இருப்பானது இந்தப்பிரபஞ்சத்தின் எங்கோவொரு பகுதியில் தூக்கியெறியப்படும் சாத்தியங்களுண்டா? இவை போன்ற கேள்விகளும் இருப்பியல்வாதிகளை எதிர்கொள்கின்றன. இந்நாவலில் வரும் தும்பிகள் ஓணான் பற்றிய சித்திரிப்புகள் அவ்விதமான கேள்விகளின் வெளிப்பாடே. நாவலை அழகான கட்டுக்கோப்பில் அமைத்திருக்கின்றார் ஒ.வி.விஜயன். நாவலின் முதலாவது அத்தியாயத்தின் தலைப்பு `புகலிடம் தேடி` நாவலின் இறுதி 27வது அத்தியாயத்தின் தலைப்பு: `புகலிடம்`. புகலிடம் நாடி வந்தவனுக்குப் புகலிடம் மரணத்தில் கிடைத்திருக்கின்றது. இருப்பொன்று மரணத்தில் முழுமையடைந்திருக்கின்றது.

நான் நாவலை இன்னுமொரு கோணத்திலும் பார்க்கின்றேன். கசாக்கு நாம் வாழும் இவ்வுலகுக்கான குறியீடு. செதலி மலை மரணத்துக்கான குறியீடு. மரணத்தின் அரவணப்பில் கிடக்கும் கசாக்கில் இருப்புகள் பல. அவற்றிலொன்றே ரவி என்னும் இருப்பு. அவை ஒவ்வொன்றாக மரணத்திலாழ்கின்றன. ஒருமுறை அம்மையும் வந்து பல இருப்புகளைக் கொண்டு செல்கின்றது. உண்மையில் கசாக்கு என்பது , நாம் வாழும் இவ்வுலகென்பது , மிகப்பெரிய மரணக்குழிதான். இங்குதான் எத்தனையெத்தனை உயிர்கள்; பிரிவுகள். ஐதீகங்கள். கதைகள்... ஆனால் முடிவில்... அனைத்திருப்புகளும் சங்கமிப்பது மரணத்தில்தானே..  கூமன்காவு காலச்சந்தி. இந்தச்சந்தியில் வந்து இங்கு இறங்கும் இருப்புகளின் காவியம்தான் , சோக காவியம்தான் அல்லது மானுடத்தேடல்தான் கசாக்கின் இதிகாசம். இதுவே என் புரிதல்.

கஸ்தூரிரங்கனின் கூற்றுடன் என் இச்சிற்றுரையினை முடித்துக்கொள்கின்றேன்: ~மரணமென்னும் பிரம்மத்தின் மொழியால் எழுதப்படுவதாக உள்ளது கசாக்கின் இதிகாசம்.~

ngiri2704"rogers.com