மு.நித்தியானந்தன்-அண்மையில் முகநூலில் லடீஸ் வீரமணியின் நாடகப்பங்களிப்பு பற்றிய வ,ந.கிரிதரனின் பதிவொன்றையொட்டி கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துகளிவை. - பதிவுகள் -


நித்தியானந்தன் முத்தையா:  "1967 இல் ஊவாக்கல்லூரி நடத்திய கலை விழாவில் முற்போக்கு இலக்கியத்தின் மூத்த தலைமுறையாளர் அ .ந.கந்தசாமி அவர்கள் 'நாடகத்தை ரசிப்பது எப்படி?' என்ற பொருளில் ஆற்றிய சொற்பொழிவு ரசனை மிகுந்த ஒன்றாகும்.இவரது மறைவையடுத்து ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றம் அன்னாருக்கு முதல் அஞ்சலியைத் தெரிவித்து இரங்கற் கூட்டம் நடத்தியது." இது தினகரன் வார இதழில் 'துங்கிந்த சாரலில் ...ஒரு பதுளைக்காரனின் இலக்கியப்பதிவுகள்' என்ற தொடரில் (3.12. 1995) நான் எழுதிய குறிப்பு.

அப்போது ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றத்தின் செயலாளராக நானும் மலர்ப்பொறுப்பாளராக எஸ்.கணேசனும் செயற்பட்டோம். கொழும்பு சென்று அ.ந.கந்தசாமி அவர்களைச் சந்தித்து இப்பேச்சுக்கு ஒழுங்கு செய்தோம்.எங்கள் கல்லூரித் தமிழ் மன்றம் வெளியிட்ட 'இலக்கிய வெளியீடு' மலரில் நான் எழுதியிருந்த 'கம்பனும் பொதுவுடைமையும்' கட்டுரையைப்பாராட்டி அ.ந.கந்தசாமி அவர்கள் தனது உரையில் பாராட்டியது எனக்கு அப்போது பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.

அ.ந.கந்தசாமி அவர்கள் உரையாற்றிய கடைசிக்கூட்டம் அவர் எங்கள் கல்லூரியில் பேசிய கூட்டம் என்று நினைக்கிறேன். அப்போது அவர் எழுதி, பாரி நிலைய வெளியீடாக வெளிவந்திருந்த ' வெற்றியின் ரகசியங்கள்' என்ற நூலை எனக்குத்தந்திருந்தார்.கொழும்பு சென்றபின், எனக்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் எழுதியிருந்தார். ஒரு சாதாரண பாடசாலை மாணவன் ஒருவனுடன் அவர் கொண்டிருந்த நேசஉணர்வு எனக்கு அவர்மீது பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் தனது இறுதிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, லடீஸ் வீரமணியும் அவரது துணைவியாரும் அ .ந.கந்தசாமி அவர்களைக் கவனமாகப் பராமரித்தனர்.

எங்கள் கல்லூரியின் கலைவிழாவின் முடிவில் லடீஸ் வீரமணி அவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நேரம் கடந்து விட்டதால் கூட்டத்தினர் வெளியேறிக்கொண்டிருந்தனர்.ஒருவரைப்பார்த்து ஒருவர் வெளியேறிக்கொண்டிருக்க, லடீஸ் வீரமணி அவர்கள் 'சாஞ்சா சாய்ற பக்கம் சாய்ற மந்தைக்கூட்டங்களா!' என்று வில்லுப்பாட்டில் இசைத்தார்.அவர் இந்திய வம்சாவளியினர். அமைச்சர் செல்லையா குமாரசூரியர் முயற்சியில் அவருக்கு இலங்கை பிரஜாவுரிமை கிடைத்தது.அவர் ஐரோப்பாவிற்கு சென்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தியதாக நான் அறியவில்லை.அவ்வாறாயின் அத்தகவல்களைப்பெறுவது அவ்வளவு சிரமமாக இராது என்று நினைக்கிறேன்.

நித்தியானந்தன் முத்தையா:  ஊவாக்கல்லூரியின் கலைவிழா நிகழ்ச்சியில் நாங்கள் தயாரித்த நோட்டீஸில் 'நாடகத்தை ரசிப்பது எப்படி?' என்று அ.ந.கந்தசாமியின் பேச்சுக்குத் தலைப்பிட்டிருந்தோம். அப்போது எங்கள் கல்லூரியில் படிப்பித்த ஒரு பால பண்டிதர் 'ரசிப்பது' என்பதனை மாற்றி 'இரசிப்பது' என்று திருத்தினார்.இலக்கண விதி என்க! அ.ந.கந்தசாமியின் 'வெற்றியின் இரகசியங்கள்' என்ற தலைப்பில் புத்தகம் வெளிவந்தபோது அது இலக்கண விதி என்று அமைதி கண்டோம்.

நவரத்தினம் கிரிதரன்:   வழக்கில் நீண்ட நாள்களாக இருப்பதை ஏற்பதும் இலக்கண வழக்கே.அதற்கமைய இது போன்ற இலக்கண மீறல்களை ஏற்பதில் எனக்குச் சம்மதமே. பிறமொழிகளைத் தமிழில் எழுதுகையில் இவ்விதமான தவறுகளை ஏற்றுக்கொள்ளலாமென்றால் , உதாரணத்துக்கு 'ரப்பர்' என்பதைத் தமிழ்ப்படுத்தினால் வேறு அர்த்தம் தரும் இரப்பர் என்று எழுத வேண்டும். அதைவிட 'ரப்ப'ரே மேல் என்பேன். ரகசியமும் வடசொல். தமிழ்ப்படுத்தி இரகசியம் என்று எழுதினாலும், பிறமொழி என்பதால் அப்படியே ரகசியம் என்று எழுதினாலும் சரி என்பதே என் முடிவு. இதுபோல் ராஜதானி/இராஜதானி, ராஜா/இராஜா. ராணி/இராணி இவற்றை எப்படி எழுதினாலும் சரி என்பதே என் நிலைப்பாடு.

அ.ந.கந்தசாமிநித்தியானந்தன் முத்தையா:  அ.ந .கந்தசாமி அக்காலகட்டத்தில் தினகரனில் நாடகங்கள் பற்றி எழுதிய கட்டுரைகளில் ரசனை, ரசித்தல் போன்ற பதங்களையே பாவித்தார் என்றே நினைக்கிறேன்.அவரது 'வெற்றியின் ரகசியங்கள்' என்பதைப் பாரி நிலையத்தினர் மாற்றி 'இரகசியங்கள்' என்று போட்டிருக்கவேண்டும். எம்.ஏ.நுஹ்மானின் 'அழியா நிழல்கள்' என்ற நூலுக்கா அல்லது 'மழை நாட்கள் வரும்' என்ற நூலுக்கா என்று தெரியவில்லை,நர்மதா பதிப்பகத்தார் போட்ட முன் அட்டை ஓவியம் பற்றியது.இலங்கையில் இருந்து ஒரு நூலை சென்னையில் பதிப்பிப்பதில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. ஐ.சாந்தன் இந்த வகையில் சந்தித்த பிரச்னை வேறுபட்டது.

நவரத்தினம் கிரிதரன்:  அக்காலகட்டத்தில் தினகரன் பத்திரிகையில் அ.ந.க எழுதிய கட்டுரைகள் பற்றி மேலதிகத்தகவல்கள் இருந்தாலும் பகிர்ந்துகொள்ளுங்கள். இவை முக்கியமானவை. அவர் எழுதிய (வீரகேசரியில் என்று நினைக்கின்றேன்) நாயினும் கடையர், காளமுத்து இலங்கை வந்த கதை ஆகிய கதைகளை வாசித்துள்ளீர்களா? அவற்றைப் பெறுவதற்கு வழிகளுண்டா?

நித்தியானந்தன் முத்தையா: அ.ந கந்தசாமி அவர்கள் தினகரனில் கிரேக்க நாடகங்கள் பற்றி கட்டுரைகள் எழுதி வந்தார்.'நாயினும் கடையர்' கிடைக்கக்கூடியது. எங்கோ அண்மையில் பார்த்த நினைவு.

நவரத்தினம் கிரிதரன்: 'நாயினும் கடையர்' கிடைத்தால் அறியத்தாருங்கள். கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்னும் வாசிக்கவில்லை. //அ.ந கந்தசாமி அவர்கள் தினகரனில் கிரேக்க நாடகங்கள் பற்றி கட்டுரைகள் // அவற்றையும் நான் வாசித்ததில்லை. குறிப்பாக எப்பொழுது எழுதி வந்தாரென்பது தெரியுமா?

நித்தியானந்தன் முத்தையா: 1967 ஆம் ஆண்டளவில் அவர் தொடர்ச்சியாக நாடகங்கள் பற்றி எழுதி வந்தார்.

நவரத்தினம் கிரிதரன்: நன்றி. சுடர் அணைவதற்கு முன் மின்னுவதுபோல் அந்த ஆண்டில் மின்னியிருக்கின்றார். அடுத்த வருடம் மறைந்திருக்கின்றார். அவ்வருடம் நீங்கள் குறிப்பிடும் கட்டுரைகள், மனக்கண் நாவல் எழுதியிருக்கின்றார். மதமாற்றம் பல தடவைகள் லடீஸ் வீரமணி இயக்கத்தில் அவ்வருடத்தில்தான் மேடையேறியுள்ளது. இதனால்தான் அவரது மறைவையொட்டித் தினபதியில் எழுதிய கட்டுரையில் எழுத்தாளர் காவலூர் ராஜதுரை '67 அ.ந.கந்தசாமியின் ஆண்டு' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

நித்தியானந்தன் முத்தையா: 'வசந்தம்' இதழில் சில்லையூரின் கவிதைகளை ஆதரித்து, அவை  'Blank Verse ஆ?'  என்று எழுதிய கட்டுரையை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நவரத்தினம் கிரிதரன்: ஆம். என்னிடமுள்ளது. பதிவுகள் இதழிலும் உள்ளது.

நித்தியானந்தன் முத்தையா: யாழ்ப்பாணத்தில் நான் இருந்தபோது, உண்மையில் அ .ந கந்தசாமி அவர்களின் ஆக்கங்களை தொகுத்து பிரசுரிப்பது என் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.