லடீஸ் வீரமணிஅண்மையில் 'அரங்கு ஓர் அறிமுகம்' என்னுமோர் நூலை வாசித்தேன். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் சி.மெளனகுரு மற்றும் திரு.க.திலகநாதன் ஆகியோரால் எழுதப்பட்ட நூல். அமரர் சி.பற்குணம் நினைவு மலர்க்குழுவினால் வெளியிடப்பட்டது. அரங்கு பற்றியதோர் அறிமுக நூலாக இதனைக் குறிப்பிடலாம். தாமறிந்ததை இந்நூல் மூலம் அறியத்தந்திருக்கின்றார்கள். இந்நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒருவரை எவ்வளவு நாசூக்காக இருட்டடிப்பு செய்யலாம் என்பதை உணர்ந்துகொண்டேன். இந்நூலில் நான் அவதானித்த ஒருவரைப்பற்றிய இருட்டடிப்பு பற்றிய என் எண்ணமே இப்பதிவு. இந்நூல் பற்றிய விமர்சனமல்ல. இந்நூல் அரங்கு பற்றிய நல்லதொரு நூலே. அதற்காக இதனை எழுதியவர்களும், வெளியிட்டவர்களும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் நூல்கள் எல்லாவற்றிலும் எழுதுபவர்கள் சார்ந்து இருட்டடிப்புகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. அவை தவிரக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இப்பதிவை நான் இடுகின்றேனே தவிர நூலாசரியர்களைத் தனிப்பட்டரீதியில் தாக்குவதற்காகவல்ல.

நூலில் 'நாடகக் கலையின் இயல்புகள்', 'நாடகக் கலையின் தோற்றம்', 'மேல்நாட்டுப்பாரம்பரியத்தில் நாடகம்', 'தமிழ் நாட்டு நாடகப் பாரம்பரியம்', 'இலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியம்' மற்றும் 'நாடகத் தயாரிப்பு' ஆகிய தலைப்புகளில் ஆறு அத்தியாயங்களுள்ளன. இவற்றில், 'இலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியம்' என்னும் அத்தியாயத்திலுள்ள ஒரு தகவல் பற்றியதே எனது இப்பதிவு.

இவ்வத்தியாயத்தில் நவீன அரங்கு பற்றிய பகுதியில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த இயற்பண்பு நாடக மரபு பற்றிக்குறிப்பிடும் நூலாசிரியர்கள் பின்வருமாறு குறிப்பிடுவார்கள்:

"நாடகமறியாதோரினதும் சமூகப் பிரக்ஞையற்றோரினைதும் கையில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த இயற்பண்பு நாடக மரபு இவ்விதம் சீரழிய, நாடகப் பிரக்ஞையும், சமூகப் பிரக்ஞையும் உடைய மத்தியதர வர்க்கத்தினரிடையே இவ் இயற்பண்பு நாடக நெறி வளர்ச்சியடைகின்றது. நாடக நிலை நோக்குடனும் சமூகப்பிரக்ஞையுடனும் அதனை வளர்த்துச் சென்றவர்கள் பல்கலைக்கழகத்தினரும் அதனைச் சார்ந்தோருமே. இலங்கைப் பல்கலைகழகத் தமிழ்ச்சங்கம் அ.முத்திலிங்கத்தின் 'பிரிவுப்பாதை' (1959), 'குடித்தனம்' (1961), 'சுவர்கள்' (1961) ஆகிய நாடகங்களையும் , அ.ந,கந்தசாமியின் 'மதமாற்றம்' (1962), சொக்கனின் 'இரட்டை வேசம்' (1963) ஆகிய நாடகங்களையும் மேடையிட்டது. இந்நாடகங்களை க.செ.நடராசா, கா.சிவத்தம்பி,
வீ.சுந்தரலிங்கம் , சரவணமுத்து ஆகியோர் தயாரித்தனர்." [பக்கம் 193]

மேற்படி 'அரங்கு ஓர் அறிமுகம்' நூலில் இலங்கைத்தமிழ் நாடக உலகுக்கு பெரும் பங்களிப்பையளித்த லடீஸ் வீரமணியின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அவரைப்பற்றி அறிவதற்கு விக்கிபீடியாவிலுள்ள அவரைப்பற்றிய சிறு குறிப்பினைக் கீழே தருகின்றேன்:

"லடிஸ் வீரமணி (இறப்பு: மே 5, 1995) இலங்கையில் மேடை நாடகத்துறையில் நடிகராக, நாடகாசிரியராக, இயக்குனராக அறியப்பட்டவர். இவர் இயக்கிய நாடகங்களில் 'சலோமியின் சபதம்', 'மதமாற்றம்' என்பன குறிப்பிடற்குரியனவாகும். அரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையின் ஆற்றல் மிகுந்த கலைஞராக தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார். கொழும்பு, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிய ‘மனோரஞ்சித கான சபா’விலிருந்து வெளிவந்த கலைஞர்களில் முன்னோடி  நடிகவேள் லடிஸ் வீரமணி ஆவார். 1945 இல் மல்லிகா என்ற நாடகத்தின் மூலம் தனது நாடகவுலக பிரவேசத்தை மேற்கொண்டார். 1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - மதுரம் குழுவினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் லடிஸ் வீரமணியின் நடிப்புக்காக "நடிகவேள்" என்ற பட்டத்தை வழங்கினார் என். எஸ். கே. ஆரம்ப காலங்களில் இவரை நெறிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஏ. இளஞ்செழியன். மற்றவர் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான அ. ந. கந்தசாமி. அ. ந. கந்தசாமி எழுதிய ‘மத மாற்றம்’ என்ற நாடகம் தமிழ் நாடக மேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ‘மதமாற்றத்தை’ சிறப்பாக நெறியாள்கை செய்தார் லடீஸ் வீரமணி. அ. ந. கந்தசாமி மகாகவியிடம் வீரமணியை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அவருக்காகவே கண்மணியாள்காதை என்ற வில்லுப்பாட்டை மகாகவி எழுதினார். 83 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திலிருந்தார் வீரமணி. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ‘கண்மணியாள் காதை’ என்ற வில்லிசை நிகழ்ச்சியை அங்கு நடத்தினார். இயக்கி நடித்த நாடகங்கள்: தாய் நாட்டு எல்லையிலே, கங்காணியின் மகன், நாடற்றவன், சலோமியின் சபதம், கலைஞனின் கனவு, மனிதர்  எத்தனை உலகம் அத்தனை, ஊசியும் நூலும்"


அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகத்தை முதலில் பேராசிரியர் கா.சிவத்தம்பியே தயாரித்து , இயக்கி மேடையேற்றினார் (1962). அது எத்தனை தடவைகள் மேடையேறியது என்பது தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் அறியத்தரவும். அதில் எழுத்தாளர் மா.குலேந்திரன் நடித்திருந்ததாக ஒருமுறை நினைவு கூர்ந்திருந்தது நினைவுக்கு வருகின்றது. அதே 'மதமாற்றம்' பின்னர் 1967இல் கொழும்பில் எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில், லடீஸ் வீர்மணியின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது. பல தடவைகள் மேடையேறவும் செய்தது. அதில் சில்லையூர் செல்வராசன், ஆனந்தி சூரியப்பிரகாசம் உட்பட இலங்கை வானொலிக் கலைஞர்கள் பலர் நடித்திருந்தனர். பத்திரிகைகளில் அந்நாடகத்தைப் பாராட்டி விமர்சனங்களைக் கலை, இலக்கிய ஆளுமைகள் பலர் எழுதினர். லடீஸ் வீரமணியின் இயக்கத்தில் வெளியாகிப் பெருவெற்றியினை 'மதமாற்றம்' அடைந்ததற்கு அவரது இயக்கும் திறமையும் முக்கிய காரணம்.

இந்நிலையில் லடீஸ் வீரமணிக்கு ஏனிந்த இருட்டடிப்பு. இலங்கைத் தமிழ் நவீன அரங்குக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் விதந்தோடப்பட வேண்டியது. நினைவு கூரப்பட வேண்டியது. 'மதமாற்றம்' நாடகத்தின் பெரு வெற்றியொன்றே போதும் அவரை நினைவு கூர்வதற்கு. ஆனால் அதில் தவறி விட்டார்கள் மேற்படி நூலை எழுதியவர்கள். ஆனால் இது போன்ற இருட்டடிப்புகள் பலவற்றை மீறி உண்மைக் கலைஞர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பது அவர்கள்தம் படைப்புகளால்; பங்களிப்புகளால். அவ்விதமே லடீஸ் வீரமணியின் பங்களிப்பும் இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் நினைவு கூரப்படும் என்பதற்கு இச்சிறுபதிவொன்றே சான்று.

'அரங்கு ஓர் அறிமுகம்' நூலுக்கான இணைப்பு: http://noolaham.net/project/76/7561/7561.pdf


முகநூலில் இப்பதிவு இடப்பட்டபோது வெளியான எதிர்வினைகள் சில:

மல்லியப்புசந்தி திலகர் : 1991 ஈரோஸ் மேதின மேடையில் மலையகம் நோர்வூட் நகரில் இவரை நேரடியாக சந்தித்த முதலும் கடைசியுமான தருணம் நினைவு.

Giritharan Navaratnam:  வருகை உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Vadakovay Varatha Rajan:  மற்றவர்களால் மறந்த அ ந கந்தசாமி , வீரமணி என்போர் பற்றி நீங்கள் மீள நினைவு படுத்துவது வரவேற்க தக்கது .
தொடருங்கள் .

Raguvaran Balakrishnan:  தகவல் பொக்கிஷம்--நூலாக்கம் பெறவேண்டும்

Maani Nagesh ஸ்டீஸ்:  வீரமணி மறக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாத சிறந்த கலைஞர்.தங்கள் பதிவுக்கு நன்றி.

Giritharan Navaratnam : உங்களுக்கும் அவரைப்பற்றி மேலதிகத் தகவல்கள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Maani Nagesh : அவ்வப்போது அவர் குறித்து வாசித்ததும் பலரின் உரையாடல்களில் அவர் குறித்து தெரிந்துகொண்டதன் வழியாக அவரைப்பற்றி தெரிந்து வைத்துள்ளேன். அண்மையில் பாரிஸில் காலமான மூத்தகலைஞர் ரகுநாதன் ஐயா அவர்கள் லடீஸ் வீரமணி அவர்களின் கலை ஆளுமைகுறித்தும் அவரது நகைச்சுவை உணர்வு குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் மகாகவியின் கவிச்சித்திரமான 'கண்மணியாள் காதையை' சவாலுடன் ஏற்று வில்லுப்பாட்டாக மேடையேற்றிய பெருமைக்குரியவர். பின்தொடர்ந்து அதனை பல மேடையேற்றிய வில்லிசை ராஜனனின் தம்பியும் எனது நண்பனுமாகிய கணேஷ் தம்பையாவும் அவரின் சிறப்பை பல நேரங்களில் என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அத்துடன் அவரது பூர்வீகம் இந்தியா என்பதும் நான் அறிந்த விடயங்கள். நன்றி.

மு.நித்தியானந்தன் (Nithiyanandan Muthiah) :  "1967 இல் ஊவாக்கல்லூரி நடத்திய கலை விழாவில் முற்போக்கு இலக்கியத்தின் மூத்த தலைமுறையாளர்
அ .ந.கந்தசாமி அவர்கள் 'நாடகத்தை ரசிப்பது எப்படி?' என்ற பொருளில் ஆற்றிய சொற்பொழிவு ரசனை மிகுந்த ஒன்றாகும்.இவரது மறைவையடுத்து ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றம் அன்னாருக்கு முதல் அஞ்சலியைத் தெரிவித்து இரங்கற் கூட்டம் நடத்தியது."

இது தினகரன் வார இதழில் 'துங்கிந்த சாரலில் ...ஒரு பதுளைக்காரனின் இலக்கியப்பதிவுகள்' என்ற தொடரில் (3.12. 1995) நான் எழுதிய குறிப்பு.

அப்போது ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றத்தின் செயலாளராக நானும் மலர்ப்பொறுப்பாளராக எஸ்.கணேசனும் செயற்பட்டோம். கொழும்பு சென்று அ.ந.கந்தசாமி அவர்களைச் சந்தித்து இப்பேச்சுக்கு ஒழுங்கு செய்தோம்.எங்கள் கல்லூரித் தமிழ் மன்றம் வெளியிட்ட 'இலக்கிய வெளியீடு' மலரில் நான் எழுதியிருந்த 'கம்பனும் பொதுவுடைமையும்' கட்டுரையைப்பாராட்டி அ.ந.கந்தசாமி அவர்கள் தனது உரையில் பாராட்டியது எனக்கு அப்போது பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.

அ.ந.கந்தசாமி அவர்கள் உரையாற்றிய கடைசிக்கூட்டம் அவர் எங்கள் கல்லூரியில் பேசிய கூட்டம் என்று நினைக்கிறேன். அப்போது அவர் எழுதி, பாரி நிலைய வெளியீடாக வெளிவந்திருந்த ' வெற்றியின் ரகசியங்கள்' என்ற நூலை எனக்குத்தந்திருந்தார்.கொழும்பு சென்றபின், எனக்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் எழுதியிருந்தார். ஒரு சாதாரண பாடசாலை மாணவன் ஒருவனுடன் அவர் கொண்டிருந்த நேசஉணர்வு எனக்கு அவர்மீது பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் தனது இறுதிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, லடீஸ் வீரமணியும் அவரது துணைவியாரும் அ .ந.கந்தசாமி அவர்களைக் கவனமாகப் பராமரித்தனர்.

எங்கள் கல்லூரியின் கலைவிழாவின் முடிவில் லடீஸ் வீரமணி அவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நேரம் கடந்து விட்டதால் கூட்டத்தினர் வெளியேறிக்கொண்டிருந்தனர்.ஒருவரைப்பார்த்து ஒருவர் வெளியேறிக்கொண்டிருக்க, லடீஸ் வீரமணி அவர்கள்'சாஞ்சா சாய்ற பக்கம் சாய்ற மந்தைக்கூட்டங்களா!' என்று வில்லுப்பாட்டில் இசைத்தார்.அவர் இந்திய வம்சாவளியினர். அமைச்சர் செல்லையா குமாரசூரியர் முயற்சியில் அவருக்கு இலங்கை பிரஜாவுரிமை கிடைத்தது.அவர் ஐரோப்பாவிற்கு சென்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தியதாக நான் அறியவில்லை.அவ்வாறாயின் அத்தகவல்களைப்பெறுவது அவ்வளவு சிரமமாக இராது என்று நினைக்கிறேன்.

SK Rajen:  இலங்கைத்திருநாட்டின் தலைநகர் கொழும்பில் நாடகக் கலையுடன் சங்கமித்து வாழ்ந்தவர் கலைஞர் லடீஸ் வீரமணி அவர்கள். அவர் வாழும் காலத்திலேயே அவருக்குரிய மதிப்பளிப்புகள் பெரியளவில் கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். தமது திறமையினால் கலையுலகில் நின்று நிலைத்தவர். தங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.