கனவு நிலா

கனவுநிலாவின் அழகில் நானெனை
மறந்திருந்தேன். அதன் தண்ணொளியில்
சுகம் கண்டிருந்தேன்.
நனவுமேகங்களே உமக்கேனிந்தச்
சீற்றம்? எதற்காக அடிக்கடி
எழில் நிலாவை மூடிச்செல்ல
முனைகின்றீர்கள்?
நீங்கள் மூடுவதாலென்
கனவுநிலாவின் எழில்
மறைவதில்லை.
நினைவுவானில்
நீந்திவரும் நிலவை
யாரும் மூடிட முடியாது.
நனவுமேகங்களே!
உம்மாலும்தாம்.
பார்க்கும் ஒரு  கோணத்திலும்மால்
மூட முடிவதுபோல் தெரிவதெல்லாம்
முழு உண்மையல்ல.
பின்னால் மறுகோணத்தில்
நனவுவானில் நடைபயிலும்
முழுநிலவின் நடையழகை
யார்தான் தடுக்க முடியும்.
இரசிப்பதை யார்தான் தடுக்க முடியும்.
கனவுநிலவினெழிலில்
களித்திருக்குமெனை யார்தானிங்கு
தடுக்க முடியும்?

வெண்ணிலவைப்பற்றிப்பாடாத
கவிஞர் எவருண்டு? ஆயினென்
கனவுநிலா பற்றிப் பாடிய கவிஞன்
இவனொருவனாகத்தானிருக்க
முடியும்!
கனவுநிலவின் பேரெழில்
களிப்பினை மட்டுமல்ல
கற்பனைகோடியும் தருவது.
நினைவுவானில் நடைபயிலும்
கனவுநிலாவின் ஒளிர்தலுக்கு
யார்தான் காரணம்?
யார்தான் காரணம்?
ஆழ்நினைவுச் சுடரைச்
சுத்தும் கனவுநிலவே!
உன்னொளிர்தலுக்கும் காரணம்
அதுவே!
உன் எழிலுக்கும் காரணம் அதுவே!
ஆழ்நினைவுச்சுடர் மீதான உன்காதல்தான்
அதற்குக்காரணம். ஆம்! அதற்குக் காரணம்.
ஆழ்நினைவுச்சுடரைத் சுத்தும்,
நினைவுவானில் நடைபயிலும்
நினைவைக் காதலித்து,
நினைவைச் சுத்திவரும்
உன்னிருப்பும்,
உன் எழிலும்
பற்றிய கற்பனையில் நானெனைப்
பற்றிய நினைவிழந்தேன். உனை
நினைத்தேன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.