- அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகம் 'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரை இது -


மதமாற்றம் 'நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமிசெ.கணேசலிங்கன்விழாக்களிலும் சடங்குகளிலும் ஆடலும் பாடலும் இயல்பாக ஏற்பட்டன; பின்னர் மதச்சார்பான கதைகளும் கிராமியக் கதைகளும் ஆடியும் நடித்தும் காட்டப்பட்டன. இதுவே இந்திய நாடகத்தின் தோற்றவாயில் என ஆய்வாளர் கூறுவர். கூத்து என்ற கலைவடிவம் தமிழரிடை இதே தோற்றுவாயுடன் ஏற்பட்டது எனக் கூறின் தவறாகாது.. கூத்து, ஆடல் பாடல் சார்ந்தது; நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. 'கூத்தாட்டவைக் குழாத்தற்றே" என்றார் வள்ளுவர்.

சிலப்பதிகாரமும் கிராமியக் கூத்து வடிவில் பிரபல்யமடைந்திருந்த கதையையே இளங்கோ காவியமாக்கினர் என்பர். "பாட்டிடையிட்ட உரைநடையாக" காவியம் அமைத்திருப்பதும் இக் கருத்தை நிரூபிக்கிறது. புலவர்களாலேயே நாடகம் போன்ற கலை வடிவங்களும் உலகெங்கும் எழுதப்பட்டன என்பர். இளங்கோ, காளிதாசன், சேக்ஸ்பியர் யாவரும் கவிஞர்களே.

இன்றைய நாடகம் என்ற கலைவடிவம் எமக்குப் புதிதே. கலைவடிவங்கள் நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறுபடலாம், உற்பத்தி உறவுக்கேற்ப இவை மாற்றமடையும். உதாரணமாக நவீன காலத்தில் பிரபல்யமடைந்துள்ள நாவல், சிறுகதை என்ற கலை வடிவங்கள் முதலாளித்துவத்தில் - கூலி உழைப்பு உற்பத்தி உறவுக்காலத்தில் எழுந்தவையே. எமது சிறுகதை, நாவல் போன்று இன்றைய நாடகமும் மேல் நாட்டிலிருந்து நாம் பெற்ற கலைவடிவமே. ஆங்கிலத்தின் மூலம் இங்கு நாம் பெற்றபோதும் இன்றைய மேடை நாடகம் ஆங்கிலேயர் ஆரம்பித்ததல்ல. ஹென்றிக் இப்சன் (1826-1906) என்ற நோர்வே நாடகாசிரியர் ஐரோப்பாவிற்குத் தந்த வடிவமே இன்று உலகெங்கும் மேடை நாடக வடிவமாகப் பரவியது; பல்வேறு பரீட் சார்த்தங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிறது. இங்கிலாந்தில் இப்சனுக்கு முன்னர் நாடக மரபு இருக்கவில்லை என நான் கூறவரவில்லை. சேக்ஸ்பியர் (1564 - 1616) மார்லோ (1564-93) அன்றிருந்த நாடக மரபிற்கு வலுவூட்டியவரே. இன்று வரை நிலை பெற்றுள்ளனர்.

அன்றைய நாடக அமைப்பு முறையும் இப்சனின் பின் ஏற்பட்ட மாற்றமும் வேறு. மேடைக் காட்சிகள் தொடர்ந்து மாறும் முறை, நடைமுறைச் சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை கையாளும் போக்கு ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். நாடகமாக எழுதப்படுவது, மேடையில் பேசுவதற்காக கூறப்படும் உரையாடல், காட்சி அமைப்புப் பற்றியவை முதலான விபரங்களே. இவற்றை நாம் மேடையில் பார்க்காது படிப்பதென்பது இரண்டாந்தரமானது. நாடகங்கள் நூல் வடிவில் தமிழில் வெளி யிடப்படுவதில்லை என்ற குறைபாடும் உள்ளது. அவர்கள், 'நாடகம் மேடைக்காக" என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். சேக்ஸ்பியரின் நாடகங்கள் நூலுருப் பெற்று உலகெங்கும் படிக்கப்படுகிறது உண்மையே. நடிப்பதிலும் பார்க்க தாராளமாகப் படிக்கப்படுகிறது. அவை நாடகம் என்பதிலும் பார்க்க இலக்கிய நயம் செறிந்த எழுத்தாக இருப்பதுவே காரணம். இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடப்படாது. தனிமனிதன் மேடையில் நின்று தன் துன்பங்களைக் கொட்டுவதை, நாம் தனிமையில் படித்துச் சுவைக்கலாம். அவை இன்றைய நாடக மரபுக்கு ஒவ்வாதவை. சேக்ஸ்பியரின் பல நாடகங்களில் தனிப்பேச்சு (Soliloquy) இடம் பெறுவதைக் காணலாம். சேக்ஸ்பியரின் சிறப்பிற்கும் அவை உதாரணமாகக் கூறப்படுவதைக் காணலாம். ( உதாரணம்: To be or not to be - ஹம்லெட்) பர்னட் ஷாவின் நாடகங்களும் படித்துச் சுவைக்கக் கூடியவையே. காரணம் கருத்துகள் செறிந்தவை. முரண்பாடுகளைச் சொற்களால் சாடுவார். அவர் ஆக்கிய பாத்திரங்கள் அனைவர் மூலமும் ஷாவே உரையாடுவார். இன்று பிரபலமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவலாக ரசிக்கப்படும் டி. வி.தொடர் நாடகங்களிலும் நகைத்திறம் மிக்க உரையாடல்களே முதன்மை பெறுவதைக் காணலாம். டி. வி. என்ற கருவிக்குரிய வடிவம் இதுவாகலாம். இப்சனின் பின் நாடகத்திற்கு என்றோர் புதிய வடிவமும் கலை களுக்கெனத் தனிச் சித்தாந்தமும் தந்த பெருமை பெர்னல்ட் பிரெட்ச் (1898 - 1956) என்ற ஜெர்மன் நாடகாசிரியருக்கே உரியதாகும். அவர் ஒரு மார்க்சிய நாடகாசிரியராக இருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளிலும் அவர் போற்றப்பட்டார்.

அவரது நாடகங்கள் நடிக்கப்பட்டன. இவ்வாறு பரவலாக்கி அவரது புரட்சிக் கருத்துச்களை மழுப்பி விட்டனர் என்றே கூற வேண்டும். நாடகத்தின் கரு, உட்பொருள் மட்டுமல்ல அதன் அமைப்பு, வடிவத்திலும் அவர் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தினர். அத்தோடு மேடை, நடிகர்கள் பற்றி மட்டுமல்ல பார்வையாளனைப் பற்றியும் அவர் சிரத்தை எடுத்தார்.

பார்வையாளனை கலை உணர்வுத் தூரத்தில் (Aesthetic Distance) வைக்க வேண்டும் எனவும் சொன்ஞர். பார்வையாளன், கலைகளே நுகர்வோன் கலை வடிவத்தினூடாக வாழ்க்கையின் முரண்பாடுகளை, சம்பவங்களை, கதா மாந்தர்களைக் காண்பதாக நினைவு பூர்வமாக எண்ணிக் கொள்ளவேண்டும். தவருக பாத்திரங்களுடன் ஐக்கியப் பட்டு ஒன்றிவிடப்படாது என எச்சரித்தார்.

சுருங்கக் கூறின் கலையை நுகர்வோர் அதனிலிருந்து அந்நியப் பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்றார்,

மக்களே வரலாற்றை ஆக்குபவர், வீரபுருஷர்களல்ல என்ற மார்க்சின் கோட்பாட்டை முன் வைத்து வீர புருஷர்களை நாடகததில் நுழைப்பதையும் தவிர்த்தார். கிராமியக் கதைகளை, நடை முறைச் சம்பவங்களை நாடகமாக்கினர். மேடையில் 'செட் டுகள், மின் ஒளி விளையாட்டுகள் மூலம் மக்களைக் கவர்வதையும் தவிர்த்தார். பார்வையாளரை மயக்க மூட்டி கனவு நிலைக்கு ஈர்த்துச் செல்லாது விழிப்பு நிலையில் வைக்க வேண்டும்; மேலும் சிந்தனையூட்ட வேண்டும் என்றார், தீவிர நடிப்புகளையும் தவிர்த்தார். அதாவது மேடையில் தோன்றி தமிழ் நாடகங்களில் நடிப்பது போல, மிகை உணர்ச்சிகளைக் காட்டி உரத்துக் கத்தும் போக்கையும் தடுத்தார்.

மேல்நாட்டு நாடக வடிவம் சிங்கள மேடையில் ஏற்படுத்திய மாற்றம் போல தமிழ் நாட்டில் ஆக்கவில்லை. சினிமா வின் தாக்கம் மேடை நாடகத்திலும் நாடக முறைகள் சினிமா விலும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. அதற்குக் காரணம் சினிமா வின் பரவலான அறிமுகமும் ஆதிக்கமும் ஒன்று. மற்றது சினிமா உலகிற்கு நுழைய நாடக மேடை முதல் வாய்ப்பாக அமைந்துள்ளதுமாகும். இன்றைய பிரபல இந்திய நடிகர், டைரக்டர்கள் நாடக மேடையிலிருந்து திரையுலகுக்கு வந்திருப்பதைக் காணலாம்.

அ. ந. கந்தசாமி ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீளா நோய் வாய்ப்பட்டு இறந்தவேளை அன்னாரது ஆக்கங்கள் சிலவற்றையாவது வெளியிட வேண்டும் என முயன்றவர்களில் நானும் ஒருவன். அம்முயற்சிகள் யாவும் பல காரணங்களால் பயனற்றுப் போயின. 1, 16 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அன்னுரை நினைவு கூரத் தக்கதாக நூல் வெளியிட வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. நாட்டில் கலை, இலக்கிய விழிப்பின் ஒர் அம்சம் என்றே கொள்ள வேண்டும்.

இச் சந்தர்ப்பத்தில் "மதமாற்றம்" என்ற இந் நாடகத்தை நானே முதலில் நினைவுபடுத்தினேன். அதற்குப் பல காரணங்கள்.

கந்தசாமியைப் பற்றி அறிந்திருந்து, ஒரு சிலவற்றை மட்டும் படித்த காலத்தில் இந்நாடகத்தை மேடையில் ஒரு தடவை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவ்வேளையே கந்தசாமியின் அறிவையும் திறமையையும் என்னால் காண முடிந்தது. ஆயினும் அன்னருடன் நெருங்கிப் பழகும் காலம் அவரது வாழ்வின் கடைசி இரண்டு ஆண்டுகளிலேயே எனக்கு ஏற்பட்டது.

அவரது அறிவும் திறமையும் பலதுறைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். முதலாளித்துவ சமூக அமைப்பில் பேசுவது, பிறருடன் பழகி வெற்றி கொள்வது, பண்டங்களை விற்பனை செய்யும் விவேகம் ஆகியவை பற்றி மேல்நாடுகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அத்தகைய நூல் ஒன்றையும் கந்தசாமி எழுதி என்னிடம் தந்தார். அவரின் சிறப்பான வெளியீடாக ‘வெற்றியின் இரகசியங்கள்" என்ற அந்நூலை தமிழ் நாட்டில் வெளியிட்டேன். ஆயினும் விற்பனையில் வெற்றி கிட்டவில்லை. இன்னும் எமது சமூகம் முதலாளித்துவ நிலையை அடையவில்லை என ஆறுதலடைந்தேன். இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயி னும் "மத மாற்றம்" என்ற இந் நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை. மேடை நாடகக் காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்றார் என்று தெரியவில்லை. இம் முதல் நாடகத்திலேயே அச் சிறப்பைக் காணக் கூடியதாக இருந்தது.

உரையாடல்களையும் கதையையும் நகர்த்திச் செல்லும் முறையில் பார்வையாளரை ஈர்த்துச் செல்லக்கூடிய உத்தியைக் கையாண்டுள்ளார். அற்புதங்களை வைத்தே மதம் வலுப்பெற முயல்கிறது. எதிர் பாராத நிகழ்ச்சிகளையும் மதவாதிகள் அற்புதமாக்கிவிடுவர். கதாநாயகி தோழியிடம் செல்லும்வேளை பத்திரிகையில் தன் தோழி பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு தோழியும் கணவரும் வழிபடுகின்றனர். அவ்வேளை தோழியைக் கண்டதும் 'தேவனின் அற்புதம்" எனக்கூறி அவளையும் நம்பவைக்கின்றனர்.

சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம்.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும்.
கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை.

பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம்.

'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார்,

நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில்.

இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது. இத்தகைய நாடகங்கள் அரிதே. அதனலேயே இந் நாடகத்தை வெளியிட வேண்டும் எனவும் நான் விரும்பினேன். இந் நாடகத்தை வெளியிட முன்வந்த எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், அதற்கு உதவியவர்களும் பாராட்டுக்குரியவர்.