நூல்:  கருணாநிதி என்ன கடவுளா?வெங்கட் சாமிநாதன்தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சில மாதங்களாகிவிட்டன. கடந்த பத்து வருடங்களாக இடைவிடாது கேட்டு வந்த இரைச்சல், நாமாவளி தமிழினத் தலைவா போற்றி, கலைஞரே போற்றி, முத்தமிழ்க் காவலரே போற்றி, இன்னும் எத்தனை போற்றிகளோ, மாதிரிக்கு ஒன்றிரண்டு தந்தால் போதாதா, அந்த இரைச்சல், தமிழகம் முழுதும் கேட்டு வந்த அந்த இரைச்சல் இப்போது கழகக் கூட்டங்களோடு, அறிவாலயத்தோடு முடங்கிக் கிடக்கிறது. முன்னரோ கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதிமுகவினரும் தவிர மற்ற எல்லோரும் ஏகோபித்து எழுப்பிய இரைச்சல் இதன் உச்ச கட்டம், காமராஜர் ஒரு சகாப்தம் என்று காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கோபண்ணா, என்னும்  காங்கிரஸ் காரர், அந்த புத்தகத்தை  வெளியிட கருணாநிதியை விட வேறு தகுதியானவர் இல்லை என்று தேர்ந்தது தான். காமராஜரை, கருணாநிதியைவிட கேவலமாகப் பேசிய இன்னொரு தமிழக அரசியல் தலைவர் இருப்பாரா தெரியவில்லை. இருப்பினும் கோபண்ணாவுக்கு காமராஜர் விருதும் கலைஞர் கையால் வழங்கப்பட்டது கோபண்ணாவின் புதிய விசுவாசத்துக்கு பரிசாக. பீடர் அல்ஃபான்ஸ் என்ன, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு என்ன எல்லோரும் அவர்கள் சார்ந்த கட்சியின் கொள்கையில் பாரம்பரியத்தில் கருணாநிதிக்கு எதிர் முனைகளானாலும், கருணாநிதியின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் தான்.

இது ஒரு கட்சியோடு நின்றதென்றாலும் அது மிக மோசமான அரசியல் பண்பாடு தான். ஆனால் இது தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்கள், சினிமா, பத்திரிகைத் துறைகள், அறிஞர் என்று கருதப்படுபவர் கூட்டம், காங்கிரஸ் இன்னும் மற்றக் கட்சிகள் என எங்கும் பரவலாக இந்தத் துதி பாடும் கலாசாரம் பரவிக் கிடந்தது. இன்றும் அதன் இரைச்சல் கட்சிக்கு வெளியே கேட்கவில்லையே தவிர, இன்னமும் அந்த கலாசாரம் அழிந்து விடவில்லை. இந்தக் கலாசாரத்தின் மிக மோசமான வெளிப்டு, இந்தத் துதிபாடலகள் தலைவருக்கு வேண்டியிருந்தது, அதை அவர் வெகுவாக ரசித்தார் என்பது. இதைச் செம்மொழி மாநாடு நடந்த போது அம்மாநாடு துதிபாடிகள் மாநாடானதை எதிர்த்து தமிழ் நாடு அறிவுலகத்திடமிருந்து மேல்லிய முணுமுணுப்பு கூட எழவில்லை.

தேர்தல் காலத்தில் எதிரணியில் இருக்க நேர்ந்து விட்டாலும் கட்சி சார்ந்து எதிர்ப் பிரசாரம் நடந்தாலும், அதிலும் கட்சி சாடப்படுமேயானாலும் தலைமைகள் அல்ல. அதுவும் ஒரு சிலர் தான், ஈ.வி எஸ் இளங்கோவன் போன்றோருடன் முடிந்து விடுகிறது. ஆனால் நான் அரசியல் பிரசாரக் கூட்டங்களில் பேசப்படுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. “ஒத்து ஊதுகிறவர்” என்று ஒரு நாள் சொன்னதை தில்லி தாக்கீது வந்த மறுநாள் கோபாலபுரம் போய், “ஐயா, வணக்கம்,” சொல்லி அழித்து விடலாம். கருணாநிதியும் இன்று சொல்லும் ”என் அரிய நண்பர்”, எத்தனை நாளைக்கு அரிய நண்பராக இருப்பார் என்று சொல்வதற்கில்லை. ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை “என் அருமை நண்பர்” என்று சொன்னதும் நமக்குப் புரிந்ததில்லை, பின் புலிகளும் அவர்தம் தலைவரும் கொல்லப்பட்டதும் “என் அருமை நண்பருக்காக “ தமிழினத் தலைவர் எப்போதும் எழுதும் ஒரு இரங்கல் கவிதை கூட முரசொலியில் வராது போனது ஏன் என்பதை கலைஞரின் எண்ணங்களுக்கும் எழுத்துக்கும், செயலுக்கும் .இடையேயான உறவை அறிந்தவர்கள் ஆச்சரியப்படமாட்டார்கள்.

கருணாநிதியின், திமுகவினது மட்டுமல்ல, பொதுவாகவே திராவிட கட்சிகளின் நிலைப்பாடு நமக்குத் தெரியும். வடவர் என்ன, இத்தாலிய ஸ்திரீக்கும் தெண்டனிட அவர்கள் தயார்தான். வேறு எந்த பிராந்திய காங்கிரஸ் காரருக்கும் அவர் சோனியாஜி தான். அது போதும்.

ஆனால் தமிழ் நாடு காங்கிரஸ் காலில் விழும் அன்னை சோனியாவோ, கருணாநிதியின் பாசப் பெருக்கில் விளைந்த சொக்கத் தங்கம் சோனியாவோ இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் போல வடநாட்டாரும் மாதாஜி என்று சொல்ல ஆரம்பித்தால் அது ஜம்மு/கஷ்மீரில் எழுந்தருளியிருக்கும்  வைஷ்ணைவ் தேவியைத் தான் குறிக்குமே ஒழிய 10 ஜன்பத்தில் எழுந்தருளியிருக்கும் இத்தாலிய தேவதையை அல்ல. ஏன் இத்தகைய அதள பாதாள வீழ்ச்சி? அன்னை வேளாங்கண்ணியை தமிழ் நாடு அறியும் .அன்னை சோனியாவை தமிழ் நாடு காங்கிரஸ் தான் அறியும். வேறு எந்த மாநில காங்கிரஸுக்கும் அதிகம் போனால் அவர் காங்கிரஸ் மேலிடம் தான்.

நான் சொல்ல வருவது, சுய கௌரவம், தன் மானம், கருத்து சுதந்திரம், சுய சிந்தனை என்பது போன்ற சமாசாரங்கள் மிக அரிதாகிக்கொண்டு வருகின்றன, நம் அரசியல் தளத்தில் மட்டுமல்ல, அறிவார்த்த தளம் எதிலும். தன்மானம் தன்மானம் என்று கோஷங்கள் எழுப்பியே எழுபது வருடகாலம் அரசியல் வாழ்க்கை நடத்தியவர்களுக்கே இப்போது தன் மானம் சிந்திக்க வேண்டாத பொருளாகிவிட்ட போது, காங்கிரஸ் காரர்கள் ஏன் அதை நினைத்து அவஸ்தைப் பட வேண்டும்?

நிச்சயமாக கடந்த ஒரு நூற்றாண்டு தமிழ் நாட்டு வரலாற்றை மாற்றிய தலைவர்கள் உண்டு. அவர்களில் ராஜாஜி, ஈ.வே.ரா காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோருடன், கருணாநிதி, யும் உண்டு. ஜெயலலிதாவும் உண்டு. யாருக்கு எரிச்சலாக இருந்தாலும் சரி. ஆமாம்.. ஜெயலலிதாவும். தான். ஈ.வே.ரா, அண்ணாதுரை எம்.ஜிஆர் போல ஜெயலலிதாவும் கடுமையான எதிர் நீச்சலில் தன்னை ஸ்தாபித்துக்கொண்டவர். எனவே யாருடைய விருப்பு வெறுப்புக்கும் ஏற்ப யாரையும் இல்லை யென்றாக்கிவிட முடியாது. ஆனால், இவர்கள் எவர் பற்றியும் ஒரு நேர்மையும் உண்மையுமான பாரபட்சமில்லாத வரலாறு எழுதப்படவில்லை. ராஜாஜியைப் பற்றி ஆங்கிலத்தில் உண்டு தான். அது தமிழர் அல்லாதவரால் தமிழ் நாட்டு அரசியல் வியாதியால் பீடிக்கப் படாத மனிதர்களால் எழுதப்பட்டது..

தமிழில் அப்படி பாரபட்சமற்று, பயமற்று, ஸ்தோத்திர வியாதியற்று, தன் மனதில் பட்டதை, தன் அனுபவங்களை எழுதியுள்ள ஒரே மனிதர் கோவை அய்யா முத்து. அவர் ஈவேராவுடனும், மகாத்மா காந்தியுடனும், ராஜாஜியுடனும் அரசியல் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டவர். நாற்பது வருஷங்கள் இருக்கும் கிட்டத்தட்ட. அவரது சுயசரிதம் படித்து. அவசர அவசரமாக முழுதும் படிக்கமுடியாது கடன் கொடுத்த நண்பரிடம் அதைத் திருப்பிக்கொடுக்க வேண்டி வந்து விட்ட நிலை. .

இன்றைய கால கட்டத்தின் பஜனைக் கூட்டத்திடம் அவரவர் வணங்கும் இஷ்ட தெய்வங்களைப் பற்றிய ஒரு மாறுபட்ட உண்மையை எதிர்கொள்ள வைத்துவிட முடியாது. எல்லோருக்கும் கட்சி சார்ந்த விசுவாசம். பயம். கட்சி சாராதார் சலுகைகளையும் பாதுகாப்பையும் எதிர்நோக்கும், கோஷங்களையே விழுங்கி வாழும் அறிஞர் எனப் படும் ஜீவன்கள்.

இத்தகைய ஒரு வெறுப்பேற்றும் சூழலில், வித்தியாசமான ஒரு குரலைக் கேட்க நேர்ந்ததில் எனக்கு கொஞ்சம் நிம்மதியான சுவாசம் விட முடிகிறது. பழ. கருப்பையா வின் கருணாநிதி என்ன கடவுளா? என்னும் அவ்வப்போது, தினமணி, துக்ளக் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இப்போது அவர் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராகக் காட்சியளிக்கிறார் தான். சட்டமன்ற செய்தித் தொகுப்பு பார்க்கும் போதெல்லாம் அவரும் காட்சி தருகிறார் தான். ஆனால் அவர் பேசிக் கேட்டதில்லை. திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தவிர மற்ற எல்லாரும், மாண்புமிகு மந்திரிகளிலிருந்து சாதாரண உறுப்பினர்கள் வரை எல்லோருமே முதலில், இதய தெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்களின் பொற்பாதங்களை” வணங்கித் தான் தாம் பேச வந்த விஷயங்களைப் பேசுகிறார்கள். இப்படியான ஸ்தோத்திரங்களோடான தொடக்கத்தை அவரகள் பேசும் ஒவ்வொரு நாளும், பேசும் ஒவ்வொரு முறையும். எனக்கு இதை அனுதினமும் கேட்க வெறுப்பாகத்தான் இருக்கிறது. எனக்கென்ன, யாருக்குமே தான். .கலைஞர் போற்றி, முத்தமிழ் காவலர் போற்றிக்குப் பதிலாக, இதயதெய்வம் போற்றி, புரட்சிதலைவி போற்றி, அம்மா போற்றி, என்று துதித்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்த சரீரம் விழுந்து தான் கிடக்கிறது. வரலாற்றுப் பெரும் நாயகர்களான நேரு, பண்டிட்ஜி தான். ராஜாஜி தான். அதற்கு மேல் எதுவும் தேவையில்லை. நம் தமிழ் நாட்டில் தான் அரசியல் தலைவர்கள் ஆதீனங்களாகி விட்டார்கள். பாலாபிஷேகமும் கற்பூர ஆராதனையும் தான் நடக்கவில்லை.
ஆமாம், இதையெல்லாம் இழந்துவிட்டோமே, பகுத்தறிவுக் கொள்கையை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாமோ, தமிழ் நாடு முழுதும் தெருமுனையெல்லாம் தன் உருவச் சிலைகளையுமல்லாவா இழந்துவிட்டேன், என்று இதயம் வருந்தும் கண்கள் பனிக்கும் தலைமைகள் இருக்கக் கூடும்.

இதையெலாம் மீறி, ஒரு குரல் தனித்து ஒலிக்கிறதென்றால் சந்தோஷமாகத்தான்  இருக்கிறது. பழ. கருப்பையாவும் அரசியல் வாதிதான். ஆனால் தன் கட்சிப் பத்திரிகை மாத்திரம் படிப்பவர் இல்லை. இளம் வயதில் காங்கிரஸில் சேர்ந்தவர். “காமராசரால் பண்படுத்தப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டவராக தன் காங்கிரஸ் ஆரம்பங்களைச் சொல்கிறார். ”காமராசர் மறைவுக்குப் பிறகு நாடு வெறுமை அடைந்துவிட்டது,

மயில்கள் குதித்தாடிய நாட்டில் வான் கோழிகள் கொக்கரிக்கத் தொடங்கிவிட்டன” என்கிறார். அவர் மிகப் பெருமையுடன், பாராட்டிப் பேசுவது காமராஜரையும், கக்கனையும் தான். வெற்றுத் தோத்திரங்களால் அல்ல. அவர் பேசிச்சொல்லும்போது அதற்கான காரணங்களையும் வரலாற்றையும் சொல்லித் தான் செல்கிறார். ராஜாஜியை இன்னும் நினைவில் வைத்திருக்கும், அவரது வரலாற்றுச் சிறப்பையும் குணநலன்களையும் போற்றும், மற்ற கட்சியனரை விட்டுவிடுவோம், காங்கிரஸ் காரர் யாரும் உண்டா? “இராசாசிக்குப் பிறகு நாடாளுவது எளிதில்லை. பரிந்துரைப் போரின் தலைமைச்செயலகப் படையெடுப்பை நிறுத்தியவர், 2000 ஆண்டு குடியைக் குற்றம் என அறிவித்தவர்,, சிறந்த படிப்பாளி, அறிவாளி, இலக்கியவாதி என்றெல்லாம் நிறைய சொல்லிக்கொண்டு செல்லும் கருப்பையா அந்த இடத்தில்  ராஜாஜியைக் கீழிறக்கி அந்த இடத்தில் உடகார காமராஜருக்கு எத்தனை மனத்திடம் வேண்டும்? என்று வியக்கிறார்.

காமராஜரிடமும் அவருக்கு பக்தி தான். பெரியார் ஈ.வே.ரா விடமும் தான். இருப்பினும் குறை காண்கிறார். சொல்லவும் செய்கிறார். ராஜாஜியிடம் ஈ.வே.ராவுக்கு இருபதுகளிலிருந்து தொடங்கும் ஜாதிப் பகையும் அரசியல் பகையும் உலகம் அறிந்தது. இருப்பினும் மணியைம்மையைத் திருமணம் புரிந்துகொள்ள ராஜாஜியிடம் யோசனை கேட்கிறார். ஈ.வே.ராவின் பகையையும் மறந்து, திருமணம் வேண்டாம். உலகம் உங்களைக் கேலி செய்யும். உங்கள் பொது வாழ்க்கை நாசமாகும் என்று ராஜாஜி இடித்துரைத்ததாகவும் ஆனால் ஈ.வே.ரா. அதையும் மீறிச் செயல்பட்டதாகவும். கருப்பையா சொல்கிறார்., ராஜாஜியையும் ஈ.வே.ரா வையும் நன்கறிந்த நாம் கருப்பையா சொல்வதே நடந்திருக்க வேண்டும் என்று நம்பலாம். ஆனால் ராஜாஜியின் யோசனையில் தான் இந்தத் திருமணம் நடந்ததாக நம்பிய கழகத் தொண்டர்கள், தலைவர்கள் அனைவரும் ராஜாஜியைப் பழித்தனர். இங்கே கருப்பையா சொல்கிறார்: பெரியாரே முன் வந்து  உண்மையைச் சொல்லியிருக்கவேண்டும். தான் செய்த குற்றத்திற்கு ராஜாஜியைப் பழி சுமக்கச் செய்தது நியாயமில்லை. ஆனால் ராஜாஜியின் பெருந்தன்மை. உண்மை தன்னை நிலைநாட்டிக் கொள்ளும் என்று கடைசி வரை மௌனம் சாதித்தது என்கிறார். தான் மதிக்கும் இரு தலைவரிடமும் குணமும் குற்றமும் கண்டு அதைச் சொல்லும் குணமும் கருப்பையா என்னும் அரசியல் வாதியிடம்  இருப்பது இன்றைய தமிழ் நாட்டில் ஒர் அரிய அதிசயம். இந்த அரிய விவரம் கடைசியில் தெரிய வந்தது வீரமணியிடமிருந்து என்கிறார் கருப்பையா. எங்கே என்ற விவரம் இல்லை. ஏன் வீரமணி அதை வெளியிட்டார் என்ற விவரமும் இல்லை.

தன் தலைவரே பழிக்கும் ஒரு பார்ப்பனத் தலைவரைப் பழியிலிருந்து காப்பாற்றி திரும்ப அப்பழியைத் தன் தலைவர் மேலேயே சுமத்தும் செயலை ஏன் வீரமணி செய்தார்? அதுமட்டுமல்ல. பாப்பன சமூகத்தையே அழிக்க உருவாக்கப்பட்ட திராவிட கழகத்தை உடைத்து அதன் ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கி அரசையும் கைப்பற்றி, தான் ஒரு பார்ப்பனப் பெண்தான் என்று சட்டமன்றத்திலேயே முழுங்கும் ஜெயலலிதாவை “சமூக நீதி காத்த வீராங்கணை”  என்று பாராட்டிய வீரமணி. இது திராவிட இயக்கத்தையே தலை கீழாக நிறக வைத்துக் கேலி செய்யும் காரியமல்லவா?

”மீண்டும் பார்ப்பனத் தலைமை தொடங்கிவிட்டது” என்று கருவிய கருணாநிதி, சங்கராச்சாரியாரிடம் அதிகாரம் இருப்பின் அவருக்குப் பாதபூசை செய்து அவருடைய கால்களைக் கழுவி அதைத் தீர்த்தமென்று தன் தலையில் தெளித்துக்கொள்ளத் தயங்காதவர் கருணாநிதி” என்கிறார் கருப்பையா (ப. 16/17) இது வெற்றுப் பேச்சு இல்லை. இன்று சோனியா காந்தி கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் ஆகிவிட்டதை நினைவு கொள்ளலாம். “ஆதி சங்கரர் மொழியில் சொன்னால், முதலாம் திராவிட சிசு ஞான சம்பந்தர். இரண்டாம் திராவிட சிசு செயலலிதா (ப.17) என்கிறார் கருப்பையா.

சாதாரணமாக இன்று தமிழ் நாட்டில் உலவும் அரசியல் வாதிகளைப் போல பாராட்டும், வசையும் அர்த்தமற்று, கட்சி சார்ந்து ;பொழிபவர் இல்லை கருப்பையா. அவருக்கு என ஒரு பார்வை உண்டு அது கட்சி சார்ந்து இருக்கவில்லை. அந்தப் பார்வையின் பின் நீண்ட அனுபவமும் சிந்தனையும் உண்டு.  கக்கனைப் பற்றி மிக விரிவாக தன் அனுபவம் சார்ந்தும் மிகுந்த பரவசத்தோடும் எழுதுகிறார்:

“அந்தணர் என்போர் அறவோர்” என்று வள்ளுவனை நினைவுறுத்திச் சொல்கிறார்:

”மைய அமைச்சர் அ. ராசாவும், உயர் நீதி மன்ற நீதிபதி தினகரனும் தங்களின் பிறப்பால் அல்ல, வாழ்க்கை முறையால் கீழானவர்கள் தான். ஆனால் கக்கன் மேல்மகன். கக்கன் ஓர் அந்தணர்” என்று முடிக்கிறார் கருப்பையா (ப.101)

இதே போல முத்துராமலிங்கத் தேவரைப்பற்றி எழுதும் போதும் அவர் மிகுந்த பரவசத்தோடு தன் காரணங்களை அடுக்கிப் பாராட்டுகிறார் அவர் பாராட்டை கருப்பையா மதிக்கும் பெரியாரோ, காமராஜரோ விரும்பியிருக்க மாட்டார்கள். ”ஆரிய நாகரீகம் வருவதற்கு முன்பே தமிழனிடம் இறை வழிபாடு இருக்கவில்லையா என்ற தேவரின் கேள்விக்கு பெரியாரிடம் பதில் இல்லை,” என்று கருப்பையாவால் எழுதமுடிகிறது. இதை எந்த திராவிட இயக்க கட்சி தலைவரும் தொண்டரும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள் இன்னொரு இடத்தில் எழுதுகிறார்:

“தி.மு.க. என்ன சங்கரமடமா?” என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி. சங்கர மடத்தில் ஒருவர் நியமனம் பெற அவர் “ஸ்மார்த்த பிராமணராக” இருக்கவேண்டும். தி.மு.க.வில் நியமனம் பெற, கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்கவேண்டும் என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆகமுடியுமா? (ப.67)

“அண்ணா இனித் தேறமாட்டார் என்று தெரிந்து   அன்ணா மரணப் படுக்கியிலிருக்கும்போதே அன்ணாவின் நாற்காலியைத் தனக்காக்கிகொள்ள .ஆரம்ப வேலைகளைத் தொடங்கியவர் (கண்டதும் கேட்டதும், நாவலர் ப. 476). எம்.ஜி.ஆரின் ஆதரவைப் பெற அவர் வீட்டுக்குப் பல முறை படையெடுத்ததும், நாவலரிடம் பெரும்பாலோர் தன்னையே தலைவராக்க விரும்ப்வதாகவும் ஆனால் தான் நாவலரைத் தான் முதல்வராகக்வேண்டும் என்று சொன்னதாகவும் ஒரு பொய் சொல்லி அவரை ஏமாற்றி செயல்படாது வைத்தும் திரைக்குப் பின் செய்த சதி வேலை களையெல்லாம் இருடடிப்பு செய்து தான் முதல்வர் பதவியைப் பெற்றதை நாலே வரிகளில் தன் நெஞ்சுக்கு நீதியில் “சட்டமன்றத் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று நாவலர் அறிவித்தார்” என்று தான் செய்த அசிங்கங்களையெல்லாம் மூடி மறைத்தார் கருணாநிதி என்ற விவரங்களை அவ்வளவாகப் பிரபலம் அடையாத நாவலரின் கண்டதும் கேட்டதும் சுயசரிதத்திலிருந்த் எடுத்துத் தருகிறார் கருப்பையா(ப.71-73)

இப்படி தன் அரசியல் வாழ்க்கையில் பகடைக் காய்களை நகர்த்தி வெற்றி பெற்றதில் கருணாநிதியின் சாமர்த்தியமும் வாக்கு சாதுர்யமும் வேறு எந்தத் தலைவருக்கும் திராவிட இயாக்கத்தின் எந்தக் கட்சியிலும் இருந்ததில்லை. ஆனால் இது எதனையும் அவரது “நெஞ்சுக்கு நீதி”யில் பார்க்க முடியாது. கருணாநிதியால் பயங்கர தணிக்கைக்குள்ளான எழுத்து அது.

இக்கட்டுரைத் தொகுப்பின் தலைப்பிற்கேற்ப, இதில் உள்ள கட்டுரைகளில் அதிகம் பேசப்படுவது கருணாநிதிதான் அதிகம் வெளிப்படுவது அவரது குணாதிசயங்கள் தான் அவை எத்தைகையவை என்பதை இங்கு சொல்லப்பட்ட ஒரு சில
தெளிவாகியிருக்கும். எனினும் முன் சொன்னது போல கருப்பையா கண்மூடி தாக்குவதுமில்லை. பாராட்டுவதுமில்லை.  அவர் பாராட்டுவதையும் தாக்குவதையும் நாம் ஏற்கலாம். ஏற்காமல் போகலாம். கருப்பையாவின் பாராட்டையும் கருனாநிதி பெறுகிறார். தை மாதத்திலிருந்து தமிழ் வருடம் தொடங்கும் என்று கருணாநிதி பிறப்பித்த அரசு ஆணை. அதற்கு கருணாநிதி மறைமலை அடிகளாரிலிருந்து ஆதரவு பெற்றாலும், கருப்பையா இன்னும் பின்னுக்குப் போகிறார்.

திருமலை நாயக்கர் காலத்தில் தான் தையிலிருந்து சித்திரைக்கு புத்தாண்டு தொடக்கம் மாற்றப்பட்டது என்கிறார் கருப்பையா (ப. 148) இதிலும் கருணாநிதியின் தடுமாற்றதைச் சுட்ட அவர் தவறுவதில்லை. செம்மொழி மாநாடு சூலையில் தொடங்கும் என்றாரே தவிர ஆனியிலிருந்து தொடங்கும் என்றா கருணாநிதி சொன்னார் என்று கேட்கிறார். (ப.149)

”நகரங்களின் அடுக்கு மாளிகைக் கட்டிடங்கள் தான் சாதியை ஒழிக்க வழிகாட்டுகின்றனவே தவிர கருணாநிதியின் சமத்துவ புரம் அல்ல, சமத்துவ புரம் எல்லாம் பெரியார் சிலையை நிறுவி அதற்கு இல்லாத தத்துவ முலாம் பூசுவது பித்தலாட்டம்” என்கிறார். கருப்பையா(ப.138)

இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். கருப்பையா தன் மனதில் பட்டதைச் சொல்கிறார். அதில் யாரையும் அவர் விடுவதில்லை. பெரியாரோ, காமராசரோ இல்லை ராசாசியோ. இப்படிப் பேசும் ஒருவரை இன்றைய தமிழ்ப்பொதுவாழ்வில் காண்பது மிக அபூர்வம்.  துருக்கியில் காலிப் பதவி இழந்துவிட்டால் காந்திக்கு என்ன? சின்னாவே அதைப் பற்றிக் கவலைப்படாத் போது? என்று காந்தியையே குற்றம் சாட்டும் ஒரு அரசியல்வாதி கருப்பையா. இன்னமும் செக்கச் சிவந்த காங்கிரஸ் ரத்தம் அவர் உடலில் ஓடுகிறது தான்.

ஈழத்தமிழர் போராட்டத்தின் போது தமிழினத் தலைவரின் நிலைப்பாட்டைச் சொல்கிறார் கருப்பையா” “ கருணாநிதியின் உயிர் நாடியோ சென்னைக் கோட்டையில். சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ சோனியாவின் கையில் .சோனியாவோ சிங்களவரின் உற்ற நண்பர், ஆகவே சோனியாவின் தோழமை இருக்கும் வரை இவர்களையெல்லாம் மதிக்கத் தேவையில்லை என்பது ராசபக்சேயின் எண்ணம்….(ப.206) ”தன் மகள் கனிமொழியை அனுப்பி சிங்களவருடன் நேசத்தை வளர்க்கும் கருணாநிதி”…(ப.207)

“ஈழத் தமிழ்னைத்தை அழிக்கத் துணைபோன துரோகத்தை மறைக்கத்தானே இந்தச் செம்மொழி மாநாடு?.....தன்னுடைய துரோகத்தை மறைக்கக் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டுக்கு உணர்ச்சியற்ற சிவத்தம்பிகள் வருவார்கள். தமிழ்த் தாய் வரமாட்டாள்! (ப.201)’

என்ற சுட்டெரிக்கிறது கருப்பையாவின் பேனா..

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகவே கருப்பையா நம்புகிறார். பிரபாகரன் செய்த மாபெரும் குற்றங்களையும் அவர் சுட்டத் தவறவில்லை. அத்தவறுகளே புலிகளின் அழிவிற்கும் காரணமாகியது. என்றும் அவருக்குத் தெரிகிறது. இருப்பினும் “உலகின் மூத்த இனம் சிந்து வெளி நாகரீகம் கண்ட இனம், தெய்வப் புலவனைப் பெற்ற இனம் நாதியற்றுப் போக இயற்கை அனுமதிக்காது (ப..217)

என்று ஒரு தர்மாவேசத்தோடு முடிக்கிறார். கருப்பையா தனித் தமிழ்ப் பிரியர். ஆங்கிலச் சொற்களும் அவருக்கு உடந்தையல்ல. தமிழரின் ஆங்கில மோகம் பற்றிச் சொல்வதோடு, காஃபியை குளம்பி என்று தான் அவர் சொல்வார். மாட்டுக்குளம்பு வடிவத்தில் இருப்பதால் அதற்குப் பெயர் குளம்பி என்று தன் ஆராய்ச்சியைச் சொல்கிறார்.  ”ஆட்கொணர்விப்பு நீதி மன்றப் பேராணை”  ( Habeus Corpus Writ) என்று சொன்னால் வண்டி ஓட்டுபவனுக்குக் கூடப் புரியுமே என்கிறார். Law of Diminishing Marginal Utility யை” குறைந்து செல் பயன் பாட்டு விதி” என்றால் தான் மாணவனுக்குப் புரியும் என்கிறார். வடசொற்களைத் தமிழ் ஏற்காது என்கிறார். தொல்காப்பியனை சாட்சியாக முன் வைக்கிறார்.  அவரது தமிழ்ப் பற்றில் கிடந்து உருக்குலைந்து போகுபவர்களில் செயலலிதாவும் தப்புவதில்லை. ராசாசியும் தப்புவதில்லை. இசுடாலின், என்று அவர் கோபத்தில் சொல்லவில்லை. கர்சன் (Curzon) பெசுகி  (Beschi) சின்னா (Jinna) என்றெல்லாம் படிக்கும் போது நமக்குத் திகைப்பு

ஏற்படலாம். பாகிசுதான், சனநாயகம், சசுவங்த் சிங், முசுலீம், குசராத்த என்றெல்லாம் படிக்கும் போது ஒரு புரிந்த புன்னகை எழலாம். ஆனால் செயலலிதா என்று அவர் எழுதுவதை அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைவி ஏற்பாரா, என்ன சொல்வார்? என்பது நமக்குத் தெரியாது. இது என் தமிழ் என்று தைரியமாக எழுதுகிறாரே, நாம் பாராட்டலாம். சாதாரணமாக அக்கட்சியனர் இதய தெய்வம் என்று சொல்லி சமாளித்துவிடுகின்றனர். பெயர் சொல்லும் நிர்ப்பந்தம் இல்லை. அப்படித்தான் புதுக்கவிதை பற்றி கருப்பையாவுக்கு இகழ்ச்சி தான். அவரோடு நான் மல்லுக்கு நிற்கப் போவதில்லை ஏனெனில் கருணாநிதியின் கவிதைகளைப் புதுக்கவிதை எனக் காண்கிறார். ”கருணாநிதி சிந்தித்து எழுதவில்லை. இடத்தை அடைக்க சொற்களைப் போட்டு நிரப்புவதாகச்” சொல்கிறார். (ப.192)

சொல்லிக்கொள்ளட்டும். புதுக்கவிதைக்குப் பாதிப்பில்லை. கருணாநிதி என்ன கடவுளா? பழ. கருப்பையா (கட்டுரைத் தொகுப்பு) கிழக்குப் பதிப்பகம், எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார் பேட்டை, சென்னை- 18 ப. 231. ரூ 120.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.